(இ -ள்.) கங்கை மா மகன் - கங்காதேவியின் சிறந்த குமாரனான வீடுமன், இவை இவைபுகலவும் - இந்த இந்த வார்த்தைகளைச் சொல்லவும், (சிறிதும் லக்ஷ்யஞ் செய்யாமல்), சர்ப்ப கேதனன் - பாம்புக்கொடியையுடைய துரியோதனன், கன்னனை கசிந்து உள்கொண்டு - கர்ணன் வார்த்தையையே விரும்பிக் கொண்டாடி, இருந்த அந்தணனையும் - (அங்குத் தூதனாய் வந்து) வீற்றிருந்த உலூகமுனிவனையும், அம் கை கொட்டி நக்கு அவமதித்து - அகங்கைகளைத் தட்டிச்சிரித்துப் (பரிகாசஞ் செய்து) அலக்ஷ்யம் பண்ணி, 'பார் - இந்த ராச்சியம், எமதே - எங்களுடையதே; தங்கள் கான் அகம் - பாண்டவர்கள் தாங்கள் இவ்வளவு காலம் வசித்திருந்த காட்டினிடம், தமது - அவர்களுடையதேயாம், என - என்று, புகன்றனன் - சொன்னான்; (அதுகேட்டு உடனே), அந்த பங்கயம் ஆசனம் முனிவனும் - திருமாலின் திருநாபித் தாமரை மலரைத் தங்குமிடமாகவுடைய பிரம தேவனைப் போன்ற அவ்வுலூக முனிவனும், மீண்டுபோய் - திரும்பி (உபப்பிலாவியத்துக்கு)ச் சென்று, அவை - அங்கு நடந்த அவ்வரலாறுகளை, பாண்டவர்க்கு சொன்னான் - பாண்டுகுமாரர்களுக்குச் சொல்லியருளினான்; (எ - று.) 'இவையிவை' என்றது, கீழிரண்டு கவிகளிலுங் கூறியவற்றை, கசிந்து உட்கொண்டு - அன்புகொண்டு அங்கீகரித்து என்றபடி. அகம் + கை = அங்கை: "அகமுனர்ச் செவி கை வரின் இடையன கெடும்" என்னுஞ் சூத்திர விதி. இனி, அம் கை - அழகிய கை என்றுமாம். இராச்சியபாகம் வேண்டுகிற பாண்டவரிடத்து உள்ள அலட்சியத்தையும் பரிகாசத்தையும் அவர்களுக்குத் தூதனாய் வந்த உலூகன்மேற் காட்டினான் துரியோதனன். பங்கயம் - சேற்றில் முளைப்பது என்று பொருள்: காரணவிடுகுறிப்பெயர்; பங்கயமென்னுங்கொடியின் பெயர், அதன் மலரைக் குறித்தலால், பொருளாகுபெயர்: இதுபோல்வனவற்றை முதலுக்குஞ் சினைக்கும் பொதுவென்பாரு முளர். உலூகனுக்குப் பிரமன் உவமை - தூய்மைக்கும் சிறந்த அறிவுக்கும், எப்பொழுதும் வேதமோதுதற்கும், நல்லொழுக்கத்துக்கு மென்க. பங்கயாசன முனிவன் - உவமைத்தொகை. இவையிவை என்ற அடுக்கு, பன்மைப் பொருளது. இனி, பங்கயாசன முனிவன் என்பதற்கு - (யோகத்துக்குரிய அங்கங்கள் எட்டனுள் ஒருவகையிற் சேர்ந்த) பதுமாசனத்தையுடைய முனிவனென்றும் உரைக்கலாம்; பதுமாசனமாவது - இருதொடையின் மேலும் இரண்டு உள்ளங்காலையும் மாறி மேல்தோன்ற வைத்து உட்காரும் நிலை. (20) அருச்சுனனைத் தன்னிடம்வரும்படி கண்ணன் உலூகனிடம் செய்தி கூறியனுப்புதல். 21. | ஆங்கவர்க்கிவனவணிகழ்ந்தனவெலாமருந்தகையுடன்சொல்லி யீங்குவந்தெழில்யாதவற்கியம்பலும்யாதவன்மகிழ்வுற்று வாங்குவெஞ்சிலைவிசயனைவிரைவினில்வரவிடுகெனமீள வோங்குமாதவவுலூகனைப்போக்கினானவனும்வந்துரைசெய்தான். |
|