ஆழியான் -சக்கராயுதத்தையுடைய கண்ணன், அவள் தன்னை தேற்றி - அந்தக் குந்திதேவியைச் சமாதானப்படுத்தி, உரைக்கல் உற்றான் - (சிலவார்த்தை) கூறத் தொடங்கினான்; (எ - று.) - அவற்றை, மேல் ஏழு கவிகளிற் காண்க. விதியினால் என்பதை மத்திமதீபமாக வென்றிடுவார்கள் என்பதனோடுங் கூட்டுக. ஆகூழால் வெற்றியும், போகூழால் அழிவும் நேர்ந்திடும். விதி, ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி என்பன - ஒருபொருட்சொற்கள்.அஃதாவது - இருவினைப்பயன் செய்தவனையே அடைவதற்கு ஏதுவாகியநியமம். ஆழியான் - திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டவனுமாம். (211) 152.-இதுமுதல் ஏழுகவிகள் -ஒருதொடர் : கண்ணன் கர்ணனது பிறப்பு முதலியவற்றைக் குந்திக்குக் கூறுவன. தன்மைநானுரைப்பக்கேணின்றந்தைதன்மனையினீயுங் கன்னியாயிருந்துவாழுங்காலையோர்முனிவன்வந்து சொன்னமந்திரமோரைந்தினொன்றினாற்சூரன்றன்னை முன்னினையவனுமன்றுவந்துநின்முன்புநின்றான். |
(இ -ள்.) தன்மை நான் உரைப்ப கேள் - (முன்பு நடந்ததொரு உண்மையான செய்தியின்) தன்மையை நான்சொல்ல (நீ இப்பொழுது) கேட்பாய்: நின் தந்தைதன் மனையில் - உன்னுடைய பிதாவான குந்தி போஜராஜனது அரண்மனையிலே, நீயும் கன்னி ஆய் இருந்து வாழும் காலை - நீயும் மணமில்லாத இளமகளாயிருந்து வாழ்கிற காலத்தில், ஓர் முனிவன் - ஒப்பற்ற (துருவாச) முனிவன், வந்து சொன்ன-, மந்திரம் ஓர் ஐந்தின் - ஐந்து மந்திரங்களுள், ஒன்றினால் - ஒரு மந்திரத்தினால், சூரன் தன்னை - சூரியனை, முன்னினை - (நீ) நினைத்தாய்; அவனும் - அச்சூரியனும், அன்று -அப்பொழுது, நின்முன்பு - உன்னெதிரில், வந்து நின்றான் -; (எ - று.)
சாபத்தாலும் கோபத்தாலும் பேர்படைத்த பயங்கரனான துர்வாச முனிவன் ஒருகாலத்தில் குந்திபோஜராஜனது அரண்மனைக்கு எழுந்தருள, அங்கு அவ்வரசன் அம்முனிவற்கு எல்லாப் பணிவிடைகளும் இயற்றும்படி நுண்ணறிவுடைய கன்னிகையான குந்தியை நியமிக்க, அவளும் அங்ஙனமே தவறாமல் ஒரு வருஷகாலம் உபசரித்துவர, அம்முனிவன் அங்கு நின்று செல்கையில் மிக மனமுவந்து குந்திக்குச் சில மந்திரமுபதேசித்து அதனால் தேவர்களை வரவழைக்கவும் அவரருளால் புத்திரபாக்கியத்தைப் பெறவு மாகுமென்று கூறிப்போக, பெண்களுக்கு இயற்கையான பேதைமையையுடைய குந்தி அதனைப் பரீக்ஷித்துப் பார்க்க விரும்பித் தனியே மேல் மாடத்துச் சென்று ஏகாந்தமாக இருந்து ஒரு மந்திரத்தைச் சொல்லிச் சூரியனைத் தியானிக்க, உடனே சூரியன் உக்கிரமான வடிவத்தைவிட்டுச் சாந்தவடிவத்தோடு அருகில் வந்துசேர்ந்தான். மந்திரம் - மறை பொருள்.(212) |