பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 239

தியைநோக்கி) இப்பொழுது (சுமக்கலாற்றாது சிதைந்து) இறந்தோமென்று
கருதித் துன்பத்தை மிகுதியாக அடையவும், உலகு ஒன்றுபடும்படி நின்று
நிமிர்ந்தனன் - எல்லாவுலகங்களிலும் பொருந்தும்படி உயர்ந்து
நின்றருளினான்;(எ - று.) - என்றது, விசுவரூபங்கொண்டானென்றதாம்.

    அடுக்கு, மிகுதிவிளக்குவது.  உயர் அண்டர் -
எல்லாப்பிறப்புக்களுள்ளுஞ் சிறந்த தேவருமாம்.  துஞ்சுதல் - தூங்குதல்;
இறத்தலைத் துஞ்சுதலென்பது, மங்கலவழக்கு.  கீழ்ப்பாட்டில், 'அடி
அதலத்துறமுடி ககனத்துற' என்றதற்கேற்ப, முறைப்படுத்தாது, இப்பாட்டின்
முதலிரண்டடிகளை மாறுபட நிறுத்தியது, எதிர்நிரனிறைப்பொருள்கோள்.
அண்டர் - அண்ட கோளத்தின் மேலிடத்துள்ளவர்.  வஞ்சநா என்ற
வடசொல், ஈறு திரிந்தது.  இன்று துஞ்சினம் - விரைவுந் தெளிவும் பற்றிய
காலவழுவமைதி; வழா நிலையாயின், இன்று துஞ்சுகின்றனம் என நிற்கும்.
                                                      (252)

193.

மல்லரரக்கர்குலத்தொடுபப்பரர்வாளினர்வேலினர்போர்
வில்லினரிப்படிதுற்றநிலத்தறைமேவியவீரரெலாந்
தொல்லையிடிக்கயர்வுற்றுயிரிற்றுறுசுடிகையராவெனவே
கல்லெனவுட்கினர்தத்தமுடற்பலகால்கொடுதைத்திடவே.

     (இ -ள்.) (அப்பொழுது), -மல்லர் - மற்போர்வீரர்களும், அரக்கர்
குலத்தொடு - இராக்கதர் கூட்டமும், பப்பரர் - பப்பரநாட்டு வீரர்களும்,
வாளினர் - வாள்வீரர்களும், வேலினர் - வேல்வீரர்களும், போர் வில்லினர்
-போர் செய்தலில் வல்ல வில் வீரர்களும், (ஆக), இப்படி - இவ்வாறு, துற்ற
-நெருங்கியுள்ள, நிலத்து அறைமேவிய வீரர் எலாம் - நிலவறையினுட்
பொருந்தியிருந்த வீரர்களெல்லோரும், தத்தம் உடல் பல கால் கொடு
உதைத்திட - தங்கள் தங்கள் உடம்பைக் (கண்ணன் தனது) அநேகங்
கால்களைக்கொண்டு உதைத்திடுதலால், தொல்லை இடிக்கு அயர்வுற்று உயிர்
இற்று உறு சுடிகை அரா என - பழமையான [முதிர்ந்த] பேரிடிக்குச்
சோர்வடைந்து உயிரொழிந்து கழிகின்ற உச்சிக்கொண்டையையுடைய
பாம்புகள்போல, கல் என உட்கினர் - கல்லென்ற ஒலிபட அஞ்சினார்கள்;
(எ- று.)

    இடியோசைக்குப்பாம்புகள் அஞ்சியொடுங்கியழியுமென்று நூற் றுணிபு;
"விரிநிற நாகம் விடருளதேனும், உருமின்கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்"
என்ற நாலடியாரிலுங் காண்க; நிலத்தின் கீழ்ப்பிலத்தில் தங்குதல்பற்றி மல்லர்
முதலியோர்க்கு நாகங்களும், இவரையஞ்சுவித்து அழித்தல் பற்றித் திருமால்
திருவடிகளுக்கு இடியும் உவமையாதற்கு மிக ஏற்கும்.  கல்லென என்றது,
அப்பொழுது அவர்கள் அச்சத்தால் நடுங்கி வாய்குளறிப் பேரிரைச்சலிட்டதை.
பல கால் - விசுவரூபத்திற் கொண்டவை.  துற்ற - இறந்தகாலப் பெயரெச்சம்;
துறு - பகுதி; இரட்டித்துக்காலங் காட்டிற்று.  தொல்லை யிடி - துன்பந்தரும்
இடியுமாம்.                                               (253)