பக்கம் எண் :

களப்பலியூட்டு சருக்கம் 321

அவர்களைவரவழைத்து 'சதுர்த்தசியை அமாவாசையாக்கித் தரவேண்டும்
என்றும், "தேவராவாருந் திசைபால ராவாரு, மூவராய் நிற்கின்ற மூர்த்தியுமாய்
- யாவருந்தான் கொந்தலருஞ் சோலைக் குரு நாட்டுப் பூசுரர்கள்,
அந்தணராலன்றோ வவர்' என 'பிராமணருச்சரித்த மந்திரமன்றோ, தெய்வம்;
உங்கள்பணி மறுக்குந் தன்மையுடையார் யாவருமுண்டோ?' என்றும்
உரைக்கக்கேட்டு அந்தணாளர் அந்த ஸ்ரீவாசுதேவன்பணியைமறாது
தலைமேற்கொண்டுஒருங்கு கூடி அநேக மந்திரங்களை உத்கோஷித்து
அமாவாசைக்குரியசடங்குகளுடனே சூரிய சந்திரரைத்துதிக்குமளவிலே,
அந்தச்சந்திராதித்தர்களுந்தம்மிற்கூடி 'இது என் கொலோ?' என்னுமளவில்,
சதுர்த்தசியும்அமாவாசையாயிற்று அப்பொழுது, எனப் பெருந்தேவனார்
பாரதத்துக்கூறியுள்ளதனால், அதற்கு ஏற்பவே இப்பாட்டுக்குப் பொருள்
கூறுதலும்பொருத்த முடைத்தென அறிக.                     (355)

3.-கண்ணன் முதலில் தன்னைப்பலியிடும்படி தருமனுக்குக்
கூறுதல்.

ஆயபின்றருமற்குற்றவாறெலாம்விளம்பியின்று
நீயவன்றனக்குமுன்னேகளங்கொளநேரினல்லாற்
போயவன்றன்னைவேறலரிதெனப்புகன்றுசெங்கண்
மாயவனென்னைவல்லேவன்பலியூட்டுகென்றான்.

     (இ -ள்.) ஆய பின் - (இவ்வாறு) ஆனபின்பு [திதி மாறின பின்னர்
என்றபடி], செம் கண் மாயவன் - சிவந்த திருக்கண்களையும் மாயையுமுடைய
கண்ணபிரான், உற்ற ஆறு எலாம் - நடந்த செய்கை களையெல்லாம்,
தருமற்குவிளம்பி-யுதிட்டிரனுக்குக் கூறி, 'நீ-, இன்று - இன்றைக்கு, அவன்
தனக்கு,முன்னே - அத்துரியோதனன் பலியூட்டுதற்கு முன்பே, களம் கொள-
களப்பலிகொடுக்க, நேரின் அல்லால் - உடன்பட்டாலல்லாமல், போய் அவன்
தன்னை வேறல் அரிது - (போரிற்) சென்று அத்துரியோதனனை வெல்லுதல்
(உனக்குக்) கூடாதாம்,' என புகன்று - என்று கூறி, 'என்னை வல்லேவல்
பலிஊட்டுக' என்றான் - என்னை விரைவிலே வலிய பலியாகக் கொடுக்கக்
கடவாய்' என்றுங் கூறினான்; (எ - று.)

    துரியோதனன் நமக்குமுன்னே பலிகொடுத்துவிட்டால், சயம்
அவனதேயாய்விடும்; ஆதலின் 'உத்தமவிலக்கணமுடையவனைப் பலிகொடுக்க
வேண்டும்' என்னும் முறைமைப்படி எல்லாவிலக்கணமும் அமைந்துள்ள
என்னையே இப்பொழுது துரிதமாகப் பலிகொடுத்திடுங்க ளென்று கபடமாகக்
கூறியருளினான்.  உற்றவாறு எலாம் - சகதேவன் நாள்வைத்ததும், இராவான்
துரியோதனனுக்குக் களப்பலிக்கு உடன்பட்டதும் முதலியன.  களம் -
களப்பலிக்கு ஆகுபெயர்.  கபடமாகக் கூறினது தோன்ற, மாயவன் என்றார். 
வல் - விரைவுகுறிக்கும் இடைச்சொல்.  ஏ - சாரியை: ஐகாரச் சாரியை
பெற்று,'வல்லை' என்றும் வரும்.                              (356)