பக்கம் எண் :

அணிவகுப்புச் சருக்கம் 353

     (இ -ள்.) (துரியோதனாதியரது), பொரு படை - போர்செய்ய வல்ல
(நடுவிலுள்ள) சேனைகளும், கொடி படை - முன்னனிச் சேனைகளும், புறம்
படு பெரு படை - பின்னே வருகிற பெரிய [பின்னணிச்] சேனைகளும், குரு
பூமி - குருசேக்ஷத்திரத்தில், புகுந்து உற - போய்ச் சேர, (இவ்வாறு),
இருபடையும் - (பாண்டவகௌரவரது) இருதிறச் சேனைகளும், சுர அசுரர்
எதிர்ந்து பொரு பூசல் என - தேவர்களும் அசுரர்களும் (தம்மில்)
எதிரிட்டுச்செய்யும் போர்போல, உடன் ஒத்து நெருங்கின - விரைவாக
ஒருங்குஅடர்ந்தன; (இங்ஙனம்), ஏழு உலகமும் வரு படை - ஏழு
தீவுகளிலும்பொருந்தின சேனைகள், ஒரு படை என - ஒரே திரளாக, உரகன்
படம் ஓர்ஆயிரமும் நொந்து உரம்நெரிய - (கீழிருந்து பூமியைத் தாங்கும்)
ஆதிசேஷன்(பாரமிகுதியால்) தனது ஆயிரம் படங்களும் வருந்தி மார்புஞ்
சிதையும்படி,நிலத்தினிடை வந்த அளவில் - குருசேஷத்திரத்திலே
[யுத்தக்களத்திலே]வந்தமாத்திரத்தில், உததி வையம் - உவர்க்கடல் சூழ்ந்த
இந்தச் சம்பூத்துவீபம்,வேறு எனது ஆய்முடியும் - வேறே எத்தன்மையதாய்
முடியும்? (எ - று.)

    என்றது, ஏழுதீவுச் சேனைகளும் ஒரு தீவில் ஓரிடத்தில் ஒருங்கு
திரளவே அப்பூமி அதிபாரத்தால் மிகத்தளர்ந்தது என்றவாறாம். பாண்டவரது
சேனைக்குத் தேவசேனையும், துரியோதனாதியரது சேனைக்கு அசுர
சேனையும் உவமையாம்.  உரம் நெரிய - வலிமை யொழிய என்றுமாம். உததி
- நீர் தங்குமிடம்; உதம்-நீர்; உதக மென்பதன் விகாரம்.  'வந்தளவிலேயுததி'
என்றும் பாடம்.                                    (391)

31-இருதிறத்துச் சேனைமுழுவதையும்அழிக்க எவ்வளவு
நாள்செல்லும்  என்று துரியோதனன் வீடுமனை வினாவுதல்.

எண்ணறுபரப்பினிடையோசனைகளத்தினிடையிருபடையு
                                 நிற்பவெவருந்,
துண்ணெனவெருக்கொள முனின்றருள்பகீரதிசுதன்றனை
                                வியாளதுவசன்,
கண்ணெதிர்நிரைத்தபடையாவையுமுருக்கியுயிர்கவரவெதுநாள்
                                 செலுமெனப்,
பண்ணளிநெருக்கொழிய  மாதரிருகண்ணளிபடாததொடைமீளி
                                   பகர்வான்.

    (இ-ள்.) (இவ்வாறு) களத்தினிடை - போர்க்களத்திலே
[குருசேக்ஷத்திரத்திலே], எண் அறு யோசனை பரப்பினிடை - அளவில்லாத
[மிகப்பலவான] யோசனையளவுகொண்டபரந்தஇடத்திலே, இருபடையும் -
இருதிறத்துச் சேனைகளும், நிற்ப - (போருக்குச் சித்தமாய்) நிற்க,
(அப்பொழுது), வியாள துவசன் - பாம்பையெழுதின கொடியையுடைய
துரியோதனன், எவரும் துண்ணென வெருகொள முன் நின்றருள் பகீரதி
சுதன்தனை - (கண்டவர்) எல்லோரும் திடுக்கிட்டு அச்சமடையும்படி (தனது
சேனையின்) முன்னிடத்திலே (தன்னிடத்துக்) கருணையோடு
(முதற்சேனாதிபதியாய்) நிற்கின்ற கங்கையின் குமாரனான வீடுமனைநோக்கி,
கண்எதிர் - (நமது) கண்ணுக்கு எதிரிலே, நிரைத்த - அணிவகுக்கப்பட்டுத்
திரண்டுள்ள, படையாவையும் - சேனைகளெல்லா வற்றையும், முருக்கி -
அழித்து, உயிர் கவர - உயிரை வாங்குவதற்கு [கொல்ல], எதுநாள்செலும் -