மருத்துவர்மைந்தர்தாள்' என்றும், தேகத்தில் பிற உறுப்புக்களெல்லாம் ஏற்றபடி உதவுதல்போலப் போரிற் படைத்துணையாக வந்த அரசரெல்லாம் சமயோசிதமாகத் தொழில் செய்தலால் 'அங்கண்மா முடியரசர் மற்றுள வவயவாதிகளாக' என்றும் உருவகப்படுத்தினார், முதல் மூன்றடிகளிற் கூறிய இவ்வுருவகம் ஈற்றடியிலுள்ள தற்குறிப்பேற்றத்திற்கு அங்கமாய்க்கலந்து வந்ததனால், உறுப்புறுப்பிக்கலவையணி; உருவகத்தை விளக்கும் 'ஆக' என்னும் உருபைப் பிறவிடத்தும் எடுத்துக் கூட்டுக. மார்பு என்பது - இடவாகுபெயராய் நெஞ்சைக் குறிப்பதெனக் கொண்டால், புறத்துறுப்பாகிய முகம் கை கால் முதலியன வெல்லாந் தொழில் செய்தற்கு அகத்துறுப்பாகிய நெஞ்சின் நினைப்பே காரணமாதல் போல, மற்றையோர் தொழில் செய்தற்கெல்லாம் பிரதானனான யுதிட்டிரனது கருத்தே காரணமாதலால், 'தருமன் மார்பு' என்றாரென்னலாம். தறுகண் என்பது போல, வெங்கண் என்பதும் அஞ்சாமையைக் குறிக்கும்; இனி, பகைவர்க்குப் பயங்கரமான கண்களையுடைய என்றுமாம். மருத்துவர் - மருந்தையுடையவர்; மருந்தின் தன்மையை அறிந்து வியாதிக்கு ஏற்றபடி தரவல்லவரென வைத்தியர்க்கு இது ஏதுப்பெயர்; மருந்து என்னும் மென்றொடர்ப்பகுதி வன்றொடராய், (சிறுபான்மை) உயிர் வர உகரம் கெடாது வகரவுடம்படுமெய் பெற்று நின்றது. அசுவிநீ தேவர் தேவ வைத்தியராதலால், 'மருத்துவர்' எனப்பட்டார். அங்கண்- அவ்விடத்திலுள்ள எனினுமாம். மற்றுள என்பதை அரசரோடுங் கூட்டுக. தங்கள் பூமி - தங்களுக்கு உரிய போர்க்களமுமாம். 'விண்மருத்துவர்'என்றும் 'அவயவத்திரளாகவே' என்றும் பாடம். (377) வேறு. 17.-துரியோதனன்வீடுமனுக்குச் சில கூறுதல். இங்கிவர்வயப்படைகுறித்தகுருபூமியிடையிவ்வகையெழுந்த தினிமேல், அங்கவர்சயப்படையெழுச்சியுரைசெய்குவமருந்திதிமயக்கி விரையக், கங்குலினழைத்துரக கன்னிமகனைப்புகல்களப்பலிகொடுத் தனரெனச், செங்கணரவத்துவசமீளியு முணர்ந்துதனசேனைமுதல்வற் குரைசெய்வான். |
(இ -ள்.) இங்கு - இந்தப்பக்கத்தில், இவர் - இப்பாண்டவரது, வயம்படை - வெற்றியைத்தரவல்ல சேனை, குறித்த குரு பூமியிடை - (போர்செய்யும் இடமாக இருதிறத்தாரும்) குறித்த குருக்ஷேத்திரத்திலே, இ வகைஎழுந்தது - இவ்வாறு (போருக்குச்) சித்தமாய் நின்றது; இனிமேல்-, அங்கு -அந்தப் பக்கத்தில், அவர் - அத்துரியோதனாதியரது, சயம் படை - வெற்றியைத் தரவல்ல சேனை, எழுச்சி - (போருக்கு) எழுந்த தன்மையை, உரைசெய்குவம் - கூறுவோம்; அரு திதி மயக்கி - (மாற்றற்கு) அரிய திதியை மாற்றி [சதுர்த்தசியை அமாவாசையாக்கி], விரைய - விரைவாக [தம்மினும் முற்பட என்றபடி], உரககன்னி மகனை - நாககன்னிகை குமாரனான இராவானை, கங்குலின் அழைத்து - இரவிலே கூப்பிட்டு, புகல் களம் |