மரபுநல்வாய்மையுந்தவறில்லார்' என்றார். இனி, செங்கண் என்பதில் கண் என்பதற்கு வாத்தியத்தில் அடிக்கப்படும் இட மென்றும், வாரினாற் கட்டப்படுகிற கண்களென்றும் பொருள் கொள்ளலாம்; "கடிப்பிடு கண் முரசம்" என்றார் நாலடியாரிலும். 'நினதென்றார்' என்ற பாடத்துக்குப் பன்மையொருமை மயக்கமாய், தனித்தனி நின்னுடையதென்க. எங்களாவி - ஒற்றுமைக்கிழமைப் பொருளில்வந்த ஆறாம்வேற்றுமைத்தொகை, மானமாவது - எப்பொழுதுந் தம் நிலையினின்று தாழாமையும், ஊழ்வினையால் தாழ்வு வந்தவிடத்து உயிர்வாழாமையுமாம். மரபு-அதன் சிறப்புக்குஆகுபெயர்.(335) 12.- தருமன் சுவேதனைச்சேனாபதியாக்கலும், இராவான் வீரம் பேசுதலும். சுற்றுமன்னவர்சொற்றசொற்களிற்பகைதொலைத்தனன் போலாகிச், செற்றுவார்கழற்சிவேதனைத் தன்பெருஞ்சேனையின் பதியாக்கி, மற்றைநாண்முரசறைந்தமர்குறித்தலு மரவமின்மகன்றெவ்வர், கொற்றவெம்படையனைத்துமோரம்பினாற் கொல்வனோர் தினத்தென்றான். |
(இ - ள்.) (தருமபுத்திரன்). சுற்று மன்னவர் சொற்ற சொற்களின் - (தன்னைவந்து) சூழ்ந்த அரசர்கள் கீழ்ச்சொன்ன வார்த்தைகளால், பகை தொலைத்தனன் போல் ஆகி - பகைவர்களை ஒழித்தவன் போலக் கவலை யற்றவனாய், செற்று வார் கழல் சிவேதனை - நெருங்கிய நீண்ட வீரக்கழலையுடைய சுவேதனென்னும் (விராடன் மூத்த) மகனை, தன் பெரு சேனையின் பதி ஆக்கி - தனது பெரிய சேனைக்குத் தலைவனாக நியமித்து, அற்றைநாள் - அந்நாளிலே, முரசு அறைந்து - பேரிகை முழங்கி, அமர் குறித்தலும் - போர் நிகழ விருப்பதை வெளிப்படுத்தினவளவில், (அப்பொழுது),- அரவம் மின் மகன் - (உலூபியென்னும்) நாககன்னிகையினது குமாரனான இராவான், 'தெவ்வர் கொற்றம் வெம்படை அனைத்தும் - பகைவர்களது வெற்றியையுடைய கொடிய சேனைகளையெல்லாம், ஓர் தினத்து - ஒரு நாளிலே, ஓர் அம்பினால் - ஒரு பாணத்தாலே, கொல்வான் - (யான்) கொன்றிடுவேன்,' என்றான்-என்று (வீரவாதங்) கூறினான்; (எ - று.) சுவேதன் பாண்டவசேனாபதியாயிருத்தற்கு ஏற்ற திறமையுடைய வனாதலைக் கீழ் வெளிப்பாட்டுச்சருக்கத்தில் "சிவன்றன்னை நோக்கிச் சிவேதன் தவஞ்செய்த வாறும், அவன்ற னருளாற் பலவாயுதம் பெற்றவாறும், இவன் தன் பகை செற்றதும் யாவு மியம்பியுள்ளங். கவன்றன்புறாமல் விராடன்றன் கவற்சி தீர்த்தான்" என்றதனாலுங் காண்க. தீர்த்த யாத்திரையாகப் புறப்பட்ட அருச்சுனன் கங்காநதியில் நீராடுகையில், அங்கு நீர்விளையாடவந்த நாககன்னிகைகளுள் உலூபி யென்பவள் அருச்சுனனைக்கண்டு காமுற்று அவனைப் பிலத்துவார வழியாய்த் தன்னுலகத்துக்கு அழைத்துச்சென்று அவனை மணஞ்செய்து கொண்டு இராவானென்னும் புத்திரனைப் பெற்றாள். இவன், தந்தையாகிய அருச்சுனனினும் பலமடங்கு பல பராக்கிரமங்களிற் சிறந்தவனாதலின் இங்ஙனங் கூறினான். கடில் |