68.-துரியோதனனதுஅரண்மனையின் வருணனை. முன்றிலின்கணின்றிடம்பெறாவரசர்மாமுடிகள் ஒன்றொடொன்றறைந்தெற்றிமேலொளிர்பொறிசிதறிச் சென்றுசென்றுறுதிசைதொறுந்திகழ்ந்ததுசெம்பொற் குன்றெனும்படிகுருகுலநாயகன்கோயில். |
(இ -ள்.) முன்றிலின்கண் நின்று - வெளிமுற்றத்திலே நெருங்கி நின்று, இடம் பெறா - (உள்ளேசெல்லுதற்கும் அங்குவிசாலமாக நிற்றற்கும்) இடத்தைப்பெறாத, அரசர் - (புறநாட்டு) மன்னர்களது, மா முடிகள் - சிறந்த கிரீடங்கள், ஒன்றொடுஒன்று அறைந்து எற்றி - ஒன்றோடொன்று பட்டுத்தாக்கியதனால், ஒளிர் பொறி மேல் சிதறி - விளங்குகின்ற பொற்பொடிகள் ஆகாயத்திலே சிதறி, (அதனால்), சென்று சென்று உறு திசைதொறும் - (அப்பொறிகள்) போய்ப் போய்ப்பொருந்துகிற திக்குகளிலெல்லாம், செம்பொன் குன்று எனும்படி - சிவந்த பொன்மயமான மேருமலை யென்னும்படி, குருகுலம் நாயகன் கோயில் - குருவம்சத்துப் பிறந்த தலைவனான துரியோதனனது அரண்மனை, திகழ்ந்தது - விளங்கிற்று; (எ-று.) மலைபோல மிகப்பெரியதான துரியோதனனது அரண்மனையின் வாயிலினின்று அரசர்கள் கிரீடங்களின் பொற்பொடிகள் சிதறி மேலெழுந்து பல திசைகளிற் பரவுதலால், அவ்வரண்மனைபொன்மலை யென்னும்படி இருந்தது என்பதாம். ஒளிர்பொறிசிதறி என்பதற்கு - விளங்குகிற அனற்பொறிவீசுதற்கு ஒப்பான ஒளியை வீசுதலால் என்றலுமொன்று. இச்செய்யுள் - அரசர்களின் மிகுதியை விளக்கவந்த அதிசயோக்தி. மூன்றாம் அடி - முற்றுமோனை. இடம் பெறாமைக்குக் காரணம் - அரசர்கள் அளவிறந்தவராதல்; அன்றி, அரண்மனையின் இடநெருக்கமன்று. கோயில் - ராஜகிருகம். (128) 69.-கண்ணன் அந்நகரத்துத்தென்புறத்துச் சோலையில் தங்குதல். என்றிசைக்குநல்லொளிநிமிரெழின்மணிமகுடக் குன்றிசைக்கும்வண்கோபுரநீணகர்குறுகித் தென்றிசைக்குளிர்செண்பகமலர்தொறுஞ்சிறைத்தேன் நின்றிசைக்கும்வண்சோலைவாயமர்ந்தனனெடுமால். |
(இ -ள்.) என்று இசைக்கும் - என்று இவ்விதமாகச்சொல்லத்தக்க,- நல் ஒளி நிமிர் - சிறந்த ஒளிமிகுந்த, எழில் மணிமகுடம் - அழகிய இரத்தினங்களைப்பதித்த சிகரங்களையுடைய, குன்று இசைக்கும் - மலைகளையொத்த, வள்கோபுரம் - அழகிய கோபுரங்களையுடைய, நீள் நகர் - பெரிய அவ்வத்தினாபுரியை, நெடுமால் - பெருமைக்குணமுடைய வனான கண்ணபிரான்,- குறுகி - சமீபித்து, தென்திசை - (அந்நகரத்தின்) தெற்குப்பக்கத்தில்,- குளிர் செண்பகம் மலர்தொறும் சிறை தேன் நின்று இசைக்கும் வள் சோலைவாய் - குளிர்ந்த சண்பகப்பூக்களிலெல்லாம் இறகுகளையுடைய வண்டுகள் தங்கி |