பக்கம் எண் :

222பாரதம்உத்தியோக பருவம்

     கருத்து- வெளிப்படை.  உருவகவணி.  வண்டுக்கு 'மென்சிறை' என்ற
அடைமொழி கொடுத்ததற்கு ஏற்ப, கொழுநரை அழகிய
மேனியையுடையவரெனக் கருதுக.  துறை - நீர்க்கரையும் வாயில்
முன்னிடமுமாம்.  குல ஸ்திரீகள் கணவரோடு சிறிதுபிணங்கின சமயம்
பார்த்துஅவ்வாடவரை விலைமாதர் தாம்இழுத்து வசப்படுத்துதல்
உலகவியல்பு.  ஊடல்- கணவன் மனைவியருள் விளையாட்டு
வகையாலுண்டாகுஞ் சிறு கலகம்.                           (225)

166.-இதுவும், மேற்கவியும் -சந்திரோதய வருணனை.

கானெலாமலர்ந்தமுல்லைக்ககனமீதெழுந்ததென்ன
வானெலாம்வயங்குதாரைநிரைநிரைமலர்ந்துதோன்ற
வேனிலான்விழவின்வைத்தவெள்ளிவெண்கும்பமென்னத்
தூநிலாமதியம்வந்துகுணதிசைத்தோன்றிற்றம்மா.

     (இ -ள்.) கான் எலாம் மலர்ந்த முல்லை - காடுகளிளெல்லாம் மலர்ந்த
முல்லைமலர்கள், ககனம் மீது எழுந்தது என்ன - ஆகாயத்தின்மேல் எழுந்து
தோன்றினால் அதுபோல, வான் எலாம் வயங்கு தாரை - ஆகாயமுழுவதிலும்
விளங்குகின்ற நட்சத்திரங்கள், நிரை நிரை மலர்ந்து தோன்ற - வரிசை
வரிசையாக விளங்கி (வெண்ணிறமாக)க் காணப்பட,- வேனிலான் விழவின்
வைத்த வெள்ளி வெள்கும்பம் என்ன - வசந்தகாலத்துக்கு உரிய மன்மதனது
உத்ஸவ காலத்தில் (மங்களகரமாக) வைக்கப்பட்ட வெள்ளியினாலாகிய
வெண்ணிறமான பூர்ணகும்பம்போல, தூ நிலா மதியம் வந்து குணதிசை
தோன்றிற்று - சுத்தமான நிலாவையுடைய பூர்ணசந்திர மண்டலம் வந்து
கிழக்குத்திக்கில் உதித்தது; (எ - று.) - அம்மா - ஈற்றசை.

    முன்னிரண்டடியில் - நட்சத்திரப்பிரகாசமும், பின்னிரண்டடியில்
சந்திரோதயமுங் காண்க.  வேனில் - இங்கே சித்திரையும் வைகாசியுமாகிய
இளவேனிற் பருவம்.  அக்காலத்தில் மன்மதனுக்குப் போர்த்தொழிலில்
ஊக்கமிகுதி உண்டாதல்பற்றி, அவனுக்கு 'வேனிலான்' என்று பெயர்.
வேனிலான் விழவுக்குரியகாலம் - இரவு.  கும்பம் - குடம்: உவமையணி.
                                                       (226)

167.

தூவியனிலவுதோன்றத்துணைவரைப்பிரிந்தோர்கண்கள்
காவியுமாம்பலும்பைங்கருவிளமலரும்போன்ற
மேவியமகளிர்கண்கண்மீனெறிபரவையேழுந்
தாவியலுழையுங்காதற்சகோரமும்போன்றமாதோ.

     (இ -ள்.) தூ இயல் நிலவு தோன்ற - சுத்தமான தன்மையையுடைய
சந்திரகாந்தி விளங்குகையில், துணைவரை பிரிந்தோர் கண்கள் - கணவரைப்
பிரிந்த மனைவியரது கண்கள், (இராமுழுவதுந் தூங்குவதின்றி
மூடாமலிருத்தலால்), காவியும் ஆம்பலும் பை கருவிளமலரும் போன்ற -
நீலோற்பல மலர்களையும் ஆம்பல்மலர்களையும் குளிர்ந்த
கருவிளமலர்களையும் ஒத்தன; மேவிய மகளிர் கண்கள் - (கணவரைக்)
கூடியுள்ள மனைவியரது கண்கள், (நிலாவைக் கண்டு மிகக்களித்தலால்) மீன்
எறி பரவை ஏழும் - மீன்களை