வீசுசாமரமிரட்டவெண்மதிக்குடைநிழற்றக் கேசவன்மணிக்கேசரித்தவிசிடைக்கிளர்ந்தான். |
(இ -ள்.) (இங்ஙனம் யாவரும் புசித்தபின்பு), - வாசம் நீரும் - நறுமணத்தையுடைய பனிநீர் கலவைச்சந்தனக்குழம்பு முதலியவற்றையும், வள் சுண்ணமும் - அழகியவாசனைப் பொடிகளையும், முறை முறை வழங்க - ஒன்றன்பின் ஒன்றாக (விதுரன்) கொடுக்க, - (அவற்றை), பூசுறும் தொழில் பூசினார் - பூசவேண்டிய வகைப்படியே (மார்பு தோள் முதலிய இடங்களிற்) பூசிக்கொண்டார்கள்; சூடினார் புனைந்தார் - (விதுரனாற் கொடுக்கப்பட்ட புஷ்பசரம் மாலை முதலியவற்றைத் தலையிற்) சூடிக்கொண்டார்கள் (உடம்பில்) தரித்துக்கொண்டார்கள்; (அப்பொழுது), - கேசவன் - கண்ணபிரான்,- வீசு சாமரம் இரட்ட - வீசுதற்கு உரிய சாமரங்களை வீசவும், வெள் மதி குடை நிழற்ற - வெண்மையான பூரண சந்திரன்போன்ற வெண்கொற்றக் குடை நிழலைச்செய்யவும்,- மணி கேசரி தவிசு இடை - இரத்தினங்களைப் பதித்துள்ள சிங்காதனத்தினிடத்திலே, கிளர்ந்தான் - விளக்கமாக வீற்றிருந்தருளினான்; (எ - று.) வாசநீர் - பனிநீர்; இதைக் கூறியது, கலவைச் சந்தனக்குழம்பு முதலியவற்றிற்கும் உபலக்ஷணம். 'பூசறுத்துழி' என்ற பாடத்திற்கு, பூசுதற்கென்று வரையறுக்கப்பட்ட இடங்களி லென்க. சாமரம் - சமரமென்னும் மானின் வால்மயிரினாற் செய்யப்பட்டது. குடைக்குப் பூர்ணசந்திரன் - வட்டவடிவிலும், வெண்ணிறத்திலும், ஒளியிலும், குளிர்ச்சி செய்தலிலும் உவமை. மதி - (யாவராலும்) மதிக்கப்படுவதெனக் காரணப்பெயர். கேசவனென்னும் வடமொழித் திருநாமத்துக்கு - பிரமனையும் உருத்திரனையுந் தன் அங்கத்திற்கொண்டவனென்றும், (க - பிரமன். ஈச - சிவன்), அழகிய தலைமயிர்களையுடையவனென்றும், கேசியென்னும் அசுரனைக் கொன்றவனென்றும் பொருள்கள் கூறப்படும். கேஸரீ - பிடரிமயிர்களையுடையதென்று பொருள்; ஆண்சிங்கம்: கேஸரம் - பிடரிமயிர். (144) 85.-சூரியாஸ்தமன வருணனை. ஞானகஞ்சுகவிதுரன்வாழ்மனையினாயகனும் போனகம்பரிவுடனுகர்ந்திருந்தவப்பொழுதிற் றானுமேருவுக்கப்புறத்தவ்வமுதருந்தப் பானுவும்பெருங்குடதிசைப்பரவையிற்படிந்தான். |
(இ -ள்.) ஞானம் - தத்துவஞானமாகிய, கஞ்சுகம் - கவசத்தைத் தரித்த, விதுரன் -, வாழ் - வாசஞ்செய்கின்ற, மனையின் - திருமாளிகையிலே, நாயகனும் - (எல்லாவுயிர்க்குந்) தலைவனான கண்ணபிரானும்,- போனகம் - உணவை, பரிவுடன் - (விதுரன் பக்கல்) அன்புடனே, நுகர்ந்து - அமுது செய்து, இருந்த - வீற்றிருந்த, அ பொழுதில் - அந்தச்சமயத்திலே,- பானுவும் - சூரியனும், - தானும்-, மேருவுக்கு அப்புறத்து அ அமுது அருந்த - மகாமேருகிரிக்கு அந்தப்புறத்திலே (சென்று) அப்படிப்பட்ட தேவாமிருதத்தை |