ளாகியஅமிருதத்தை அள்ளியெடுத்தவன் போல, கண்களால் அருந்தினான் - (தனது) கண்களால் (கண்ணனது வடிவழகை) உண்டான்; (எ - று.) உள்ளினான் என்பதற்கு - (கண்ணன் எழுந்தருளப்பெற்ற தனது பாக்கியவிசேஷத்தை) நினைத்தானென்றும், தத்துவ அமுதை அள்ளினானென என்பதற்கு - (நித்திய இன்பமாகிய) அமிருதத்தை அள்ளியெடுத்து உண்டவன்போல வென்றும், அளியோன் என்பதற்கு - (தான்) கருணையுடையவனென்றும் உரைப்பாரு முளர். உள்ளமும் உருகினான் என்ற உம்மையை ஆக்கவும்மையாக்கி, உடம்பும் நீராயுருகி வியர்த்தா னென்க. சூடுதலென்ற வினைக்கு ஏற்ப, இணையடியை மலரென்க. கண்களால் அருந்துதல் - ஆசைதீர நன்றாக முழுவதுந் தரிசித்துத் திருப்தி பெறுதல்; "பருகுவான் போல நோக்கி" என்பதும் காண்க. இங்கு வாயின் புலத்தைக் கண்ணின் மேல் ஏற்றியது, உபசார வழக்கு. (139) 80.-விதுரன் கண்ணபிரானுக்குமுகமன் கூறுதல். முன்னமேதுயின்றருளியமுதுபயோததியோ பன்னகாதிபப்பாயலோபச்சையாலிலையோ சொன்னநால்வகைச்சுருதியோகருதிநீயெய்தற் கென்னமாதவஞ்செய்ததிச்சிறுகுடிலென்றான். |
(இ -ள்.) 'முன்னமே துயின்றருளிய முது பயோததியோ - அநாதி காலமாக (நீ) யோக நித்திரை செய்தருளப்பெற்ற பழமையாகிய திருப்பாற்கடல் தானோ? பன்னக அதிபன் பாயலோ - சர்ப்பங்களுக்குத் தலைவனான ஆதிசேஷனாகிய திருப்பள்ளிமெத்தைதானோ? பச்சை ஆல் இலையோ - பசுநிறமுள்ள ஆலிலை தானோ? சொன்ன நால்வகை சுருதியோ - (மேன்மையாகச்) சொல்லப்பட்ட நான்கு வகையான வேதந்தானோ? இ சிறு குடில் - இந்தச் சிறிய குடிசை, நீ கருதி எய்தற்கு என்ன மா தவம் செய்தது - நீ (ஒரு பொருளாகத் திருவுள்ளத்தில்) நினைத்து எழுந்தருளுதற்கு என்ன பெரிய தவத்தைச் செய்ததோ?' என்றான் - என்று (விதுரன் கண்ணனை நோக்கிப்) புகழ்ந்து கூறினான்; (எ - று.) பிரமன் முதலான சகலதேவர்களும் உட்பட யாவும் அழிந்து போகின்ற யுகாந்த காலத்தில் ஏகார்ணவமான மகாபிரளயத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தம் திருவயிற்றில் அடக்கி வைத்துக்கொண்டு சிறு குழந்தை வடிவமாய் ஆதிசேஷாம்சமானதோர் ஆலிலையின்மீது பள்ளிகொண்டு தமது மாயாஸ்வரூபமான யோக நித்திரையைக் கைக்கொண்டு திருக்கண் வளர்ந்தருளுவர். வேதங்களில் பகவானது சொரூபம் வருணிக்கப்படுதல்பற்றி அது அவனுக்கு இருப்பிடமாம். மிக்கதவஞ் செய்திருந்தாலன்றி நீ யெழுந்தருளும் பாக்கியத்தைப் பெறலாகா தாதலால், 'என்ன மாதவஞ் செய்தது' எனப்பட்டது. கண்ணன் எழுந்தருளப்பெற்ற இது கண்ணனது வாசஸ்தானமான பொருள்களுள் யாதாயினு மொன்றன் அம்சமாக இருக்குமோவென ஐயமுற்றார்; ஐயவுவமையணி. |