பது கீழ்விராடபருவத்தில் நிரைமீட்சிச் சருக்கத்தின் வரலாறு. அப்பொழுது கர்ணன் அருச்சுனனை எதிர்க்கமாட்டாமல் தோற்றோடினன் என்பதைக் கீழ் அச்சருக்கத்தில் "இம்முறை வந்து வந்தெதிர்ந்து வெஞ்சமர், மும்முறை முறிதலும் முனிவன்மாமகன், அம்முறை முதுகிடும் அருக்கன்மைந்தனைத், தெம்முறைமையிற் சில வார்த்தை செப்புவான்" என்ற கவியாலும் உணர்க. போர்த் தொழிலையும் போர்க் குதிரை செலுத்துந் தொழிலையுஞ் சிறிதும் அறியாத அதைரியசாலியான உத்தரனென்னுஞ் சிறுவனைப்பேருக்குச் சாரதியாக வைத்துக்கொண்டு தானே சாரதியும் ரதியுமாக வேறுதுணையின்றித் தனியே வந்து போர் செய்த காலத்திலும் அருச்சுனனை வெல்லமாட்டாத நீயோ, போர்த் தொழிலையும் போர்க்குதிரை செலுத்துந் தொழிலையும் முழுவதுமறிந்த தந்திரசாலியும் மிக்க தைரியமுடையவனுமான கண்ணபிரானைச் சாரதியாக வைத்துக்கொண்டு பெருஞ் சேனையோடு வந்து அருச்சுனன் எதிர்த்துப் பெரும்போர் செய்யும்பொழுது அவனை வெல்வாய்? என்றவாறு. மா நெடு- ஒருபொருட்பன்மொழியாய், மிகப்பெரிய என்றலுமாம்; இனி, மா - குதிரை பூட்டிய எனினுமாம். நெருநல் - இறந்தகாலங் குறிக்கும் இடைச்சொல்; இங்கே, நெருநல் என்றது, மிகச் சில நாளுக்கு முன் என்றவாறு. முகத்தின் - போர்க்களத்தின் முன்னிடத்திலென்றபடி, அறிவுறா உத்தரன் என்றது, உணர்வு தோன்றாத மிக்கஇளம்பிராயத்தையுடையவனென்பதைக் குறிக்கும். உத்தரன் -மச்சதேசத்தரசனான விராடனது இளைய குமாரன்; மூத்தமைந்தன் பெயர்,சுவேதன், 'வயவாளிவெருநர்மேல் விடா விசயன்' என்றது, அவனது, தருமயுத்தத்தைக் குறிப்பிக்கின்றது. கீழ் நிரைமீட்சியில் "அரிவையர்வெஞ்சமரஞ்சுவோர் பெருங், குரவரென்றிவர்களைக் கோறல் பாவமே"என்றதனாலும், போரில் அஞ்சுபவர்மேல் அம்பு செலுத்துதல் அதருமமாதல்அறிக. 'என்று' என இறுதியில் வருவித்து, அடுத்த கவியில் 'புகல'என்பதனோடு இயைக்க. இங்கே 'வயவாளி வெருநர்மேல் விடா விசயன்'என்றதனால், நீ அவனை எதிர்த்து வெல்லமாட்டாது அஞ்சிப் புறங்கொடுத்துஓடுகையில் தருமம் நோக்கி அவன் உன்மேல் அம்புசெலுத்தாமையின், நீஒருகால் உய்தல் கூடியதேயன்றி, இன்றாயின், உயிர்த்திருக்கமாட்டாயென்றதாம். உத்தரகோக்கிரகண காலத்திலேயே ஒழிந்திருப்பா யென்றபடி. விசயனைநீயலால் வெல்ல வல்லவருண்டோ - விசயனை வெல்ல நின்னால் ஆகாது. ஆனிரை - ஒன்றன்கூட்டத் தற்கிழமைப்பொருளில் வந்தஆறாம்வேற்றுமைத்தொகை. தேரினை ஊர எனஇயையும். (19) பாண்டவர்க்குப் பாகமில்லையென்று துரியோதனன் கூற, உலூகன் பாண்டவரிடம் செய்தி கூறுதல். 20. | கங்கைமாமகனிவையிவைபுகலவுங்கன்னனைக்கசிந்துட்கொண் டங்கைகொட்டிநக்கிருந்தவந்தணனையுமவமதித்தெமதேபார் தங்கள்கானகந்தமதெனப்புகன்றனன்சர்ப்பகேதனனந்தப் பங்கயாசனமுனிவனுமீண்டுபோய்ப்பாண்டவர்க்கவைசொன்னான். |
|