பக்கம் எண் :

176பாரதம்உத்தியோக பருவம்

இடையன் -(இராச்சியத்தைப் பெறும் பொருட்டு) போரைச் செய்யக்
கருதுகின்ற பாண்டவர்களது கட்டளையினால் வருகின்ற தூதனாகிய இடையர்
சாதியனான கண்ணன், இன்று - இன்றைக்கு, நம் அவையில் - நமது
இந்தசபையில், எய்தினால் - வந்தால், ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு
தொழுது உறவு கூரில் - (நீங்கள் யாராயினும்) ஒழிதலில்லாமல் (அவனை)
எதிர்கொண்டுபோய்ப் பார்த்து வணங்கி உறவு கொண்டாடுவீரானால், இனி
உங்கள் ஊர் தீ வலம் செய அடர்ப்பன் - அதன்பின் உங்களுடைய
ஊர்களைநெருப்புச் சூழும்படி கொளுத்தி விடுவேன்', என்று-, நனி
சீறினான்-மிகக்கோபமாகக் கூறினான்;(எ - று.)

     இராசதருமம் சிறிதுமில்லாத கொடுங்கோல் மன்னனாதலின், இங்ஙனங்
கூறினான் என்பார், 'சீறினான் முறைமை மாறினான்' என்றார்.  'உறவுகூறில்'
என்ற பாடத்துக்கு - உறவுமுறைமைக்குரிய உபசாரவார்த்தைகளைச்
சொன்னால் என்றபடி.  ஓவல் இன்றி - சும்மா இராமல்; ஓவு - பகுதி;
இதனைஒருவு என்பதன் மரூஉ என்பர்.  இடையர் மனையில் வளர்ந்தது
மாத்திரத்தைக்கொண்டு, இடையனென இகழ்ந்தான்.  இங்ஙனம்,
பாண்டவர்மேலுள்ள கோபம், அவர் தூதனான கண்ணபிரான் மேலுஞ்
சென்றது.                                             (164)

105.-கண்ணபிரான்துரியோதனனது சபையில் எழுந்தருளுதல்.

இந்தவண்ணமுரைசெய்துமன்னருமிராசராசனுமிருக்கவே
தந்தவண்ணனுடன்வந்த வண்ணலொளிதங்குகண்டுயிலுணர்ந்தபின்
கந்தவண்ணமலர்கொண்டுகைதொழுதுகாலையிற் பல கடன்கழித்
திந்தவண்ணமுனிருந்த பேரவையிலேயினானிசைகொள்வேயினான்.

     (இ -ள்.) இந்த வண்ணம் - இவ்வாறு, உரை செய்து - கூறி,
இராசராசனும் - துரியோதனனும், மன்னரும் - (மற்றை) அரசர்கள் பலரும்,
இருக்கவே - (சபையில்) வீற்றிருக்கையிலே,- இசை கொள் வேயினான் -
சப்தசுரங்களையுமுடைய புல்லாங்குழலை (இளமையில் பசு மேய்க்கையில்)
ஊதினவனாகிய, தந்தவண்ணனுடன் வந்த அண்ணல் - யானைத்தந்தம்
போலவெளுப்பான திருமேனி நிறத்தையுடைய பலராமனுடன்பிறந்த
பெருமைக்குணமுடைய கண்ணன், ஒளி தங்கு கண்துயில் உணர்ந்தபின் -
(விதுரன் மனையில்) சூரியன் சந்திரனென்னும் இருசுடரின் வடிவமாகப்
பொருந்திய தனதுகண்கள் உறங்குதலொழிந்து எழுந்த பின்பு, கந்தம்
வண்ணம்மலர்கொண்டு கை தொழுது காலையில் பல கடன் கழித்து -
பரிமளத்தையும்அழகையுமுடைய பூக்களைக் கையிலேந்திச் (சூரிய
பகவானைக்) கைகூப்பிவணங்கி (இங்ஙனம்) உதயகாலத்திற் செய்தற்கு உரிய
பல கடமைகளையுஞ்செய்துமுடித்து, இந்த வண்ணம் முன் இருந்தபேர்
அவையில் ஏயினான் -இப்படி முன்னமே (துரியோதனாதியர்) கூடியிருந்த
பெரிய சபையில்எழுந்தருளினான்; (எ - று.)

    அண்ணல் - ஆண்பாற் சிறப்புப்பெயர்; பண்பாகுபெயரென்றுங் கூறுவர்.
பலராமன் வெண்மையான திருமேனி நிறமுடையனாதலின்,