| அன்னமுங்கிரிமயில்களுமுடன்விளையாடுநல்வளநாட்டீர், பின்னமும்பிறவாதினிப்பண்டுபோற்பீடுறும்பெருவாழ்வும். |
(இ -ள்.) இலஞ்சியில் - நீர் நிலைகளிலுள்ள, பொலம் செம்கால் அன்னமும் - பொன்னிறமான சிவந்த கால்களையுடைய அன்னப்பறவைகளும், கிரி மயில்களும் - மலையிலுள்ள மயிற் பறவைகளும், உடன் விளையாடும் - ஒருங்கே விளையாடப்பெற்ற, நல்வளம் நாட்டீர் - சிறந்த வளங்களை யெல்லாமுடைய குருநாட்டி னரசர்களே! மோது போர் கருதாமல் - (ஒருவரோடொருவர்) தாக்கிச் செய்யும் யுத்தத்தை யெண்ணாமல், நீர் முன்னரும் பொருது உளது - நீங்கள் (பாண்டவரது இராச்சியத்தைப்பறித்துக் கொள்ளும் பொருட்டு) முன்பு செய்துள்ளதும், சூது போர் - சூதாட்டமேயாம்; (ஆதலால் அவ்விராச்சியத்தை அவர் மீட்டுக்கொள்ளும் பொருட்டு), இன்னமும் பொர வேண்டும்ஏல் - இனியும் (மோது போரில்லாமல் சூதுபோரைச்) செய்யவேண்டுமென்றால், பொருதிடும் . (அவர்களோடு அதனையே) செய்யுங்கள், (இங்ஙனம் நியாயப்படி நடப்பீரானால்), இனி பின்னமும் பிறவாது - இனிமேல் (உங்கள் இருதிறத்தாருள்) மாறுபாடும் உண்டாகாது; பெரு வாழ்வும் - பெரிய (உங்கள்) அரசாட்சிச் செல்வமும், பண்டு போல் பீடுஉறும் - முன்போலப் பெருமையடையும்; (எ - று.) மொழிப்படி கொடாவிட்டாலும், முன்போல மறுபடி இருதிறத்தாருஞ் சூதாடுவது, அதில் பாண்டவர்கள் சயித்தால் அவர்களுக்கு இராச்சியங் கொடுத்து விடுவது, இதுவாவது செய்யவேண்டுவது நலம் என்றான். மோது போர் கருதாமலென்றது - முன் வாக்கியத்திலும் பின் வாக்கியத்திலுஞ் சேர்ந்து இடையில் மத்திமதீபமாய் நிற்கும். காலும் மூக்குஞ் சிவந்து உடம்பு வெளுத்திருக்கும் அரசவன்ன மென்பார், செங்காலன்ன மென்றார். நாடும் நாடு சார்ந்த இடமுமாகிய மருதநிலத்தின் கருப்பொருளான அன்னங்களும், மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சிநிலத்தின் கருப்பொருளான மயில்களும், ஓரிடத்திற்கூடி விளையாடுவதெனத் திணைமயக்கங்கூறியவாறு. வெவ்வேறு நிலத்திலுள்ளனவான விவேகமில்லாத அஃறிணை யுயிர்களாகிய பறவைகளும் தமக்குள் பேதமின்றி உமது நாட்டில் ஒற்றுமைப்பட்டிருக்க, விவேகிகளான நீங்கள் உங்களினத்தவரான பாண்டவர்களோடு பேதப்பட்டிருப்பது தகுதியன்றுஎன்ற பொருள் இவ்வருணனையில் தொனிக்குமாறு காண்க. மருதநிலத்து ராஜஹம்சம் - நாட்டில் அரசாளுந் துரியோதனனையும், கிரி மயில்கள் - வனவாசஞ் செய்த பாண்டவர்களையும் ஞாபிக்கும். முன்னமும் பொருசூதுபோர் மோதுபோர் முனிவுடன் என்றும் முதலடியிற் பாடம். (11) 12. | அன்றியேயவருடன்மலைகுவமெனவழிவினைக் கருதாமல் வென்றியேநினைந்தெதிர்த்திரேலுங்களால்வெல்லுதலரிதம்மா கன்றியேயடல்வீமனும்விசயனுங்களம்புகிலனைவீரும் பொன்றியேவிடுகின்றினிர்முனிவர்சொற்பொய்க்குமோபொய்யாதே. |
|