பக்கம் எண் :

உலூகன் தூது சருக்கம் 19

இது முதல் மூன்று கவிகள் -ஒருதொடர்: உலூகமுனிவன் வார்த்தை.

10.ஆண்டுபன்னிரண்டடவியுற்றொருவருமறிவுறாவகைமற்றோர்
ஆண்டுமன்னியபாண்டுவின்மதலையரைவரும்வெளிப்பட்டார்
ஆண்டுமன்னர்முன்சூதுபோர்பொருதழிந்திடுதலினதுநீர்கொண்டு
ஆண்டுவந்தபார்நும்மொழிப்படியவர்க்களித்திரோவளியீரோ.

     (இ -ள்.) பன்னிரண்டு ஆண்டு - பன்னிரண்டு வருஷ காலம், அடவி
உற்று - வனத்திலே பொருந்தி வசித்து, மற்று ஓர் ஆண்டு - இன்னொரு
வருஷம், ஒருவரும் அறிவுறா வகை - எவரும் (தம்மை) அறியாதபடி
[அஜ்ஞாத வாசமாக], மன்னிய - (விராடநகரத்தில்) வசித்த, பாண்டுவின்
மதலையர் ஐவரும் - பாண்டு குமாரர்களைந்து பேரும், வெளிப்பட்டார்-;
ஆண்டு - அவ்விடத்தில் [சபாமண்டபத்தில்], மன்னர்முன்-பல அரசர்கள்
எதிரில், சூது போர் பொருது - (சகுனியோடு) சூதாட்டத்தையாடி,
அழிந்திடுதலின் - (தருமன்) தோற்று இராச்சியத்தை யிழந்ததனால், நீர் -
நீங்கள், அதுகொண்டு - அக்காரணத்தால், ஆண்டு வந்த - அரசாட்சிசெய்து
வந்த, பார் - (அவர்களது) இராச்சியபாகத்தை, நும் மொழிப்படி - (முன்னே)
நீங்கள் சொன்ன வார்த்தையின்படி, அவர்க்கு - அப்பாண்டவர்களுக்கு,
அளித்திரோ - (இப்பொழுது) கொடுப்பீர்களோ? அளியீரோ -
கொடுக்கமாட்டீர்களோ? (எ - று.)

     கீழ்ச்சூதுபோர்ச் சருக்கத்தில் "அரிவையோ டகன்று நீவிரை
விருமடவியெய்திச், சுரர்தினமீராறங்கண் துன்னுதிர் மன்னுநாட்டின்,
ஒருவருமறியா வண்ண மொருதினமுறைதி ருங்கள், பெரு விறலரசும் வாழ்வும்
பின்னுறப் பெறுதிரென்றான்" என்று கூறியபடி இப்பொழுது நடக்க
உங்களுக்குச் சம்மதமா? இல்லையா? என்று உலூகன் துரியோதனாதியரை
வினவினான்.  அம்பாலிகை வியாசரோடு சேர்கையில், கூச்சத்தால் உடம்பு
முழுவதும் நிறம் வேறுபட்டு வெண்மையடைந்ததனால், அவளிடம் பாண்டு
விளர்த்த உடலுடையவனாய்ப் பிறந்தான்.  ஒருவர் என்ற பலர்பால்,
அறிதற்கரியதை அறியவல்ல அறிவினுயர்வை விளக்கும்:  ஆண்டு -
அக்காலத்தி லென்றுமாம்.  வெற்றி தோல்விகளுக்கு இடமாதலாலும்,
அரசாட்சிச் செல்வத்தைப்பெறுதல் இழத்தல்களுக்குக் காரணமாதலாலும்,
சூதாட்டத்தை 'போர்' என்றது; போர்-யுத்தம்.  அளி என்ற வினைப்பகுதி
பாண்டவர்கள் இராச்சியத்தையிழந்த தாழ்வும், துரியோதனாதியர் அதனை
யாண்டு வந்த உயர்வும் தோன்ற நின்றது.  இப்பாட்டில் முதலடி யொழிந்த
மற்றை மூன்றடிகளிலும், முதலில் ஆண்டு என்ற சொல் வெவ்வேறு பொருளில்
வந்தது, யமகமென்னுஞ் சொல்லணியாம்; மூன்றாமடியிலுள்ள ஆண்டு என்பது
சுட்டடியாப் பிறந்த அண்டு என்பதன் நீட்டலெனப்படும்.           (10)

11.

முன்னரும்பொருதுளதுநீர்சூதுபோர்மோதுபோர்கருதாமல்
இன்னமும்பொரவேண்டுமேல்பொருதிடுமிலஞ்சியிற்பொலஞ்செங்கால்