பக்கம் எண் :

படையெழுச்சிச் சருக்கம் 297

இனிஐயிரண்டெண் என்ற தொடரில், முன்னது பண்புத்தொகையும் பின்னது
உம்மைத்தொகையுமெனக் கொண்டு பதினெட்டுத்தேசமென்றும் பொருள்
உரைக்கலாம்.  மண்டலமென்பதை - மண்தல மெனத் தென்மொழி யென்று
கொள்க.                                                (330)

7.பாங்கினால்வருமகுடவர்த்தனருடன் பட்டவர்த்தனருள்ளார்,
வாங்கும்வெஞ்சிலைமன்னவகுமரரின்மண்டலீகரினுள்ளார்,
தாங்குமாமொழிமந்திரிகளினிகற்றந்திரிகளினுள்ளார்,
ஓங்குநீள்கொடிப் பதாகினிதிரண்டவாறுன்னியாருரைக்கிற்பார்.

     (இ -ள்.) பாங்கினால் வரு - (பாண்டவர்பக்கல்) உரிமையால் வந்த,
மகுடவர்த்தனருடன் - கிரீடந்தரித்த அரசர்களோடு, பட்டவர்த்தனர் உள்ளார்
- (கிரீடமில்லாமல்) பட்டம் மாத்திரம் அணியும் அரசர்களாக உள்ளவர்களும்,
வாங்கும் வெம் சிலை - வளைந்த கொடிய வில்லையுடைய, மன்னவர்
குமரரின் - இராசகுமாரர்களுள்ளும், மண்டலீகரின் - சிற்றரசர்களுள்ளும்,
உள்ளார் - உள்ளவர்களும், தாங்கும் - (அரசர்களால்) ஏற்றுக்கொள்ளத்தக்க,
மா மொழி - சிறப்பான சொற்களையுடைய, மந்திரிகளின் - மந்திரிகளுள்ளும்,
இகல் தந்திரிகளின் - பராக்கிரமமுள்ள சேனைத்தலைவருள்ளும், உள்ளார் -
உள்ளவர்களும், (ஆகிய இவர்களுடைய), ஓங்கும் நீள் கொடி பதாகினி -
உயரவெடுத்த நீண்ட துவசங்களையுடைய சேனைகள், திரண்ட ஆறு -
(தம்மில்) ஒருங்குகூடிய விதத்தை, உன்னி - (இத்தன்மையதென்று) எண்ணி,
உரைக்கிற்பார் - சொல்லவல்லவர், யார் - (இவ்வுலகத்தில்) யாவருளர்?
[எவருமிலர் என்றபடி]; (எ - று.)

    மனத்தால் எண்ணுதற்கும் வாயாற் சொல்லுதற்கும்கூடாதபடி அளவிறந்த
சேனைகள் ஒருங்கே குவிந்தன வென்க.  பாங்கினால் - அன்பினால்
என்றபடி. மண்டலீகர் - நாற்பதுகிராமம் ஆள்பவர்.  ஒரு கோடி கிராமம்
ஆள்பவன்மகுடவர்த்தன னென்றும், மகுட வர்த்தனர் நாலாயிரவரை
வணக்கியாள்பவன்மண்டலீக னென்றும் கூறுவர் ஒருசாரார்.  "ஒருதலையாச்,
சொல்லலும் வல்லதமைச்சு", "அறனறிந்தான்றமைந்த சொல்லான்",
"தலைமகன் வெகுண்டபோதும், வெம்மையைத் தாங்கி நீதிவிடாது
நின்றுரைக்கும் வீரர்" என்றஅமைச்சிலக்கணத்தின்படி அரசன்
அங்கீகரிக்குமாறு சமயத்துக்கு ஏற்றஆலோசனைகளை உறுத்திக்கூற வல்லவ
ரென்பார் "தாங்குமா மொழிமந்திரிகள்" என்றார், மந்திரம் - ஆலோசனை,
அதனையுடையவன், மந்திரி. தந்திரி - சேனையையுடையான்; தந்திரம் -
சேனை.  'இயல் தந்திரி' என்றும்பாடம்.  பதாகிநீயென்னும் வடசொல்லுக்கு-
கொடிகளையுடையதென்றுபொருள்.  [பதாகா - கொடி]; இது காரணங்கருதாது
பெயர் மாத்திரமாய்நிற்றலால், 'ஓங்குநீள்கொடி' என விசேடிக்கப்பட்டது. (331)

8.-தருமபுத்திரன் வந்தஅரசரை எதிர்கொள்ளுதல்.

யானை தேர் பரி யாளெனுந் திறத்தினாலிலக்கணத் தெண்பட்ட,
சேனையேழுமக்குரோணிக டிரண்டன திரைக்கடலேழென்னச்,