(இ -ள்.) (இங்ஙனம் சூரியன் உதித்தபின்பு), வேந்தர் யாவரும் - அரசர்களெல்லோரும், இருந்துயில்உணர்ந்து - பெரிய தூக்கம் தெளிந்து எழுந்து, இரவில் வரும் துயில் சற்றும் இலாத கண்ணான் வாழ்பெருங்கோயில் புக்கார் - இராத்திரி முழுவதும் இயல்பாகவருந் தன்மையதான தூக்கம்சிறிதும் பெறாத கண்களையுடைய துரியோதனன் வாழ்கிற பெரிய அரண்மனையை வந்து அடைந்தார்கள்; அநந்தன்போகம் பேர் அணைபெருந் துயில்துறந்த மாலும் - ஆதிசேஷனது உடம்பாகிய பெரிய சயனத்திலே நெடுங்காலம் யோகநித்திரை செய்தலைவிட்டு (இங்கு) அவதரித்த திருமாலாகிய கண்ணனும்,அருந்துயில் எழுந்து - (பிறர்க்கு) அருமையான அறி துயில் நீங்கிஎழுந்திருந்து, காலை அருங் கடன் முறையின் செய்தான் - உதயகாலத்திற்செய்தற்குரிய அரிய (ஸ்நாநம், ஸந்தியாவந்தநம் முதலிய) கடமையானஅநுஷ்டானங்களை முறைமைதவறாமற் செய்துமுடித்தருளினான்; (எ - று.) துரியோதனனை 'இரவில்சற்றும் வருந்துயிலிலாதகண்ணான்' என்றது, அவன் அவ்விராமுழுவதிலும் பெரிய சதியாலோசனையில் இருந்தனனாதலால். அநந்தனென்னும் வடசொல்லுக்கு,- (பிரளய காலத்திலும்) அழிதலில்லாதவனென்று பொருள்; ந + அந்த + அன் என்று பிரிக்க; அந்தம் - இறுதி. பாம்பினுடலுக்குப் போகமென்றுவடமொழியிற்பெயர்; இதனை யுடைமைபற்றி, பாம்பு - போகியென்றுஒருபெயர்பெறும். அநந்தம் போகம் பேர் அணை என்பதற்கு எல்லையில்லாதபேராநந்தத்தை யனுபவித்தற்குரிய சிறந்த திருப்பள்ளி மெத்தை யென்றும்உரைக்கலாம். (246) 187.-தூதுவர் வந்து அழைக்க,கண்ணன் துரியோதனனரண்மனை சேர்தல். மாதவனிருந்தகோயில்வந்தடிவணங்கிமன்னன் றூதுவராழியங்கைத்தோன்றலேதுளபமாலே யாதவகுலத்தோரேறேயெழுந்தருள்கென்றானின்றெம் மேதகுமரசனென்றார்முகுந்தனும்விரைந்துசென்றான். |
(இ -ள்.) (அப்பொழுது), மன்னன் தூதுவர் - துரியோதனனது தூதர்கள்,மாதவன் இருந்த கோயில்வந்து - திருமகள்கொழுநனான கண்ணன் எழுந்தருளியுள்ள (விதுரனது) மாளிகைக்கு வந்து, அடி வணங்கி - (கண்ணனது) திருவடிகளை நமஸ்கரித்து, (அவனை நோக்கி), 'ஆழி அம் கை தோன்றலே - சக்கராயுதத்தையேந்திய அழகிய திருக்கையையுடைய அரசனே! துளபம் மாலே - திருத்துழாய்மாலையையுடைய கண்ணபிரானே! யாதவகுலத்தோர் ஏறே - யதுவினது சம்பந்தமான குலத்து அரசர்கட்குச் சிங்கம்போலச் சிறந்தவனே!- இன்று - இப்பொழுது, எம் மேதகும் அரசன்- எங்களது மேன்மையுள்ள அரசனான துரியோதனன், எழுந்தருள்க என்றான்- (நீ தன்னிடம்) வந்தருளவேண்டுமென்று கூறினான்', என்றார் - என்று சொன்னார்கள்; முகுந்தனும் - திருமாலாகிய கண்ணனும், விரைந்து சென்றான் - துரிதமாகப் புறப்பட்டுப் போயருளினான்; |