இது முதல் மூன்று கவிகள் - ஒருதொடர். இதுவும், மேற்கவியும் கண்ணன் வார்த்தை. (இ -ள்.) என் இல் நின் இல் ஒருபேதம் இல்லை - என் வீடென்றும் உன்வீடென்றும் ஒருபேதம் (எனக்குக்) கிடையாது; இது என் இல் - இந்த உன்வீடு என்வீடு; அது நின் இல் - (துவாரகையிலுள்ள) அந்த என்வீடு உன்வீடு; என்னினும் - என்றிருந்தாலும், மின்னின் மின் இலகு விறல் நெடு படை விதுரன் வந்து எதிர் விளம்பினான் - மின்னலைக் காட்டிலும் (மிகுதியாக) ஒளி விளங்கப்பெற்ற வெற்றியைத்தரும் பெரிய ஆயுதத்தையுடைய விதுரன் எதிர்கொண்டு வந்து பேசினான்; (உன்வீட்டுக்குவராமல் அவன் வீட்டுக்குப் போனதற்கு இது ஒருகாரணம்); உன்னில் - ஆலோசிக்குமிடத்து, இன்னம் உளது ஒன்று - இன்னமும் ஒருகாரண முண்டு:- பஞ்சவர் உரைக்கவந்த ஒரு தூதன்யான் - பாண்டவர்கள் சொல்லி யனுப்ப வந்த ஒரு தூதனாவேன் நான்; (அப்படிப்பட்டவன்), நின் இல் இன் அடிசில் உண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ - உனது வீட்டில் இனிமையான உணவை உட்கொண்டு பின்பு உன்னோடு வெறுக்கப் போகக் கருதுவது நியாயமோ? (நியாயமன்று என்பது ஒரு காரணம்); (எ - று.) என்னில் நின்னில் ஒருபேதமில்லை என்பதற்கு - எனக்கும் உனக்கும் ஒரு வித்தியாசமில்லையென்றும் உரைக்கலாம். இந்த உன்வீடு எனது அன்பரான பாண்டவருடையது, உன்னுடையதன்று; மேலுலகத்திலுள்ள வீர சுவர்க்கமே உன்னுடையது என்ற கருத்து, 'இது என் இல் நின் இல் அது' என்பதில் தொனிக்குமாறு காண்க. 'முன்னிலகு' என்ற பாடத்துக்கு - முன்புவிளங்குகிற என்க. விதுரனுக்கு 'மின்னின் மின்னிலகு விறனெடும் படை'என்ற அடைமொழி கொடுத்ததனால், அவன்படையை ஞாபகத்துக் கொண்டன்றோ யான் அங்குப் புகுந்தது என்ற கருத்து ஒலிவகையால் தோன்றும். விதுரன்வந்து எதிர் விளம்பியமை முன்னேகூறப்படாவிடினும், இங்குக் கூறப்பட்டது. அதனால், அங்குச்சொல்லாதது - 'உரைத்தும்' என்னும்உத்தியாம்; இங்ஙனமே காவியங்களில் கூற வேண்டியபொருளை எங்கேனும்ஓரிடத்துக்கூறி, மற்றையவிடங்களிற் கூறாது விடுதலைப் பலவிடத்திலுங்காணலாம். 'உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாகாது' என்பதுநான்காமடிக்கு ஏற்ற பழமொழி. ஒன்று - ஆகுபெயர். (168) 109.-நரகிற் செல்லுதற்குஉரியவர். அரவமல்கிய பதாகையாய் மதியமைச்சரா யரசழிப்பினுங் குரவர்நல்லுரை மறுக்கினும் பிறர்புரிந்த நன்றியதுகொல்லினும் ஒருவர்வாழ் மனையிலுண்டு பின்னுமவருடனழன்றுபொர வுன்னினும் இரவியுள்ளளவு மதியமுள்ளளவு மிவர்களே நரகிலெய்துவார். |
(இ -ள்.) அரவம் மல்கிய பதாகையாய் - பாம்பின் வடிவம் பொருந்தினபெருங்கொடியையுடையவனே! - மதி அமைச்சர் ஆய் அரசு அழிப்பினும் -நல்லறிவுடைய [அல்லது அரசனுக்கு அறிவுறுத் |