(இ -ள்.) கல்வி - படிப்பினாலே, தூய - (குற்றமற்றுச்) சுத்தமான, நெஞ்சு - மனம், இலாத - இல்லாத, அ சுயோதனன் - அந்தத் துரியோதனன், கழறிய - உறுதியாகச்சொன்ன, மொழி - அவ்வார்த்தையை, வில்விதூரன் - வில்வித்தையில் வல்ல விதுரன், கேட்டு - செவியுற்று, (துரியோதனனை நோக்கி), 'இ வேதியன் மொழிப்படி - இந்த அந்தணனது வார்த்தையின்படி, மேதினி வழங்காமல் - (பாண்டவருக்குப்) பூமியைக்கொடாமல், புல் விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும் வாசகம் கேட்கில் - இழிவான விதூஷகர்களைக் காட்டிலும் அறிவில்லாதவர்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பாயானால், செல்வி தூரியள் ஆய்விடும் - (உனக்குத்) திருமகள் தூரத்திலுள்ளவளாய்விடுவள் [விலகிப்போவாள் என்றபடி]; சுற்றமும் சேனையும் கெடும் - (உனது) பந்துவர்க்கமும் சேனைகளும் போரில் அழியும்,' என்றான் - என்று சொன்னான்; (எ - று.) இராவணன்போலப்படித்துக்கெட்டவனல்லாமல், துரியோதனன் படியாது கெட்டவனாதலால், 'கல்விதூயநெஞ்சிலா வச்சுயோதனன்' என்றார். தூயநெஞ்சிலாத எனவே, தீயநெஞ்சுடைமை அருத்தாபத்தியால் தானே பெறப்படும். விதுரனது வில் வல்லமை பிரசித்தம்: "வெற்றிவிதுரன் கைவில்லிருக்க மேதினியின் - மற்றவனை வெற்றி கொள்ளுமாறுண்டோ" என்னும் பாரதவெண்பாவினாலும் அறிக. விதூஷகர் - தமக்கு நேரிற் பகையில்லாதிருக்கையிலும் ஒரு பயனையுங் கருதாமல் தானும் பிறரும் நகைத்தலொன்றையே நல்ல பயனாகக்கொண்டு எப்பொழுதும் பிறரை நிந்தித்துத் திரியும் அவிவேகிகள், வி - மிகுதியாய், தூஷகர் - தூஷிப்பவர், பழிப்பவர் என்க. புல் விதூடகரினும் உணர்விலாதவரென்றது, கர்ணன் சகுனி துச்சாதனன் முதலியோரை. கல்வி தூய - மூன்றாம் வேற்றுமைத்தொகையில் வலி இயல்பாயிற்று. இனி, உம்மைத்தொகையாய், கல்வியுந் தூயநெஞ்சுமில்லாத என்றுமாம். விதூரனென்ற நீட்டல் விகாரம், எதுகைத்தொடை நோக்கியது. மேதினி என்ற சொல்லுக்கு - (திருமாலாற்கொல்லப்பட்ட மதுகைடபரென்னும் அசுரரது) உடற்கொழுப்பினால் நனைக்கப்பட்டதென்று காரணப்பொருள்; மேதஸ் - நிணம். செல்வி - செல்வங்களுக்கு உரியவள். இனி, தூரியளாய், விடும் என இரண்டாகக்கொண்டு, சிறிது சிறிதாகச் சேய்மையிற் சென்று நின்று பின்பு விட்டேயொழிவளென்றுங் கருத்துக்கொள்ளலாம். சுற்றம் - (சுப அசுபகாலங்களில் ஒருவனை வந்து) சூழுந்தன்மையதுபற்றி வந்த பெயர். சுற்றமென்னும் பால்பகா அஃறிணைப்பெயர் - ஆகுபெயர்ப்பொருளால் உயர்திணைப்பலர்பால் குறிப்பதாயினும், சொல்நிலைக்கு ஏற்ப, கெடும் என்னுஞ்செய்யுமென்முற்றைக் கொண்டது. (14) துரோணனும் கிருபனும் நற்புத்திகூறுதல். 15. | திரத்துவாய்மைநீதவறிமற்றவருடன்சேனையுந்திறலுங்கொண் டுரத்துவாளமருடற்றலோபெரும்பிழையுடன்றனையாமாகிற் சரத்துவாய்தொறுஞ்சோரிகக்கிடவிடுந்தனஞ்சயன்றனுவென்று பரத்துவாசனும்பகர்ந்தனன்கிருபனும்பகர்ந்ததேபகர்ந்திட்டான். |
|