மகாலோபியான துர்க்குணமுடைய துரியோதனனிடம் அன்பர்க்காக இவ்வாறு இரந்தான் எனப் பரத்துவமும் சௌலப்பியமும் தோன்றுமாறு காண்க. கார் -துரியோதனனுக்கும், உரும் - கடுஞ்சொல்லுக்கும் உவமை. (175) 116.-துரியோதனன் அதனையும்மறுத்தல். மாடளிக்குல நெருங்குபைந்துளவ மாலையாய்மகரவேலைசூழ் நாடளித்திடவு மைந்துபேருடைய நகரளித்திடவும்வேண்டுமோ காடளிக்கவதனிடை திரிந்துறை கரந்துபோயினர்கள் காணவோர் வீடளிக்கினும் வெறுப்பரோவிதனைவிடுகவென்றெதிர்விளம்பினான். |
(இ -ள்.) (அதற்குத் துரியோதனன்), 'மாடு - பக்கங்களிலே, அளி குலம் - வண்டுகளின் கூட்டம், நெருங்கு - இடைவிடாது மொய்க்கப்பெற்ற, பைந்துளவம் - பசுநிறமான திருத்துழாயினாலாகிய, மாலையாய் - மாலையையுடைய கண்ணனே! - மகரம் வேலை சூழ் நாடு அளித்திடவும் - சுறாமீன்களையுடைய கடல் சூழ்ந்த நாடு முழுவதையும் கொடுக்கவும், பேர் உடைய ஐந்து நகர் அளித்திடவும் - பெயரையுடைய ஐந்து ஊர்களைக் கொடுக்கவும், (அவர்களுக்கு), வேண்டுமோ-? காடு அளிக்க - (நாம் முன்பு) காட்டை இடமாகக் கொடுக்க, அதனிடை திரிந்து - அதில் அலைந்து, உறை கரந்து போயினார்கள் - அவ் வசிக்குமிடத்தினின்றும் உருமறைந்து ஓடிப் போனவர்கள், காண - (மீண்டுந் தம்மதாகப்) பார்க்கும்படி, ஓர் வீடு அளிக்கினும் - ஒரு வீட்டைக் கொடுத்தாலும், வெறுப்பரோ - (அதனை வேண்டாமென்று) வெறுத்திடுவார்களோ? [மாட்டார்களென்றபடி]. இதனை விடுக - (என்பக்கல் சிறிதேனும் இடம்பெறும்) இக்கருத்தை (இனி நீ) ஒழிக', என்று எதிர் விளம்பினான் - என்று மறுமொழி கூறினான்; (எ - று.) 'எதிர்' என்ற சொல்லில், விரோதமான மொழியென்ற கருத்தும் இரட்டுறமொழிதலாற் பெறப்படும்; கீழ் 107 - ஆங் கவியில் 'எதிர் பகருவான்' என்றதிலும் இங்ஙனம் காண்க. ஐந்துபேருடைய - பஞ்சபாண்டவர்களது என்று உரைப்பாரு முளர். உறையுமிடம், உறை. (176) 117.-இதுவும், மேற்கவியும்ஒரு தொடர்: கண்ணன் துரியோதனனுக்கு அறிவு கூறுதல். தந்தைகாதலுறு தன்மைகண்டிளையதாய்பயந்தவிருதம்பியர்க் கிந்தவாழ்வு மரசுங்கொடுத்தவனுநின்குலத் தொருவ னிங்குளான் முந்தமாநிலமனைத்தினுக்குமுயர்முறைமையா லுரியவரசருக் கைந்துமாநகருநீகொடாதொழியினென்ன தாகுமுனதரசியல். |
(இ -ள்.) தந்தை - தனது பிதா, காதல் உறு - ஆசைமிகுந்த, தன்மை -தன்மையை, கண்டு - பார்த்து, இளைய தாய் பயந்த இரு தம்பியர்க்கு - தனதுசிறிய (மாற்றுத்) தாய்பெற்ற புதல்வரான தனது |