களிற் சிலமுன்னர்த் தோன்றுதலை இங்ஙனம் வருணித்தார்; தற்குறிப்பேற்றவணி. முன்னிரண்டடிகள் - இருள்நீங்கக் கீழ்வானம் வெளுத்ததையும், பின்னிரண்டடிகள் சூரியனுதிப்பதற்கு முன்னமே சூரியகிரணங்களிற் சில தோன்றுவதையும் கூறியன. படாம் - பட மென்பதன் திரிபு. வடவை - பெண்குதிரை. கடலினிடையிலே ஒரு பெண் குதிரையின் முகத்தில் நெருப்பு உள்ளதென்றும், அது மழை முதலியவற்றால் வருகிற நீரினாற் கடல் பொங்காதபடி அந்நீரை உறிஞ்சுவதென்றும், யுகாந்தகாலத்தில் அது அங்குநின்று எழுந்து உலகங்களை யெரித்து ஒழிப்பதென்றும் நூற்கொள்கை. அண்டம் - உலக வுருண்டை. ஆர் இருள் - நிறைந்த இருளுமாம். சூரியனுடைய பலகிரணங்கள் வெளித் தோன்றுமாதலால், 'கிளர்ந்தன' எனப் பன்மையாற் கூறினார். 'இரவியின் கிரணம் கிளர்ந்தன' என்பதற்கு அருணோதயமாயிற்று எனக் கருத்து. (158) 99.-சூரியோதய வருணனை. இகலும்வாளரவுயர்த்தவனிருந்ததொல்பதியில் அகிலநாயகனொருதனிநடந்தவாறறிந்து மகரவாரிதியகன்றுமாமருங்குறவணைந்த திகிரிபோலவந்தெழுந்தனனிரவிகீழ்த்திசையில். |
(இ -ள்.) இகலும் - பகைக்குந் தன்மையுள்ள, வாள் அரவு உயர்த்தவன் - கொடிய பாம்புக்கொடியை உயரவெடுத்தவனாகிய துரியோதனன், இருந்த - அரசுவீற்றிருக்கப்பெற்ற, தொல் பதியில் - பழமையான அத்தினாபுரியிலே, அகிலம் நாயகன் - எல்லாப்பொருள் கட்குந் தலைவனாகிய திருமால், ஒரு தனி நடந்த ஆறு - ஒரு துணையுமில்லாமல் தனியனாய்ச்சென்று சேர்ந்த விதத்தை, அறிந்து -, மகரம் வாரிதி அகன்று மா மருங்கு உற அணைந்த- சுறாமீன்களையுடைய கடலினின்று நீங்கி (அக்கண்ணபிரானது) சிறந்த பக்கத்தில் வந்து சேர்தற்குச் சமீபித்த, திகிரி போல் - (அக்கடவுளது சுதரிசனமென்னுஞ்) சக்கராயுதம்போல, இரவி - சூரியன், கீழ் திசையில் வந்து எழுந்தனன் - கிழக்குத்திக்கில் வந்து உதித்தான்; (எ - று.) சூரியன் உதிப்பதற்குச் சிறிது முன்னமே அவனது கிரணங்களிற் சில வெளித்தோன்றுவதை முற்செய்யுளாற் கூறி, இச்செய்யுளாற் சூரியனே உதயமாயினமையைக் கூறுகிறார். திருமாலினது சக்கரத்தின் அம்சமான சூரியனுக்கு அச்சக்கரத்தை உவமைகூறி வருணித்தல், மிகப்பொருந்தும்; "செஞ்சுடரோன், திருமால் திருக்கைத் திருச்சக்கர மொக்கும்" என்றார் ஆழ்வாரும். அன்றியும், எங்கும் உபமேயத்தினும் உபமானம் சிறந்திருக்க வேண்டுமென்கிற அலங்கார நூலார் கொள்கையின்படி, இங்கு, கோடி சூரிய பிரகாசமான திகிரி இரவிக்கு உவமையாதற்கு ஏற்குமாறு காண்க. ("நென்னலங்கையிற்கொண்ட தென்னையே நேமியாக வந்நீலமேனியா, னின்னமும் பொரத்தேடு மாகவத்தினின்றுமென்றுகொண் டெண்ணியே கொலோ, தன்னெடுந்தனிச்சயிலமும் பொலந் தபனியத்தடஞ்சயிலமாகவே, மின்னெடுஞ் செழுங்கதிர் பரப்பினான் வெய்யவேழ் |