வாச மகாமுனிவர்'வண்டோலிடுந்தார்ப்பேரறத்தின் மகனே யுன்னை யரசென்று, கொண்டோரல்லா லெதிர்ந்தோரில் யாரேவாழ்வார் குவலயத்தில்" என்பது முதலியவற்றை. இனி, 'முனிவர் சொற்பொய்க்குமோ பொய்யாதே' என்றதை உலூகன்வார்த்தையாகக் கொள்ளாமல் கவிக்கூற்றாகக்கொண்டு. 'கன்றியேயடல் வீமனும் விசயனும் களம்புகில் அனைவீரும், பொன்றியே விடுகின்றினிர்' என்று இங்கே உலூகமுனிவன் சொன்ன வார்த்தை பொய்யாகாதுபலித்தே தீரும் என்றதாகவும் கருதலாம். அன்றியும், சாபானுக்கிரக சக்தியுடைய அந்தணர் பலர் துரியோதனனுக்கு அப்பொழுதப்பொழுது புத்திகூறி அவன் கேளாதது காரணமாக அவனுக்குக்கொடுத்த சாபங்களும், பாண்டவர்களது நற்குண நற்செய்கைகளை நோக்கி மகிழ்ந்த முனிவர் பலர் அவர்களுக்குச் செய்த அனுக்கிரகங்களும் அனேகம் உண்டு. போரில் வெற்றி தோல்விகள் ஒருதலையன்றாதலால் அங்ஙனங்கருதுதல் தகுதியன்றென்பார். 'அழிவினைக்கருதாமல் வென்றியேநினைந்து' என்றார். அடல்என்பதை விசயனுக்கும் கூட்டுக. வீமனுக்கு அடல் - தேகபலமும், கதைவலிமையும்; அருச்சுனனுக்கு அடல் - வில்வன்மையும், பாசுபதம் முதலிய அஸ்திரபலமுமாம். வீமன் (பகைவர்க்குப்) பயங்கரனானவன் என்று பொருள். விசயன் - விசேஷமான வெற்றி யுடையவனென்று பொருள். இராஜசூய யாகத்திற்காக வடக்கிற் சென்று பல அரசர்களைச் சயித்ததனாலும், காண்டவ தகனகாலத்துத் தேவர்களை வென்றதனாலும், பாசுபதம் பெறுங்காலத்துப் பரமசிவனையெதிர்த்து விற்கழுந்தால் முடியிலடித்ததனாலும், பின்பு தேவர்க்குப் பகைவராகிய நிவாதகவசர் காலகேயர்களை வதைத்ததனாலும், இவை முதலிய வெற்றிகளால், இவனுக்கு இப்பெயர் அமைந்தது. இனி, விசயன் - தன்னைச் சயிப்பாரெவரும் இல்லாதவன் என்றும் பொருள்கொள்வர். முன்னையபொருளில், வி - விசேஷமும், பின்னைய பொருளில் வி - எதிர்மறையுங் குறிப்பனவாம்; இரு பொருளிலும், ஐயம் - வெற்றி. 'அரிது' என்பதில், அருமை - இன்மை குறிக்கும். (12) துரியோதனன் அலட்சியமாகமறுமொழி கூறுதல். 13. | என்றுபூசுரனியம்பலுங்குங்குமமெழிலுறுமிணைமேருக் குன்றுபூசியதனையபொற்றடம்புயக்குருகுலவயவேந்தன் இன்றுபூசைபோலிருந்துழியுரைக்குமீதிகலதன்றிருவர்க்குந் துன்றுபூசலிற்காணலாமாண்மையுந்தோள்வலிமையுமென்றான். |
(இ -ள்.) என்று-, பூசுரன் - (உலூகனென்னும்) அந்தணன், இயம்பலும் - சொன்னவளவிலே,- குங்குமம் பூசியது - குங்குமப்பூவின் குழம்பைப் பூசப்பெற்றதான, எழில் உறும் இணை மேரு குன்று - வளர்ச்சிமிக்க மேருமலை இரண்டு இருந்தால் அவற்றை, அனைய - ஒத்த, பொன் தட புயம் - அழகிய பெரிய தோள்களையுடைய, குரு குலம் வய வேந்தன் - குருவமிசத்திலேபிறந்த வலிமையுடைய இராசராசனான துரியோதனன்,- இன்று - இப்பொழுது, பூசை |