34.-உற்றாரைக் கொல்லப்பின்வாங்கி அருச்சுனன் போர் செய்யமாட்டே னெனல். நின்றமர்தொடங்கநினைகிற்பவர்பிதாமகனுநீள்கிளைஞருந்துணை வருங், கொன்றிவரைவாகுவலியிற்கவர்வதித்தரணிகொள்பவனு மென்றுணைவனே, யென்றுபலபேசியதிபாதகமெனக்கருதியான்மலைவுறே னினியெனா, அன்றுவசுதேவன்மகனோடுரைசெய்தானமரிலவனுமிவ னோடுரைசெய்வான். |
(இ -ள்.) 'நின்று - (எதிரில்) நின்று, அமர் தொடங்க - போரைத் தொடங்கிச்செய்ய, நினைகிற்பவர் - எண்ணியிருப்பவர், பிதாமகனும் - பாட்டனும், நீள் கிளைஞரும் - மிக்க உறவினரும், துணைவரும் - அண்ணன் தம்பிமார்களும், (ஆவர்); இவரை - இவர்களை, வாகு வலியின் - தோள்வலிமையால், கொன்று -, கவர்வது - பறித்துக்கொண்டு அடையப்படுவது, இ தரணி - இந்தப் பூமியாம்; கொள்பவனும் - (அதனை) அடைபவனும் எண் துணைவனே - எனது தமையனே,' என்று -, பலபேசி - அநேக வார்த்தைகளைச் சொல்லி, அதி பாதகம் என கருதி - (இவர்களைக்கொல்வது) மிகப்பாவமென்று எண்ணி, இனி யான் மலைவு உறேன்எனா - இப்பொழுது நான் போர்செய்ய மேற்கொள்ளேனென்று, அன்று -அப்பொழுது, அமரில் - யுத்தகளத்தில், வசுதேவன் மகனோடு - வசுதேவபுத்திரனான கண்ணனுடனே, உரை செய்தான் - (அருச்சுனன்) கூறினான்;அவனும் - அந்தக்கண்ணபிரானும், இவனோடு - இவ்வருச்சுனனோடு, உரைசெய்வான் - (அதற்கு உத்தரங்) கூறியருளுவான்; (எ - று.)-அதனை, மேல்வீட்டுமபருவ முதற்போர்ச்சருக்கத்தில் இரண்டாங்கவிமுதல் ஆறுகவிகளிற்காண்க. 'உரைசெய்தான் விசயன்' என்றும் பாடம். (395) அணிவகுப்புச்சருக்கம் முற்றிற்று. உத்தியோகபருவம்முற்றுப்பெற்றது. ---- **** ---- |