நீதிகளைநன்கு உணர்ந்து நியாயவழியையே பேசுகிற நற்குணமுடையவன்: கீழ்ச் சூதுபோர் நடந்தகாலத்தில் துரியோதன னேவலால் துச்சாதனன் திரௌபதியை முடிபிடித்திழுத்துவந்த பொழுதும் இவன் நீதியெடுத்துக் கூறினான்: இதுபற்றியே, மேல் யுத்தத்தில் வீமன் இவனை விதியாற் கொல்லவேண்டியபோதும் மிக இரங்குமாறு காண்க. இங்கே, நகைப்பு - தந்தையது பேதைமைநோக்கியுண்டானது. 'எண்ணிலாவிந்தவெண்ண மெவ்வழிக் கேற்றது' என்றும்பாடம். எண்ணிலா - நினைக்கத்தகாத என்றபடி. (232) 173.-கொல்லத்தகாதவர். மூத்தவரிளையோர்வேதமுனிவரர்பிணியின்மிக்கோர் தோத்திரமொழிவோர்மாதர்தூதரென்றிவரைக்கொல்லிற் பார்த்திவர்தமக்குவேறுபாவமற்றிதனினில்லை பூத்தெரிதொடையாய்பின்னுநரகினும்புகுவரென்றான். |
(இ -ள்.) 'பூ தெரி தொடையாய் - மலர்களாலமைந்த விளங்குகின்ற மாலையை யுடையவனே! - மூத்தவர் - முதியவர்களும், இளையோர் - இளம்பிராய முள்ளவர்களும், வேதம் முனிவரர் - வேதங்களையறிந்த பிராமணச் சிரேஷ்டர்களும், பிணியில் மிக்கோர் - நோயில் மிகுந்தவர்களும், தோத்திரம் மொழிவோர் - ஸ்துதிபாடகர்களும், மாதர் - மகளிரும், தூதர் - தூதர்களும், என்ற இவரை - என்று சொல்லப்பட்ட இவர்களை, கொல்லின் - கொன்றால், பார்த்திவர் தமக்கு - அரசர்களுக்கு, இதனின் - இதுபோல(க் கொடிய), வேறு பாவம்-, இல்லை-; பின்னும் - மேலும், நரகினும் புகுவர் - (இவர்களைக் கொன்றவர்) நரகத்திலுஞ் சேர்வார்கள்,' என்றான் - என்று (விகர்ணன்) கூறினான்; (எ - று.) - மற்று - அசை. "இரவலரிளையவ ரேத்துநாவலர், விரவியதூதுவர் விருத்தர் வேதியர், அரிவையர் வெஞ்சம ரஞ்சுவோர் பெருங், குரவரென் றிவர்களைக் கோறல் பாவமே" என்றார் கீழ் நிரைமீட்சிச் சருக்கத்தும். இராமதூதனான அநுமானைக் கொல்லத்துணிந்த இராவணனுக்கு விபீஷணன் "மாதரைக் கொலைசெய்தார்க ளுளரெனவரினும் வந்த, தூதரைக் கொன்றுளார்களியாவரே தொல்லை நல்லோர்" என்பது முதலாக நீதிகூறியவாறுங் காண்க. அறிவினாலும் வயதினாலும் ஒழுக்கத்தாலும் முதிர்ந்தவர்களாகிய ஞானவ்ருத்தர்வயோவ்ருத்தர் சீலவ்ருத்தர் என்னும் மூவகைப்பெரியோரும் அடங்குதற்கு,பொதுப்பட 'மூத்தவர்' எனப்பட்டது. தோத்திரமொழிவோர் அரசரைஎப்பொழுதும் அருகிலிருந்து புகழ்ந்து பாடும் ஒரு சாதியார்; இனி, ஒருவரைத்துதித்துக் கீழ்ப்படிபவருமாம். 'பாவமற்றிதனினில்லை'- இது எந்தப் பிராயச்சித்தத்தாலுந் தீராமல் மறுமையில் அனுபவித்தே தீரத்தக்க பாவமாகும்என்பதை விளக்கும் பொருட்டு, 'பின்னு நரகினும் புகுவர்' என்றான். தூதரைக்கொல்லலாகாதென்றற்கு இனமாகப் பிறரையும் எடுத்துக்கூறினான். 'பூத்தெரிதொடையாய்' என்ற விளியைத் திருதராட்டிரனைநோக்கியதென்றாவது, |