பக்கம் எண் :

உலூகன் தூது சருக்கம் 27

போன்ற சௌரியதைரியங்களையுடைய பார்த்தனுக்கு இட்டு வழங்கப்பட்டது;
இது - உவமவாகுபெயரின்பாற்படும்: பார்த்தன் கருநிற முடையவனாதலால்
அவனுக்கு அருச்சுனனென்பது நிறம்பற்றி வந்த பெயரென்றல், பொருந்தாது;
இனி, "குருச்சுடர் மணிசெய் பச்சைக் கொழுந்துடற் பொலிவுநோக்கி,
யருச்சுனனென்பரீதென்னரும்பெயர் வந்த பான்மை" என்ற நல்லாப்பிள்ளை
பாரதச் செய்யுளைக்கொண்டு அருச்சுனனென்பது பசுமைநிறம்பற்றிவந்த
பெயரென்றலும் ஒன்று.  எவர் என்ற வினாப்பெயர், இன்மை குறித்து நின்றது.
கோடுமன்னுவில் என்பதை அருச்சுனனுக்கு அடைமொழியாக்கிவிட்டால்,
குனிக்க என்பதற்கு - வில்லையென்னுஞ் செயப்படுபொருள் வருவித்தல்
வேண்டும்.                                               (16)

கர்ணன் வீடுமனை நோக்கிக்கோபத்தோடு கூறுதல்.

17.

முன்னமேயுகிரிழந்தவெம்புலியெனமுரணழிமுனிமைந்தன்
றன்னைமற்றவனிடத்துநீகற்றவெஞ்சரத்தின்வென்றமையல்லால்
என்னசேவகங்கொண்டுநீயாரையுமிகழ்ந்துரைப்பதுவென்று
கன்னனுந்திறற்காங்கெயன்றன்னொடுகண்சிவந்துரைசெய்தான்.

     (இ -ள்.) (அதுகேட்டு), கண் சிவந்து - (கோபத்தாற்) கண்கள் சிவந்து,
கன்னனும் - கர்ணனும்,- 'உகிர் இழந்த வெம் புலி என - நகம் போகப்பெற்ற
கொடிய (கிழப்) புலிப்போல, முன்னமே முரண் அழி - முற்காலத்திலேயே
(தசரத ராமனால்) வலிமையொழிந்த, முனிமைந்தன் தன்னை - ஜமதக்நி
முனிவனது குமாரனாகிய பரசுராமனை, மற்று - பின்பு, அவனிடத்து நீ கற்ற
வெம் சரத்தின் - அவனிடம் நீ அறிந்துகொண்ட கொடிய அம்புகளால்,
வென்றமை அல்லால் - சயித்துவிட்டதேயல்லாமல், என்ன சேவகம் கொண்டு
- வேறு என்ன பராக்கிரமத்தால், நீ-, யாரையும் இகழ்ந்து உரைப்பது -
எல்லோரையும் அவமதித்துப் பேசுவது?' என்று-, திறல் காங்கெயன் தன்னொடு
- வலிமையையுடைய கங்காபுத்திரனான வீடுமனுடனே, உரை செய்தான் -
சொன்னான்; (எ - று.)

    வீடுமனைநோக்கி இங்ஙனம் கூறினன் கர்ணன் என்பதாம்.  கீழ் வீடுமன்
அருச்சுனனுக்கெதிரில் வில்வளைப்பாரில்லை யென்று கூறியதைத் தனக்கு
விஞ்சினவர் எவருமில்லை யென்ற செருக்கினால் எல்லா வீரரையுங்
கீழ்ப்படுத்தித் தன்னாலாகாத காரியத்தைப் பிறராலும் ஆகாததாகக்
கூறினதெனக் கொண்டு, கர்ணன் மிக வெகுண்டான்.  கர்ணன் தன்னிடம்
எவ்வளவு சாமர்த்தியம் உண்டோ அவ்வளவினும் மிக அதிகம் உள்ளதென்று
கருதிக் கர்வங்கொண்டவனாதலாலும், பாண்டவர்களிடத்தும் அவர்களுள்
முக்கியமாக அர்ச்சுனனிடத்தும் வெகுகாலமாக வைரங்கொண்டவனாதலாலும்,
அர்ச்சுனனை வீடுமன் மிகச் சிறப்பித்துப் பேசினதைப் பொறாமல்
கண்சிவப்பவனானான்.  மனிதர் தேவர் முதலாக யாவரையுந் திக்குவிசயஞ்
செய்து வென்ற இராவணனை எளிதிற் சிறையிலிட்ட கார்த்தவீரியார்ச்சுனன்
முதலாக நிலவுலகத்து அரசர்பலரையும் வேரறுத்த பரசுராமனை
இளமையிலேவென்றிட்ட தன்னால் ஆகாத