பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 139

58.-இதுமுதற்பதினொருகவிகளில் அத்தினாபுரியின் அமைதி வருணிக்கப்படுகிறது.  இது - அந்நகரத்துநீர்நிலைகளின் வருணனை.

அணிகொளத்தினாபுரியெனுமணங்குசெந்திருவின்
கணவனுக்கெதிர்காட்டுநீராசனங்கடுப்ப
மணமிகுத்தசெந்தாமரைமலருடன்சிறந்த 
புணரியிற்பெரும்புனலையுங்கொள்வனபொய்கை.

     (இ -ள்.) அணிகொள் - அழகைக்கொண்ட, அத்தினாபுரி எனும்
அணங்கு - அஸ்திநாபுரியென்னும் பெண், செம் திருவின் கணவனுக்கு -
சிவந்த நிறமுடைய திருமகளது கொழுநனான கிருஷ்ணமூர்த்திக்கு, எதிர்
காட்டும் - எதிரிலே காண்பிக்கிற, நீராசனம் - மங்களவாலத்தியை, கடுப்ப -
ஒடுக்கும்படி,-பொய்கை - (அந்நகரத்திலுள்ள) தடாகங்கள், - மணம் மிகுத்த
செம் தாமரை மலருடன் - வாசனையை மிகுவிக்கிற செந்தாமரை
மலர்களுடனே, சிறந்த புணரியின் பெரும்புனலையும் கொள்வன - சிறந்த
கடல்கள்போல மிக்க நீரையும் (தம்மிடத்தே) கொண்டுள்ளன; (எ - று.)

    'கொள்வன' என்பதைப் பெயராகக்கொண்டு, பொய்கைக்கு
அடைமொழியாக்கிவிட்டு, 'சிறந்த என்பதை முற்றாக்கியுரைப்பினும் அமையும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் மஞ்சள் நீரைவார்த்து அதன் நடுவில்
திருவிளக்கேற்றிவைத்து மங்களகரமாகப் பெண்கள் விசேஷகாலங்களில்
ஒருவர்க்கு ஆலத்தி யெடுத்தல், மரபு.  அங்ஙனம், பொய்கை - ஆலத்தி
தட்டையும், பொய்கையில் மிக்க நீர் - அவ்வாலத்திநீரையும்,
அந்நீரிடையிற்பூத்த செந்தாமரை மலர் - அவ்வாலத்திநீர் நடுவில் ஏற்றிய
தீபத்தையும், இப்படிப்பட்ட பொய்கையையுடைய அத்தினாபுரி -
கண்ணன்வருகையில் அவ்வாலத்தியையேந்தும் ஒரு மங்கையையும்
போலுமென வருணிக்கப் பட்டவாறு; தற்குறிப்பேற்றவணி. 'புரீ' என்பது
வடமொழியிற் பெண்பாற் சொல்லாதலால், அதனை மகளாகக் கூறியது
மிகப்பொருந்தும்.  பெண்ணுக்கு ஏற்ப அணிகொள் என்பதற்கு -
ஆபரணங்களைத்தரித்த வென்றும் உரைக்கலாம்.

    சந்திர குலத்தில் ஹஸ்தீயென்று ஓரரசன்; அவனாற் சீர்திருத்தப்பட்டமை
பற்றியும், யானைச் சேனைகளை மிகுதியாகவுடைமை பற்றியும், 'ஹஸ்திநாபுரீ'
என்று பெயர்; அது 'அத்தினாபுரி' என விகாரப்பட்டது.  நீராஜநம் -
கண்ணெச்சில் கழித்தற்கு எடுக்கப்படுவது.  கடுப்ப - தற்குறிப்பேற்ற வுருபு.
புணரி - (நதிகளோடு) புணர்வதெனக் காரணப்பெயர்; புணர்தல் - சேர்தல்;
ஆறுகளாகிய பெண்களுக்குச் சேருமிடமாகிய கடலைக் கணவனாகக் கூறுதல்,
கவி மரபு; இதனை 'நதீபதி' என்னுங் கடலின் வடமொழிப் பெயராலும் அறிக.
புணரியிற் பெரும் புனல் - கடலினும் மிக்க நீர் என்றால், ஈற்றடி -
உயர்வுநவிற்சியணியாம்.                              (118)