பக்கம் எண் :

172பாரதம்உத்தியோக பருவம்

பரித்தேர்விபாகரன்" என மேல் வீட்டும பருவத்தில் சூரியோதய வருணனை,
கூறுவதையும் அறிக.) எம்பெருமானுக்குப் பகையாகும் வரை உடனே
அழித்தற்குச் சமயத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிற சக்கரம், அத்திருமால்
கிருஷ்ணாவதாரத்தில் பகைவனான துரியோதனனது ஊர்க்குத் தனியே
சென்றதை அறிந்து முன் ஜாக்கிரதையாக ஓடிவந்து அவனருகிற் சேர
இருந்தாற்போன்றது, சூரிய மண்டலம் எனக் குறித்தார்; இதுவும் -
தற்குறிப்பேற்றவணியே.

     ஒருதனி- தன்னந்தனியென்பதுபோலத் தனிமைச் சிறப்பையுணர்த்தும்
ஒருபொருட்பன்மொழி.  தமையன் தம்பிமாராயினும் புத்திர
பவுத்திரராதியராயினும், பாண்டவராயினும் உடனில்லாமலென்றபடி; கீழ் 75 -
ஆங் கவியிலும் இங்ஙனமே கொள்க.  சுறா மீன் கடலில் மாத்திரமே
வாழ்தல்பற்றி, 'மகரவாரிதி' என்பது கடலுக்கு அடைமொழி.  இதனை
'மகராலயம்'என்னுங் கடலின் வடமொழிப் பெயராலும் அறிக.  மாமருங்கு
என்பதில்,வலப்பக்கமென்ற கருத்தும் அடங்கும்.  திருமால் திருப்பாற்கடலில்
பஞ்சாயுதங்களும் புடைசூழ்ந்து காப்பப் பள்ளிகொள்ளுதலால், அப்
பாற்கடலைவிட்டு இங்குத் திருவவதரித்தபோது சக்கரமும் வேண்டிய
சமயத்தில் உதவுமாறுஅக்கடலைவிட்டு அகன்றுவந்த தென்னுங் கருத்துப்பட
'மகரவாரிதியகன்று'என்றார்.                                (159)

வேறு.

100.-இதுமுதல் நான்கு கவிகள்- அன்றைக்குத்
துரியோதனன் கொலுமண்டபத்தில் அரசு வீற்றிருத்தற்
சிறப்புக் கூறப்படுகின்றது.

சோதிவானநதிமைந்தனும்பழையசுருதியாலுயர்துரோணனும்
ஆதியாகவுயிரினும்வியப்புறவடுத்தமன்னவரநேகரும்
நீதியாறுவகையைந்துபத்தொடறு பத்தொராயிரவர்நிருபருந்
தீதிலாததிறலக்குரோணிபதினொன்றுபெற்றமிகுசேனையும்.

இதுமுதல் ஐந்துகவிகள் - குளகம்.

     (இ -ள்.) சோதி - ஒளியையுடைய, வானம் நதி மைந்தனும் -
ஆகாயத்திலுள்ள கங்காநதியினது குமாரனான வீடுமனும், பழைய சுருதியால்
உயர் - அநாதியான வேதங்களை யறிதலாற் சிறந்த, துரோணனும்-, ஆதி
ஆக- முதலாக, உயிரினும் வியப்புஉற - (துரியோதனனுக்குத் தன்) உயிரினும்
(சிறந்தவரென்று) அதிசயிக்கும்படி, அடுத்த - நெருங்கியுள்ள, மன்னவர்
அநேகரும் - அரசர்கள் பலரும், நீதி - முறைமையையுடைய, ஆறுவகை
ஐந்துபத்தொடு அறுபத்தொராயிரவர் நிருபரும் - மூன்றுலட்சத்து
அறுபத்தோராயிரம்அரசர்களும், தீது இலாத திறல் - குற்றமில்லாத
வலிமையையுடைய,அக்குரோணி பதினொன்று பெற்ற மிகு சேனையும் -
பதினொரு அகௌகிணி யென்னுந்  தொகையைப்  பெற்ற  மிகுந்த
சேனைகளும், (எ - று.) -'வந்து சூழ' என மேற்கவியோடு தொடரும்.