பக்கம் எண் :

322பாரதம்உத்தியோக பருவம்

4-பாண்டவர் அதுகேட்டுவருந்துதல்.

தருமனுந்தம்பிமாருஞ்சாற்றியமாற்றங்கேட்டே
யுருமெறிபுயங்கம்போலவுள்ளழிந்துள்ளாய்நின்ற
கருமுகில்வண்ணன்பாதகமலத்தில்வீழ்ந்துவாழ்வும்
பொருமுனைவயமும்வேண்டேம்பொன்றுதலமையுமென்றார்.

   (இ - ள்.) (அப்பொழுது), தருமனும்-, தம்பிமாரும்- (அவனது)
தம்பியராகியவீமன்முதலிய நால்வரும், சாற்றிய மாற்றம் கேட்டே-(கண்ணன்)
கூறியஅவ்வார்த்தையைக் கேட்டமாத்திரத்திலே, உரும் எறி புயங்கம் போல-
இடிவிழப்பெற்ற பாம்புபோல, உள் அழிந்து-மனமகிழ்ந்து, உள் ஆய் நின்ற
கருமுகில் வண்ணன் பாத கமலத்தில் வீழ்ந்து - எல்லாப் பொருள்களுள்ளும்
வியாபித்து மறைந்து நின்ற காளமேகம்போலும் கரிய நிறத்தையுடைய அக்
கண்ணபிரானது திருவடித்தாமரைமலர்களிலேவிழுந்துநமஸ்கரித்து, '(இனி
நாங்கள்), வாழ்வும் பொரு முனை வயமும் வேண்டேம்-செல்வ
வாழ்க்கையையும் போர்க்களத்து வெற்றியையும் விரும்பமாட்டோம்;
பொன்றுதல் அமையும் - (நாங்கள்)  இறத்தலே தகுதி', என்றார் - என்று
கூறினார்கள்; (எ - று.)

   உன்னைக்கொன்று பலிகொடுத்தபின் அதனால்வரும் வாழ்வும் வெற்றியும்
எங்களுக்கு வேண்டா வென்றார்.  இங்ஙனங்கூறினது, கண்ணனை அவர்கள்
தம் உயிராகப் பரவித்திருந்த மிக்க அன்புடைமையா லென்க.  புயங்கம்-
புஜங்கமென்பதன் திரிபு; இதற்கு-(கால்களில்லாமையால்) மார்பினால் ஊர்ந்து
செல்வதென்றும், வக்கிரகதியாய்ச் செல்வதென்றும் பொருள்; புஜம் - வக்கிரம்:
புஜமென்னுந் தோளின் பெயர், மார்புக்கு இலக்கணையாம்.  இடியோசை
கேட்ட மாத்திரத்திற் பாம்புகள் அஞ்சி யொடுங்கியழியும் என்பது, நூற்றுணிபு,
"விரிநிற நாகம் விடருளதேனும், உருமின்கடுஞ்  சினஞ் சேணின்று முட்கும்"
என நாலடியாரிலும் காண்க.  உள் - உள்ளிடம்; அகத்துறுப்பான மனத்துக்கு
இடவாகுபெயர்.  சரீரத்திலுள்ள சீவான்மா இன்றியமையாததாய் மறைந்துநின்று
அதனைக் கொண்டு தொழில் களையெல்லாம் நடத்துதல்போல,
சர்வாந்தரியாமியாய்ப் பரமாத்மா எல்லாப் பொருள்களினுள்ளும் மறைந்து
நின்று தொழில் நடத்துதலால், 'உள்ளாய் நின்ற' என விசேடித்தது; "எள்ளு
மெண்ணெயும்போல், நீங்கா துலகத் துயிர்க்குயிராகி" எனத் திருவரங்கத்து
மாலையிலும், "திடவிசும் பெரிவளி நீர் நிலமிவைமிசைப், படர்பொருள்
முழுவதும் மாயவை யவைதொறும், உடன்மிசை யுயிரெனக் கரந்தெங்கும்
பரந்துளன்" எனத் திருவாய்மொழியிலும் வருதல் காண்க.  இனி, வண்ணம்
என்பதற்கு - குணமென்று பொருள் கொண்டால், தண்மையும் கைம்மாறு
கருதாது கருணைமழை பொழிதலுமாகிய இக்குணங்களிற்
கருமுகிலையொப்பவன் கண்ணனென்க. பாதகமலம் - முன்பின்னாகத்
தொக்குவந்த உவமைத்தொகை: வடநூல் முடிபு; பாதமாகிய கமலமென
உருவகமாக்கி யுரைத்தற்கு இங்கே இயைபின்று.                (357)