திடுவார்கள்[இல்லாவிடின் அரிதென்றபடி]; அவர்பால் உனக்கும் அன்பு உண்டே - அப்பாண்டவர்பக்கல் உனக்கும் அன்புள்ளதன்றோ? (எ - று.) இது,அசுவத்தாமனைநோக்கிக் கண்ணன் அருளிச்செய்தது. இதில், அசுவத்தாமனது மிகுந்த பராக்கிரமம் விளங்கும். மற்று - அசை. (285) 226. | ஆயோதனத்திலடலரியேறனையான்றன்னையிவ்வாறு, மாயோனுரைத்துத் தன்விரலின்மணியாழியை மண்ணிடை வீழ்த் தான், சேயோனதனையெடுத்தவன்றன் செங்கைகொடுக்கவாங்காமற், றூயோயூர்கோள்பரிதிதனைச்சூழ்ந்ததகல்வான்மீதென்றே. |
இதுவும், மேற்கவியும் - குளகம். (இ -ள்.) இ ஆறு - இந்தப்படி, மாயோன் - கண்ணபிரான், ஆயோதனத்தில் அடல் அரி ஏறு அனையான் தன்னை - போரில் வலிமையையுடைய ஆண்சிங்கத்தைப் போன்றவனான அசுவத்தாமனை (நோக்கி), உரைத்து - கூறி, தன் விரலின் மணி ஆழியை - தனது கைவிரலிலுள்ள இரத்தினமிழைத்த மோதிரத்தை, மண்ணிடை வீழ்த்தான் - பூமியிலே (தானாகவிழுந்ததுபோலத்தோன்ற) நழுவவிட்டருளினான்; (அப்பொழுது), அதனை - அம்மோதிரத்தை, சேயோன் - (பலபராக்கிரமங்களில்) முருகக்கடவுள் போன்ற அசுவத்தாமன், எடுத்து - கையிலெடுத்து, அவன்தன் செம் கை கொடுக்க - அக்கண்ணபிரானது சிவந்தகையிலே கொடுத்திட, (அவ்வெம்பெருமானும்), வாங்காமல் - (அதனை உடனேகையில்) வாங்கிக்கொள்ளாமல் [வாங்குவதற்கு முன்பு என்றபடி],(அவ்வசுவத்தாமனை நோக்கி), 'தூயோய் - பரிசுத்தியுடையவனே! அகல்வான்மீது - பரந்த ஆகாயத்தில், பரிதிதனை - சூரியனை, ஊர்கோள் -மண்டலம், சூழ்ந்தது - சுற்றிற்று', என்று - என்று சொல்லி, (எ - று.) - 'வான்வாய் நோக்க' என மேற்கவியோடு தொடரும். இங்கேகண்ணன் வீழ்த்தின மணியாழியை அசுவத்தாமன் எடுத்து அவன்கையிற் கொடுக்கலுற்றான். இதிற் கண்ணன் செய்யும் மாயை மேற்கவியில் விளங்கும். அநேக யானைகளை எளிதில் ஒருங்கு அழிக்கவல்லசிங்கம்போலப் போரிற் பல அரசர்களை ஒருங்கே அழிக்கவல்ல வீரனென்றற்கு, 'அடலரியேறனையான்' என்றார். வட்ட வடிவமாக வுள்ளதுபற்றி, ஆழியென்று மோதிரத்திற்குப் பெயர். சேயோன் - சேய் என்னும் உயர்திணை ஒருமைப்பெயரின்மேல் ஆன் என்றஆண்பால் விகுதி தொடர்ந்து, ஆ ஓ வாயிற்று; இனி செய்யோன் என்பது - சேயோன் என விகாரப்பட்டதென்றுங் கொள்ளலாம். சேயோன் என்பதற்கு - செம்மைக் குணமுடையோன் என்று உரைத்து, கபடமில்லாதவனென்று கருத்துக்கொள்வாரும் உளர். ஊர்ந்துகொள்வது பற்றி, பரிவேஷத்திற்கு ஊர்கோள் என்று பெயர். முதனிலை திரிந்த தொழிலாகுபெயரென்றாவது, கருத்தாப்பொருள் விகுதி புணர்ந்து கெட்டுப் பகுதி விகாரப்பட்ட தென்றாவதுகொள்க; ஊர்தல் - சூழ்தல். (286) |