அவ்வத்தினாபுரியின் பரந்த இடமானது, - கலந்த தாமரைதடம் எலாம் குவிந்ததுகண்டு மலர்ந்த தாமரை வாவிபோன்றது - பொருந்தின தாமரைமலர்களையுடைய தடாகங்களெல்லாம் (அப்பொழுது அத்தாமரைமலர்) குவியப்பெற்றதைப் பார்த்துத் தான் மலர்ந்ததொரு தாமரைத் தடாகத்தை யொத்தது; (எ - று.) நகர்வட்டமாகிய தாமரை வாவிக்கு - பலவகை வாத்திய கோஷத்தைப் பலவகைப் பறவை யொலியாகவும், சங்கங்களை நீர்வாழுயிர்களாகவும், மகளிரை நீரரமாதர் அல்லது நீர்விளையாடும் பெண்களாகவும், திருவிளக்குக்களைத் தாமரைமலர்களாகவுங் கொள்க. இயற்கையான தாமரைத்தடாகம் சூரியாஸ்தமனத்திற் பூவொடுங்கினதைப் பார்த்து அப்பொழுதுதான் பூப்பூத்ததொரு செயற்கைத்தாமரைத் தடாகத்தைப் போன்றது. விளக்கொளியும் ஒலியும் அமைந்த நகரம் என வருணித்ததனால், இது - ஏதுத்தற்குறிப்பேற்றவுவமையணி. முதலடியிற் கூறினது, அந்தியில் வாத்தியம்முழங்கப்படுதலை. மங்கலமென்பதைச் சங்கோடுங் கூட்டுக. மிலைந்த பூங்குழல், கலந்த தாமரைத் தடம், மலர்ந்த தாமரை வாவி இவை - வடமொழிநடை; பூ மிலைந்தகுழலென்றும், தாமரைகலந்ததடமென்றும், தாமரை மலர்ந்த வாவியென்றுங் கருத்து. மூன்றாமடியில், தடமெலாங்கலந்ததாமரை குவிந்தது கண்டு என்றும் இயைக்கலாம். விளக்கு - (பொருள்களை) விளங்கச் செய்வது; கருத்தாப்பொருள்விகுதி புணர்ந்துகெட்ட காரணக்குறியென்றாவது முதனிலைதிரிந்த தொழிலாகுபெயரென்றாவது கொள்க. "தணிமலர்த் திருமகள்தயங்கு மாளிகை, இணரொளி பரப்பிநின்றிருள் துரப்பன, திணிசுடர் நெய்யுடைத்தீவிளக்கமோ, மணிவிளக்கல்லனமகளிர்மேனியே" எனக்கம்பர் கூறியபடி மகளிர் மேனியாகியவிளக்கும் இரத்தினவிளக்கும் உண்மையால், அவற்றை யொழித்து, நெய்யுடைத்தீ விளக்கமென்றற்கு, 'மெய் விளக்கு' என்றார்; இனி, வனிதையர் மெய்விளக்கெடுப்ப என்பதற்கு - மகளிர் தமது பளபளக்கும் உடம்பாகிய விளக்கை வெளிக்காட்ட என்றும், மகளிர் தமது உடம்பையும் விளக்கையும் காட்டுதலும் ஏந்துதலுஞ் செய்ய என்றும் உரைப்பாருமுளர். நகர்வட்டம் - வட்டவடிவமான நகரமென்றுமாம்.(149) 90.-இதுவும், அடுத்தகவியும் -குளகம்; விதுரன் கண்ணனை வணங்கி எழுந்தருளிய காரணத்தை வினாவுதல். உரகபுங்கவன்மணிமுடியொப்பனதீபம் இருமருங்கினுமாயிரமாயிரமேந்த அரிசுமந்தபேராசனத்தழகுடனிருந்த புரவலன்றனைப்புண்ணியவிதுரனும்போற்றி. |
(இ -ள்.) உரக புங்கவன் - பாம்புகட்குத் தலைவனாகிய ஆதிசேஷனது, மணி முடி - மாணிக்கத்தையுடைய சிரங்களை, ஒப்பன - ஒத்துவிளங்குவனவாகிய, தீபம் - திருவிளக்குக்களை, இருமருங்கினும் - இரண்டுபக்கத்திலும், ஆயிரம் ஆயிரம் ஏந்த - பல ஆயிரக்கணக்காக (ப் பரிவாரங்கள்) எடுத்து நிற்க, அரி சுமந்த பேர் ஆசனத்து - |