இதில், அவரவர்க்குப் போர்த்திறத்து உள்ள தாரதமியம் [ஏற்றத்தாழ்வு] விளங்குவது காண்க; உபநிஷதம் - வேதத்தின் சாரமான பாகம்; வேதத்தின் முடிவென்றும், பிரமகாண்டமென்றுங் கூறப்படும்; இது - பகவானைப்பற்றிக் கூறுவது. புரந்தரன் - (பகைவரது) பட்டணங்களை (அல்லது) உடம்புகளை அழிப்பவன்; புரம் - ஊரும் உடலுமாம். (393) 33.-எதிர்ப்பக்கத்துச்சேனையிலுள்ளவர் யாவரும் தனக்கு நெருங்கிய உறவினராயிருந்தது கண்டு அருச்சுனன் கலங்குதல். யானையொடுதேர்புரவியாளிவையநேகவிதமெண்ணரிய தானையுடனே, சேனைமுதலாய்முனையினின்றருள்பிதாமகனுமற்றுளசெழுங் குரவருந், தானைநெடுவாரியிடைதேரிடையருக்கனென நின்றதுரியோ தனனும்வான், மீனைநிகர்கேளிருமணிந்தநிலைகண்டுருகிவிபுதபதி மைந்தன் மொழிவான். |
(இ -ள்.) யானையொடு - யானைகளும், தேர் - தேர்களும், புரவி - குதிரைகளும், ஆள் - காலாட்களும், இவை - என்னும் இவற்றாலாகிய, அநேகம் விதம் - பலவகைப்பட்ட, எண் அரிய - அளவிட வொண்ணாத, தானையுடனே - சேனைகளுடனே, சேனை முதல் ஆய் முனையில் நின்றருள் பிதாமகனும் - சேனைத் தலைவனாய்ச் சேனாமுகத்தில் நின்றருள்கிற (தன்பெரிய) பாட்டனான வீடுமனும், மற்றுமுள செழு குரவரும் - (துரோணாசாரியன் கிருபாசாரியன் அசுவத்தாமன் முதலாக) மற்றுமுள்ள சிறந்தபெரியோர்களும், தானை நெடுவாரியிடை தேரிடை அருக்கன் என நின்றதுரியோதனனும் - சேனையாகிய பெரிய கடலிலே தேர்மீது சூரியன்போலநின்ற துரியோதனனும், வான் மீனை நிகர் கேளிரும் - நட்சத்திரங்களையொத்த [அநேகரான] (சல்லியன் துச்சாதனன் விகர்ணன் சயத்திரதன் சகுனி முதலான) உறவினர்களும், அணிந்த - வரிசை வரிசையாக நின்ற, நிலை - நிலையை, கண்டு - (எதிரிற்) பார்த்து, விபுதபதி மைந்தன் - தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனது புத்திரனான அருச்சுனன், உருகி- (இவர்களோடு எங்ஙனம் போர் செய்வதென்று) மனங்கரைந்து, மொழிவான்- (கண்ணனை நோக்கிக்) கூறுவான்; (எ - று.) எதிர்வந்து நின்ற வீரர்யாவரும் பாட்டனும் அண்ணன் தம்பி மாரும் மாமனும் மற்ற உறவினரும் கல்விபயிற்றிய ஆசாரியரும் நண்பர்களுமாக விருக்கக் கண்டு அருச்சுனன் மனம் மாறிக் கூறுகிறான். குரவர் - குரு என்பதன் பன்மையான, குரவ: என்னுஞ்சொல் ஈறு திரிந்தது, வாரி - நீர்; கடலுக்கு இலக்கணை. அளவிறந்த பரப்பும் ஆரவாரமும் அணியணியாக வருதலும் அச்சந்தருதலும் பற்றிக் கடலைச் சேனைக்கும், கடலினிடையில் தேரின் மீதுசிறந்துவிளங்குதல் பற்றிச் சூரியனைத் துரியோதனனுக்கும், அளவிறந்து நெருங்கிவிளங்குதல் பற்றி நட்சத்திரங்களைச் சுற்றத்தார்க்கும் உவமை கூறினார். (394) |