பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 267

235.வல்லார்வல்ல கலைஞருக்கு மறைநூலவர்க்குங்
                             கடவுளர்க்கும்,
இல்லாதவர்க்கு  முள்ளவர்க்கு  மிரந்தோர்தமக்குந்
                            துறந்தவர்க்குஞ்,
சொல்லாதவர்க்குஞ்  சொல்பவர்க்குஞ்
                    சூழுஞ்சமயாதிபர்களுக்கும்,
அல்லாதவர்க்கு மிரவிமகனரியதான மளிக்கின்றான்.

     (இ -ள்.) வல்லார் வல்ல கலைஞருக்கும் - வல்லவர்களுள்ளும்
வல்லவராகிய சரஸ்திரஞானமுடையோர்க்கும், மறை நூலவர்க்கும் -
வேதமாகிய நூலில்வல்ல பிராமணர்களுக்கும், கடவுளர்க்கும் தேவர்களுக்கும்,
இல்லாதவர்க்கும் - பொருளில்லாத ஏழைகளுக்கும், உள்ளவர்க்கும் -
பொருளுள்ள செல்வவான்களுக்கும், இரந்தோர் தமக்கும்-யாசித்தவர்களுக்கும்,
துறந்தவர்க்கும் - (சம்சாரப்பற்றுக்களை) விட்ட துறவிகளுக்கும்,
சொல்லாதவர்க்கும் சொல்பவர்க்கும் - (தமது குறையைச்)
சொல்லாதவர்களுக்கும் சொல்பவர்களுக்கும், சூழும் சமய அதிபர்களுக்கும் -
ஆராய்ச்சி செய்கின்ற வெவ்வேறு மதங்களுக்குத் தலைவர்களானவர்களுக்கும்,
அல்லாதவர்க்கும்-இவரொழிந்த மற்று மெல்லோர்க்கும், (சிறிதும் வேறுபாடு
இல்லாமல்), இரவி மகன் - சூரிய புத்திரனான கர்ணன், அரிய தானம்
அளிக்கின்றான்-(பிறராற் கொடுத்தற்கு) அரியனவான தானங்களைக்
கொடுக்கிறான்; (எ - று.) 

     இனி,வல்லார் வல்ல கலைஞருக்கு - வல்ல ஆசிரியரிடத்துக் கல்வி
பயின்று வல்லவரான மாணாக்கர்களுக்கு என்றும், மறைநூலவர்க்கு -
வேதங்களையும் சாஸ்திரங்களையும் அறிந்தவர்களுக்கு என்றும், துறந்தவர்க்கு
- (ஆதரவாகவுள்ளவர்களாற்) கைவிடப்பட்டவர்க்கு என்றும், (இரத்தலைத்)
துறந்தவர்களுக்கு என்றும், சொல்லாதவர்க்கு - தன்னைப் புகழ்ந்து
கூறாதவர்களுக்கு என்றும், சொல்பவர்க்கு - தன்னைப் புகழ்ந்து
கூறுபவர்களுக்கு என்றும், அல்லாதவர்க்கு - பகைவர்க்கு என்றும்
உரைப்பாருமுளர்.  பொருளிலாரையும் பொருளுடையாரையும், இல்லாதவர்
உள்ளவர்என்பது - உலக வழக்கு; "உடையார் முனில்லார்போல்" எனத்
திருக்குறளிலுங் காண்க.                              (295)

236.

மைந்தற்குறுதிநீவேண்டின்வல்லேமுனிவர்வடிவாகிச்
சந்தப்பனுவலிசைமாலைத்தானாகரனைவிரைந்தெய்தி
அந்தக்கவசகுண்டலங்களளிப்பாயென்றாலவனொன்றும்
இந்தப்புவியின்மறுத்தறியானுயிரேயெனினுமீந்திடுவான்.

     (இ -ள்.) நீ-, மைந்தற்கு உறுதி வேண்டின் - உன் மகனான
அருச்சுனனுக்கு நன்மையைப்பெற விரும்புவாயானால், வல்லே - விரைவிலே,
முனிவர் வடிவு ஆகி - முனிவர்க்குரிய உருவத்தையுடையவனாய், சந்தம்
பனுவல் இசைமாலை தான ஆகரனை - அழகிய பாடல்களிலமைந்த கீர்த்தி
வரிசையையுடைய தானகுணத்துக்கு இருப்பிடமான கர்ணனை, விரைந்து எய்தி
- துரிதமாக அடைந்து, அந்த கவச குண்டலங்கள் அளிப்பாய் என்றால் -
அவனுடம்பிலுள்ள கவசத்தையும் குண்டலங்களையுங் கொடுத்திடுவாயென்று
வேண்டி