பயங்கரமானதுவசத்தையுடைய துரியோதனன், ஞானம் மா முனி வரவுகண்டு - சிறந்த அறிவையுடைய மகிமையுள்ள சிறந்த இருடியாகிய அவ்வுலூகனது வருகையைப் பார்த்து, எதிர் கொளர - எதிர் சென்று உபசரித்து அழைத்துக்கொண்டுவந்து, நயந்து இருபதம் போற்றி - விரும்பி [அன்புடனே] (அம்முனிவனது) உபயபாதங்களை வணங்கி, ஆன மா மணி ஆசனத்து - ஏற்ற சிறப்புடையதான பெரிய நவரத்தினமிழைக்கப்பெற்ற திவ்வியாசனத்திலே, இருத்தினான் - (அவனை) எழுந்தருளப் பண்ணினான்; (எ - று.) அரசன்முனிவர்க்குச் செய்யவேண்டிய உபசாரங்களையெல்லாம் குறைவின்றி மனமகிழ்ச்சியோடு செய்தனனென்பதாம். நயந்து போற்றி இருத்தினான் என்றதனால், திரிகரணங்களாலும் உபசரித்தமை தோன்றும். நால்மறை - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பன; தைத்திரியம், பௌடியம், தலவகாரம், சாமம் என்றலுமொன்று. புரோகிதன் என்னுஞ் சொல்லுக்கு - (வைதிககாரியங்களிலும் மந்திராலோசனையிலும்) முன்னே வைக்கப்படுபவனென்றும், பின்னேவரும் நன்மைதீமைகளை முன்னமே அறிந்துசொல்பவனென்றும் காரணப்பொருள். சந்திரகுலத்திற் பிரசித்தி பெற்ற அஸ்தியென்னும் அரசனால் ஏற்படுத்தப்பட்டதுபற்றியும், யானைச் சேனையை மிகுதியாகவுடைமையாலும், அஸ்தினாபுரியெனக் காரணப்பெயர் வந்ததென்பர்; ஹஸ்தீ - ஓர் அரசன்; அல்லது யானை; (ஹஸ்தம் - கை, இங்கே துதிக்கை; அதனையுடையது) கழல் - வீரர் காலணி. ஞானம் - இயற்கையறிவும், கல்வி கேள்விகளினாலாகிய செயற்கையறிவும், உலக நடையையறிதலும், பொருள்களின் உண்மையையுணருந் தத்துவ ஞானமும். அரவவெங்கொடியோன் என்றது - அவன்கொடியே அவனது கொடுந்தன்மையையும் நாவிரண்டுடைமை யையும், நன்றியறிவின்மையையும் எப்பொழுதும் வக்கிரகதியிற்செல்லுந் தன்மையையும் விளக்கும் என்றற்குப்போலும். இனி, நல்லபாம்புபோல மிகக்கொடியனென்றும் பொருள் கொள்ளலாம். ஞானம் ஆம் முனி எனப்பிரித்து, தத்துவ ஞானவடிவமான முனி யெனினுமாம். (8) துரியோதனன் முதலியோர் மனங்கொதிக்கும்படிஉலூகன் தான் வந்த வரலாற்றைக் கூறத்தொடங்குதல். 9. | விந்தமன்னதோள்வீடுமன்முதலியோர்விழைவுடன்றொழுதேத்தி வந்தவாறுரைத்தருள்கெனமுனிவனும்வரன்முறையடைவாக வந்தனாகியகந்தடர்கடகளிற்றரசனுமவன்றந்த மைந்தர்யாவருங்கன்னனுஞ்சகுனியுமனங்கனன்றிடச்சொல்வான் |
(இ -ள்.) விந்தம் - விந்தியமலையை, அன்ன - ஒத்த, தோள் புயங்களையுடைய, வீடுமன் முதலியோர் - பீஷ்மன் முதலானவர்கள் விழைவுடன் - விருப்பத்துடனே, தொழுது - (அம்முனிவனை வணங்கி, ஏத்தி - துதித்து, வந்த ஆறு உரைத்தருள்க என - |