95.-கண்ணன் 'அரசுகொடாமைஉலகவியல்பே' என்றல். விரைந்துபாய்பரிமன்னவரிதம்படமெலிவுற் றிரந்துவேண்டினுங்கிளைஞருக்கொருபொருளீயார் பரந்தபோரினிலெதிர்த்தவர்படப்படப்பகழி துரந்தபோதவர்க்குதவுவர்சொன்னவையெல்லாம். |
(இ -ள்.) விரைந்து பாய் பரி மன்னவர் - துரிதப்பட்டுப் பாய்ந்து செல்லுகிற குதிரைகளையுடைய அரசர்கள்,- மெலிவுஉற்று இதம்பட இரந்து வேண்டினும் - (உறவினர்) தளர்ச்சியடைந்து இனிமைபொருந்த (த் தம்மை) யாசித்துப் பிரார்த்தித்துக்கேட்டாலும், கிளைஞருக்கு - அவ்வுறவினர்க்கு, ஒரு பொருள் ஈயார் - சிறிது பொருளையுங் கொடுக்கமாட்டார்கள்; அவர் - அவ்வுறவினர்களே, எதிர்த்து - (தம்மை) எதிரிட்டு, பரந்த போரினில் - மிக்க யுத்தத்திலே, பட பட - (தம்மீது) மேன்மேற் படும்படி, பகழி - அம்புகளை, துரந்தபோது - பிரயோகித்தபொழுது, அவர்க்கு - அவர்களுக்கு, சொன்னவை எல்லாம் - (அவர்கள்) சொன்ன பொருள்களை யெல்லாம், உதவுவர் - கொடுத்திடுவார்கள்; (எ - று.) - இதுவும், அடுத்த கவியும் - ஒரு தொடர். இதுஉலகத்திற் பெரும்பான்மையான இயற்கையை மன்னவர் மேல் ஏற்றிக்கூறியது. உறவினர்கள் இரந்துகேட்டால் கொடுப்பதில்லை; அவர்கள் தங்கட்கு அம்புகளால் இரணங்கொடுத்தால் கேட்டவை கொடுப்பார்கள் என்ற இக்கருத்தில் மாற்றுநிலையணிகாண்க. "பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில், உற்றா ருகந்தாரென வேண்டார் - மற்றோர், இரணங் கொடுத்தாலிடுவ ரிடாரே, சரணங் கொடுத்தாலுந் தாம்" என்ற செய்யுளும் இக்கருத்துக் கொண்டதே. படப்பட - அடுக்கு. இடைவிடாமைப் பொருளது. எதிர்த்தவர் படப்பட - எதிர்த்தவர்கள் மிகுதியாக அழியும்படி யென்றுமாம். இனி, எதிர்த்தவர் துரந்தபோது என இயைத்து உரைத்தலுமாம். (155) 96.-கண்ணபிரான்கண்வளர்தல். என்றுபாரினிலியற்கையும்விதுரனுக்கியம்பி வென்றுபோர்கெழுநேமியான்விடைகொடுத்தருளிக் குன்றுபோற்புயக்காவலர்கொடுந்துடிகறங்க மன்றனாண்மலர்ப்பாயலின்மீதுகண்வளர்ந்தான். |
(இ -ள்.) என்று பாரினில் இயற்கையும் விதுரனுக்கு இயம்பி என்று இவ்வாறு உலகத்திலுள்ள இயல்பையும் விதுரனுக்குக் கூறி,- போர் வென்று கெழு நேமியான் - வெற்றிகொண்டு விளங்குகிற சக்கராயுதத்தை யுடையவனான கண்ணபிரான்,- விடை கொடுத்து அருளி - (அவ்விதுரனுக்குச்) செலவு கொடுத்தனுப்பி விட்டு,- குன்று போல் புயம் காவலர் கொடுந்துடி கறங்க - மலைகள் போன்ற தோள்களையுடைய காவலாளர்கள் கொடிய (ஒலியையுடைய) துடியென்னும் வாத்தியத்தை ஒலிக்க, மன்றல் நாள் மலர் பாயலின் |