பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 201

நிகரற்றசிவனதுசேய் என்றும் நிகரற்றவனான சேய் என்றும் உரைப்பினும்
பொருந்தும்.  செம்மையென்ற பண்புப்பெயர், ஈறு போய் ஆதி நீண்டு
முன்நின்ற மெய் திரிந்து சேய் என நின்றது; இது முதலிற் பண்பாகுபெயராய்,
செந்நிறமுடைய முருகக் கடவுளை உணர்த்தி, பின் உவமவாகுபெயராய்,
அவனைப்போன்ற பலபராக்கிரமங்களையுடைய மைந்தனைக்குறித்ததனால்,
இருமடியாகுபெயர்.                                     (195)

136.-இதுவும் அடுத்த கவியும்- கர்ணன் கூறிய
செருக்குமொழி.

என்றுகூறவிறலங்கர்பூபதியும்யானிருக்கவிகல்விசயனைச்
சென்றுசீறியுயிர் கொள்ளவல்லவர்கள்யாவ ரென்றுநனிசெப்புவீர்
கன்றினால்விளவெறிந்த கள்வனிவனின்றுதேர்நனிகடாவினும்
அன்றுபோரினிடை காணலாகுமெனதாடல் வெஞ்
                               சிலையி னாண்மையே.

     (இ -ள்.) என்று கூற - என்று (இவ்வாறு துரியோதனன்) சொல்ல,
விறல்அங்கர் பூபதியும் - சிறப்பையுடைய அங்கதேசத்தார்க்குத் தலைவனான
கர்ணனும், 'யான் இருக்க - நான் இருக்கையில், இகல் விசயனை சென்று சீறி
உயிர் கொள்ள வல்லவர்கள் யாவர் என்று நனி செப்புவீர் - வலிமையுள்ள
அருச்சுனனைப் (போரில்) எதிர்த்துப்) போய்க் கோபித்து அவனுயிரைக் கவர
வல்லவர் யாரென்று நன்றாகச் சொல்லுகிறீர்; கன்றினால் விள எறிந்த கள்வன்
இவன் - கன்றைக்கொண்டு விளாமரத்தை வீசியடித்த மாயையையுடைய
இக்கண்ணன், நின்று தேர் நனி கடாவினும் - (முன்னே) நின்று தேரை
நன்றாகச் செலுத்தினாலும், எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மை -
என்னுடைய வெற்றியைத் தரவல்ல வில்லின் திறமையை, அன்று போரினிடை
காணல் ஆகும் - அப்பொழுது யுத்தகளத்தில் (யாவர்க்கும் பிரதியக்ஷமாகப்)
பார்த்தல் கூடும்; (எ - று.) வருங்கவியில் 'என்று இவை உரை செய்தான்'
என்பதனோடு முடியும்.

     பூபதி- பூமிக்குத்தலைவன்; முன்னே 'அங்கர்' என வந்ததனால், இது
இங்குக் காரணங்கருதாது, அரசனென்ற மாத்திரமாய் நின்றது.  கம்ஸனால்
ஏவப்பட்ட கபித்தாசுரன், விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்
கீழ்வரும்பொழுது மேல் விழுந்து கொல்வதாக எண்ணி வந்துநிற்க, அதனை
யறிந்த கிருஷ்ணபகவான், அவ்வாறே தன்னை முட்டிக்கொல்லும் பொருட்டுக்
கன்றினுருவங்கொண்டுவந்த வத்ஸாசுரனைப் பின்னிரண்டு கால்களையும்
பிடித்து எடுத்துச்சுழற்றி விளாமரத்தின்மேல் எறிய, இருவரும் இறந்து தமது
அசுர வடிவத்துடனே விழுந்தனர் என்பது கதை.  கன்று - பசுவின்
இளமைப்பெயர்:  'யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையு,
மானோடைந்துங் கன்றெனற்குரிய" என்பது தொல்காப்பியம்.  இரண்டாமடிக்கு
அருச்சுனனைக் கொல்லவல்லவர் நானேயன்றி வேறெவருமில்லை யென்றபடி.
                                                        (196)