கடவுள் வணக்கம். 1. | அராவணைதுறந்துபோந்தன்றசோதைகண்களிப்பநீடு தராதலம்விளங்கவெண்ணெய்த்தாழிசூழ்தரநின்றாடிக் குராமணங்கமழுங்கூந்தற்கோவியர்குரவைகொண்ட புராதனன்றனையேயேத்தும்புனிதர்தாள்போற்றிசெய்வாம். |
(இ -ள்.) அரா அணை - ஆதிசேஷனாகிய சயனத்தை, துறந்து-விட்டு, போந்து - (வடமதுரையில் கண்ணனாக) வந்து அவதரித்து, அன்று - அக்காலத்தில், அசோதை கண் களிப்ப - (தன்னைவளர்க்கிற தாயாகிய) யசோதைப் பிராட்டி கண்களாற்கண்டு ஆனந்தத்தை யடையவும், நீடு தராதலம் விளங்க - நீண்ட பூலோகத்தினிடம் செழிப்பையடையவும், வெண்ணெய் தாழி சூழ்தர நின்று ஆடி - வெண்ணெய் வைக்கும் பாத்திரத்தைச் சூழ்ந்து கூத்தாடி, குரா மணம் கமழும் கூந்தல் - குராவென்னும் மரத்தின்மலர் நறுமணம் வீசப்பெற்ற தலைமயிரையுடைய, கோவியர் - இடைப்பெண்களுடனே, குரவைகொண்ட - குரவையென்னுங் கூத்தை ஆடியருளின, புராதனன் தனையே - மிகப் பழையவனான திருமாலையே, ஏத்தும் - (எப்பொழுதும்) வணங்குகின்ற, புனிதர் - பரிசுத்தர்களான அடியார்களது, தாள் - திருவடிகளை, போற்றி செய்வாம் - (யாம்) வணங்கித் துதித்தல் செய்வோம்; (எ- று.) சர்ப்பங்களுக்குத்தலைவனான ஆயிரந்தலைகளையுடைய ஆதிசேஷன் திருமாலுக்குப் படுக்கையாதலை "சென்றாற் குடையா மிருந்தாற் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும், புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும், அணையாம் திருமாற்கு அரவு" என்ற பொய்கையாழ்வார் பாசுரத்தாலும் அறிக. 'அராவணை துறந்துபோந்து' என்றது, "ஆதியஞ் சோதியுருவை யங்குவைத்து இங்குப்பிறந்த" என்றபடியே திருப்பாற்கடலில் தமது மூலகாரணமான வடிவம் நிற்க, தேவர்கள் வேண்டுகோளால் அதில் நின்று அமிசமாய் இங்கே அவதரித்ததை. இங்கு அவதரித்தவிடத்தில் ஆதிசேஷன் பலராமனாகத் தோன்றி உடன் இருந்தாலும், தமக்கு ஏற்ற திருப்பள்ளி மெத்தையாகும் தன்மை இல்லையாதலால், 'அராவணை துறந்து' என்றது. அசோதை - (தனது நற்குண நற்செய்கைகளால் தான் பிறந்த குலத்துக்கும் புகுந்த குலத்துக்கும்) புகழைத் தருபவளென்று பொருள்; இவள் - வடமதுரைக்குச் சமீபத்திலுள்ள கோகுல பிருந்தாவனம் எனப்படுகிற திருவாய்ப்பாடியிலிருக்கிற இடையர்களுக்கெல்லாந் தலைவரான நந்தகோபர்க்கு மனைவி. வசுதேவரும் தேவகியும் கம்சனால் சிறையில் இருத்தப்பட்டுத் தளைபூண்டிருக்கையில், திருமால் தேவகியினிடம் எட்டாவது கருப்பத்தில் கண்ணனாய் அவதரிக்க, அக்குழந்தையைக் கம்சன் கொன்றுவிடக் கூடுமென்ற அச்சத்தால் தாய் தந்தையர் அத்தெய்வக் குழவியின் அனுமதிபெற்று, அந்தச் சிசுவை அது பிறந்த நடுராத்திரிலேயே நந்தகோபரது திருமாளிகையிலே இரகசியமாகக் கொண்டு சேர்த்துவிட்டு அங்கு அப்பொழுது யசோதைக்கு மாயையின் அமிசமாய்ப் பிறந்திருந்ததொரு பெண் குழந்தையை எடுத்துக் |