பக்கம் எண் :

228பாரதம்உத்தியோக பருவம்

'வம்புஅவிழ் அலங்கல் மார்ப - வாசனை வீசுகிற பூமாலையை யணிந்த
மார்பையுடையவனே! மந்தணம் உரைக்கல் உற்றால் - இரகசியமான
ஆலோசனை சொல்லத் தொடங்கினால், இம்பர் - (அதற்குரிய) இவ்விடத்தில்,
யாது சொல்ல - எந்த ஆலோசனையைச் சொல்லும்பொருட்டு, இளைஞரை
அழைத்தது - சிறியோர்களைக் கூப்பிட்டது', என்றான் - என்று சொன்னான்;
(எ - று.) - மற்று - அசை.

    இப்பாட்டின் முதலடி - இவனது தோள்வலிமை, போர் முதலிய
ஆற்றல்தொழில்களுக்கு அமைந்ததன்று; ஒரு பெண்ணைத் துகிலூரியும்
இழிதொழிலுக்கே அமைந்ததுபோலும் எனக்கவி இகழ்ந்தவாறு.  இங்கே
வீரனென்றது, இகழ்ச்சி.  விரிதுகில் - எதிர்கால வினைத்தொகையாக,
(கண்ணன் திருவருளால்) விரிவதாகுஞ்சேலை யென்றும் பொருள்படும்.
இதனால், அந்த அற்பச் செய்கையையும் இவன்செய்து முடிக்கமாட்டாத இழி
தகைமை தோன்றும்.  முனிந்து சீறி - ஒருபொருட்பன்மொழி.  (235)

176.

அதிரதர்முதலாவுள்ளவவனிபர்வளைந்துநிற்ப
எதிர்முகிறவழுங்கோயிலெரியினையெங்குமூட்டி
விதுரனுமவனுஞ்சேரவெந்திடமலைவதல்லான்
மதிபிறிதில்லையின்னேவல்விரைந்தெழுமினென்றான்.

     (இ -ள்.) (இன்னும் அத்துச்சாதனன்), 'அதிரதர் முதல்ஆ உள்ள
அவனிபர் எதிர் வளைந்து நிற்ப - அதிரதர் முதலாக இருக்கிற அரசர்கள்
(பலர் நம்முடன்) எதிரிலே வளைந்துகொண்டு நிற்க; முகில் தவழும் கோயில்
எங்கும் எரியினை மூட்டி - மேகங்கள் தவழப்பெற்ற (மிகவுயர்ந்த விதுரனது)
சிறந்த வீட்டிலே எல்லாப் பக்கத்தும் நெருப்பைப்பற்றவைத்து, விதுரனும்
அவனும் சேர வெந்திட மலைவது அல்லால் - விதுரனும் அக்கண்ணனும்
ஒருசேர வெந்திறக்கும்படி அழிப்பதல்லாமல், பிறிது மதி இல்லை - வேறு
ஆலோசனை யில்லை; (ஆதலால்), இன்னே - இப்பொழுதே, வல்விரைந்து -
மிகத்துரிதப்பட்டு, எழுமின் - புறப்படுங்கள்,' என்றான் - என்று கூறினான்;
(எ- று.)

    தேர்வீரர் - அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் என
நால்வகைப்படுவர்.  அதிரதர் - முழுத்தேரரசர்; அவராவார் தாம் ஒரு
தேரில்ஏறிநின்று தம் தேர் குதிரை சாரதிகளுக்கு அழிவுவராமற்
காத்துப்பலவாயிரந்தேர்வீரரோடு வேறுதுணையில்லாமலே போர் செய்து
வெல்லும்வல்லமையுடையார்.  அவரிற் சிறிதுதாழ்ந்தவர் - மகாரதர்: இவர்,
பதினோராயிரந் தேர்வீரரோடு வேறுதுணையில்லாமலே போர்செய்து
வெல்லும்வல்லமையுடையார்.  சமரதர் - ஒரு தேர்வீரனோடு தாமும்
ஒருவராய்எதிர்க்கவல்லவர்.  அவ்வாறு எதிர்த்துப் போர்செய்யுமளவில்
தமது தேர்முதலியவற்றை இழந்துபோம்படியானவர், அர்த்தரதர்; இவர்கள்
இருவர்சேர்ந்தால் ஒரு சமரதனுக்கு ஒப்பாவார்.  இந்நால்வகையாருள்ளும்
அதிரதர்சிறந்தவராதலால், அவர்களையே தலைமையாகக் கூறினது.  முகில்