பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 231

 

நீதியினிருந்துதாழநிலவறைசமைத்தபின்னர்
ஆதிநூறாயிரம்போரரக்கரையதனுள்வைத்தான்.

     (இ -ள்.) மாதுலன் - மாமனான சகுனி, உரைத்த - சொன்ன,
மாற்றம் -வார்த்தையை, மருகனும் - மருமகனான துரியோதனனும், இசைந்து
-உடன்பட்டு [அங்கீகரித்து], கங்குல் போது இடை - அந்த
நடுராத்திரிப்பொழுதில்தானே, அனேக மல்லர் வருக என புகன்று - பல
மற்போர்வீரர்கள் வருவாராக வென்று கூறி, (வரவழைத்து), தானும்-, நீதியின்
இருந்து - (அவ்வாலோசனைக்குரிய) முறைமையிலே இருந்துகொண்டு, நில
அறை தாழ சமைத்த பின்னர் - நிலவறையை ஆழமாக உண்டாக்கினபின்பு,
ஆதிநூறு ஆயிரம் போர் அரக்கரை - பழமையான போரில்வல்ல
இராக்கதர்கள் லட்சம் பேரை, அதனுள் வைத்தான் - அந்நிலவறையினுள்ளே
இருத்தினான்; (எ - று.)

    மாதாவினுடன்பிறந்தவன், மாதுலன்.  நிலவறை - பூமிக்குள்
வெட்டப்படும் பள்ளம்.  'நூறாயிரம் பேரரக்கர்' என்றும் பாடம்.  நீதியின்
தாழஇருந்து - நியாயத்தினின்று கீழ்ப்பட இருந்து [வழுவி] என்றும்
உரைக்கலாம்.                                          (240)

181.

மல்லர்பப்பரவர்தம்மைமற்றதினிரட்டிவைத்தான்
வில்லுடைவீரர்தம்மைவேறதினிரட்டிவைத்தான்
பல்படைவல்லோர்தம்மைப்பதின்மடங்கதனில்வைத்தான்
அல்லிலோர்கடிகைதன்னிலறிவனையழைக்கவென்றே.

     (இ -ள்.) அறிவனை அழைக்க என்று - நுண்ணறிவுடைய கண்ணனை
(மறுநாள்) அழைக்கவேண்டுமென்று கூறி, (அங்ஙனம் வருகையிற்
பிடித்திடுதற்கு), அல்லில் ஓர் கடிகைதன்னில் - அவ்விராத்திரியில் ஒரு
நாழிகைப்பொழுதினுள்ளே, மல்லர் பப்பரவர் தம்மை - மல்லர்களையும்
பப்பரர்களையும், அதின் இரட்டி வைத்தான் - அவ்விராக்கதர்தொகையினும்
இரண்டு மடங்காக [இரண்டுலட்சம் பேரை] (அந்நிலவறையினுள்)
இருக்கச்செய்தான்; வில் உடை வீரர் தம்மை - வில்லையேந்திய வீரர்களை,
வேறு - தனியே, அதின் இரட்டி வைத்தான் - அத்தொகையினும்
இரண்டுமடங்காக [நாலுலட்சம் பேரை] வைத்திட்டான்; பல் படை
வல்லோர்தம்மை - பல ஆயுதங்களிலும் வல்ல சூரர்களை, அதனில்
பதின்மடங்கு வைத்தான் - அத்தொகையினும் பத்துமடங்காக [நாற்பது
லட்சம்பேரை] அங்கு இருத்தினான்; (எ - று.)

    பப்பரவர் - பப்பரநாட்டிலுள்ளவர்; இவர் - மிலேச்சசாதிவகை
யினுட்பட்டவர்.  மல்லர்பப்பரவர்தம்மை - மற்போர் வல்லவராகிய
பப்பரவரையென்றுமாம்.  இரட்டுதலையுடையது - இரட்டி:  இரட்டுதல் -
இரண்டாதல்; இ- கருத்தாப்பொருள்விகுதி.  கடிகை - கடிகா என்னும்
வடமொழியின் திரிபு;அது, இருபத்துநான்கு நிமிஷம் கொண்ட நேரம்.
'அழிக்க' என்றும் பாடம்.மற்று - அசை; பின்பு என்றுமாம்.       (241)