'இற்றைநாள் - இன்றைதினம், அதிரதர் மகாரதர் சமரதஆதியர் எவரொடும்- அதிரதர் மகாரதர் சமரதர் முதலியோரான எல்லோரோடும், கொற்றம் வஞ்சி மிலைச்சி - வெற்றியைக் கொடுப்பதான வஞ்சி மாலையைச் சூடி, குரு நிலத்திடை எகுக - குருக்ஷேத்திரத்திற் (போருக்குப் புறப்பட்டுச்) செல்வாயாக,'என்ன - என்று, இவை செப்பினான் - இவ்வார்த்தைகளைக் கூறியனுப்பினான்;(எ - று.) வசுதேவன் கண்ணனைப் பெற்ற தந்தை; தேவகியின் கணவன். 'ஆதியர்'என்றது, அர்த்தரதரை. அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் எனத்தேர்வீரர் நால்வகைப்படுவர். அதிரதர் - முழுத்தேரரசர்; அவராவார்- தாம்ஒரு தேரில் ஏறி நின்று தம் தேர் குதிரை சாரதிகளுக்கு அழிவுவராமற் காத்துப்பலவாயிரந் தேர்வீரரோடு எதிர்த்து வேறு துணையில்லாமலே போர் செய்துவெல்லும் வல்லமையுடையார். அவரிற் சிறிது தாழ்ந்தவர் - மகாரதர் இவர்பதினோராயிரந் தேர்வீரரோடு பொருபவர். சமரதர் ஒரு தேர் வீரனொடுதாமும் ஒருவராய் எதிர்க்க வல்லவர். அர்த்தரதர் - அவ்வாறு எதிர்க்குமளவில் தம் தேர் முதலியவற்றை இழந்து போம்படியானவர்; இவர் இருவர் சேர்ந்தால் ஒரு சமரதனுக்கு ஒப்பாவர். வஞ்சிப் பூ மாலை - பகைவர்மேற் பொரச் செல்வோர் அணிவதற்கு உரியது. 'இருந்து' என்றும் பாடம். இதுமுதற் பதினாறுகவிகள் - பெரும்பாலும் முதல் மூன்று ஐந்தாஞ் சீர்கள் மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள். (362) 2.- இதுவும், மேற்கவியும் -ஒருதொடர்: பாண்டவர் சேனைவீரரைச் சுவேதன்வகுத்தமையைக் கூறும். அதிரதாதிபர்தானும்வீமனும்விசயனுந்திறலபிமனுஞ் சிதைவிலாதசிகண்டிசாத்தகிதிட்டத்துய்மன்விராடர்கோன் மதுரமாமொழிதருமனோடிவாமாரதாதிபர்சமரதப் பதிகளானவர்யாகசேனனுதாமனுத்தமபானுவே. |
(இ -ள்.) தானும் - சுவேதனும், வீமனும் - வீமசேனனும், விசயனும்- அர்ச்சுனனும், திறல் அபிமனும் - போர் வல்லமையுடைய அபிமந்யுவும், (என்னும் இவர்), அதிரத அதிபர் - அதிரத் தலைவர்களாகவும், சிதைவு இலாத- (போரில்) வலியழிதலில்லாத, சிகண்டி-, சாத்தகி-, திட்ட துய்மன்- விராடர்கோன்-விராடராசன், மதுரம் ஆ மொழி தருமனோடு - இனிமையாகப் பேசுகிற யுதிட்டிரனுடன், இவர் - இவர்கள், மாரத அதிபர் - மகாரதத் தலைவர்களாகவும், யாகசேனன்-துருபதராஜன், உதாமன் - யுதாமந்யு, உத்தமபானு - உத்தமோசா, (என்னும் இவர்), சமரதர் பதிகள் ஆனவர்- சமரதத் தலைவர்களாகவும்; (எ - று) மேற்கவியிலுள்ள 'ஆக' என்பது, ஈண்டும் ஆங்காங்கு எடுத்துக் கூட்டத்தக்கது. வீமன் -பீமன்; பகைவர்க்குப் பயங்கரனானவனென்று பொருள். விசயன், பற்குனன், பார்த்தன், கிரீடி, சுவேதவாகனன், பீபற்சு, கிருஷ்ணன், சவ்வியசாசி, தனஞ்சயன், பாகசாஸநி, நரன், ஜிஷ்ணு |