அலைத்துஉடல் படபோர்த்து - (அதனை) எடுத்துப் பிரித்து உதறித் தன் உடம்பிலே படும்படி போர்த்துக்கொண்டு, எதிர் - (அக்கர்ணனது) எதிரிலே, ஈன்ற தாய்ஆம் என - பெற்றதாய் இவளேயாம் என்னும்படி, இருந்தாள் - வீற்றிருந்தாள்; (எ - று.) அடாது- பொய்யுறவுகூறுதல். அடாது, படாது - எதிர்மறை ஒன்றன்பால் வினையாலணையும்பெயர்கள். "அறந்துறந்தென்று மடாதன செய்தாலார்கொலோ படாதனபடாதார்" என்றார் கீழ்ச் சடாசுரன் வதைச்சருக்கத்தும். 'அடாதுசெய்தவர் படாதுபடுவர்" என்பது ஒரு பழமொழி. எனும் மொழியென இயையும். இவள் பொய்த் தாயாயின் வீணே இறக்கலாகாது என்ற நல்ல கருத்தோடுங் கூறியதனால், "அருள்மொழி" எனப்பட்டது. தையல் - அழகுடையவர்க்குப் பண்பாகுபெயர். மையலிற்றவிர்ந்து - என்னாகுமோவென்ற சங்கையில்லாம லென்றபடி; இவள்இங்ஙனம் மையலிற் றவிர்ந்தது, கண்ணன் பேச்சிலுள்ள விசுவாசத்தால். படாம்- படமென்னும் வடசொல்லின் திரிபு; 'முகபடாம்' என்பதிலுங் காண்க.
இதுமுதற் பதினான்கு கவிகள் - பெரும்பாலும் இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள்: கீழ் 247 - ஆம் கவியும் இவ்வாறே. (311) 252.-அதுகண்டு வியந்தகர்ணனை நோக்கிக் குந்தி சிலகூறுதல். இருந்ததாயீன்றவன்றுபோலுருகி யிருதடங்கொங்கைபால் சொரிந்தாள், அருந்துவான்போல விரவிசேய்விரும்பியாதரத்துடன் புளகானான், புரிந்ததாயன்போடிறுகுறத்தழுவிப்பொன்முடி மோயினளுயிராப், பரிந்துநானன்றேயுனைவளர்த்தெடுக்கப் பாக்கியஞ்செய் திலேனென்றாள். |
(இ -ள்.) இருந்த தாய் - (இங்ஙனம் ஆசனத்தில்) வீற்றிருந்த தாயான குந்திதேவி, ஈன்ற அன்றுபோல்-பெற்ற அந்நாளிற்போல, உருகி - மனம் மிக அன்புகொண்டு, இருதட கொங்கைபால் சொரிந்தாள் - தனது பெரிய இரண்டு தனங்களினின்றும் பாலைச் சொரியவிட்டாள்; (அப்பொழுது), இரவி சேய் - சூரியபுத்திரனான கர்ணன், விரும்பி - (தாய்பக்கல்) அன்பு கொண்டு, அருந்துவான்போல - (அம்முலைப்பாலை) உண்பவன்போல, ஆதரத்துடன் - ஆசையுடனே, புளகு ஆனான் - உடம்பு மயிர் சிலிர்க்கப்பெற்றான்; புரிந்த தாய் - (இங்ஙனஞ்) செய்த தாயான அக்குந்தி, அன்போடு-, இறுகுற தழுவி - (அவனை) நன்றாக அணைத்துக்கொண்டு, பொன் முடி மோயினள் உயிரா - அழகிய அவனது உச்சியை மோந்துபெருமூச்சுவிட்டு, நான் உனை அன்றே பரிந்து வளர்த்து எடுக்க பாக்கியம் செய்திலேன் என்றாள் - 'நான் உன்னைப்பெற்ற அக்காலத்திலேயே அன்பு கொண்டு எடுத்துவளர்க்க நல்வினைப்பயன் பெற்றேனில்லை' என்று கூறினாள்; (எ - று.) |