பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 159

கருணைசெய்தகண்ணபிரான்,- அமைத்த வாசம் நல் நீர் கொடு மஞ்சனம்
ஆடி - (விதுரனது பரிவாரங்களாற்) சித்தஞ்செய்யப்பட்ட பரிமளமுடைய நல்ல
தீர்த்தத்தால் ஸ்நானஞ்செய்து, சமைத்த பல் கறி அடிசில் தம்விருப்பினால்
அருந்தி - சமைக்கப்பட்ட பலவகைக் கறியமுதோடுகூடிய நல்லுணவைத் தமது
விருப்பத்தோடு அமுதுசெய்தருளி, உதவ - (பிறர்க்கெல்லாங்) கொடுக்க,-
(அவர்கள் உண்டு), இமைப்பு இலார் அமுது அருந்திய இயல்பு என இருந்தார்
- கண்ணிமைத்தலில்லாத தேவர்கள் அமிருதத்தையுண்ட தன்மைபோலத்
திருப்தியடைந்திருந்தார்கள்; (எ - று.)

    மஞ்சனம் - மஜ்ஜநம் என்பதன் திரிபு; நீராடுதலென்று பொருள்.
அடிசில் - அடு என்னும் பகுதியின்மேல் சில் விகுதி பெற்ற
தொழிற்பெயரென்றும், இது ஆகுபெயராய்ச் சமைக்கப்பட்ட உணவை
உணர்த்துமென்றுங் கூறுவர்.  'ஒழித்தருளினான்' என்றதற்கு ஏற்ப, தன் என
ஒருமையாகக்கூறாது, 'தம்' எனப் பன்மையாகக் கூறினது-ஒருமைப்பன்மை
மயக்கம்.  விருப்பு - விரும்பு என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
பார்வதீதேவி ஐந்து பிராயமானவுடனே சிவபிரானை மணஞ்செய்தற்குத் தவஞ்
செய்ய விரும்பியவளாய்த் தன்கருத்தைப் பெற்றோர்க்குத் தெரிவிக்க
அவர்களால் ("அன்னைகேளெம்மினீங்கி யருந்தவமாற்றற் கொத்த, தின்னதோர்
பருவ மன்றாலியாண்டுமோரைந்தே சென்ற, நின்னுடல் பொறாதாலீண்டிந்
நிலைமையைத் தவிர்தி" என்றுங்கூறிமுதலில்) மறுக்கப்பட்டதனால், அவளுக்கு
உமையென்று ஒருபெயர்; உ, மா என்பதற்கு - அம்மா வேண்டா என்று
பொருள்; இரவு - தொழிற்பெயர்; இர - பகுதி, வு - விகுதி; அவர்கள் உண்ட
உணவு தேவாமிருதம் போன்ற தென்பது, ஈற்றடியினால் விளங்கும்.

    உமைக்குநாயக னிரவொழித்த கதை:- ஒருகாலத்திலே பரமசிவன்
தன்னைப்போலவே பிரமனும் ஐந்துதலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து
மயங்குதற்கு இடமாயிருக்கிறதென்று கருதி, அவனது சிரமொன்றைக் கிள்ளி
யெடுத்துவிட அக்கபாலம் அப்படியே சிவன்கையில் ஒட்டிக்கொள்ளுதலும்,
அவன் 'இதற்கு என்செய்வது?' என்று கவலைப்பட, தேவர்களும்
முனிவர்களும் 'இப்பாவந் தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும்: என்றைக்குக்
கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையை விட்டு அகலும்' என்று
உரைக்க, சிவபிரான் பலகாலம் பலதலங்களிலுஞ் சென்று பிச்சையேற்றுக்
கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நீங்காதாக, பின்பு ஒருநாள்
பதரிகாச்சிரமத்தை யடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை
வணங்கி இரந்தபோது, அப்பெருமான் 'அக்ஷயம்' என்று பிக்ஷையிட, உடனே,
அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்பதாம்.                  (143)

84.-யாவரும் தாம்பூலம்முதலியவற்றைத் தரித்தபின்பு
கண்ணன் சிங்காதனத்தில் வீற்றிருத்தல்.

வாசநீரும்வண்சுண்ணமுமுறைமுறைவழங்கப்
பூசுறுந்தொழிற்பூசினார்சூடினார்புனைந்தார்