பக்கம் எண் :

வாசுதேவனைப்படைத்துணையழைத்த சருக்கம் 39

தொறுங் கலந்துநின்ற'என்றது - ஸர்வாந்தர்யாமியாய் எல்லாப்
பொருள்களிலும் மறைந்துநின்று தொழில்செய்பவனென்றபடி:  சரீரத்தினுள்
ஜீவாத்மா இன்றியமையாததாய் மறைந்து நின்று அதனைக்கொண்டு
தொழில்களையெல்லாம் நடத்துதல்போல, அந்தச் சீவாத்மாவினுள்ளும்
பரமாத்மா இன்றியமையாது மறைந்து நின்று தொழில்களையெல்லாம்
நடத்துகின்றனனென்பது நூற்கொள்கை.  "திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை,
படர்பொருள் முழுவதுமாயவை யவைதொறும், உடல்மிசையுயிரெனக்
கரந்தெங்கும் பரந்துளன், சுடர்மிகு சுருதியுளிவையுண்டசுரனே" என்னும்
திருவாய் மொழியையும் காண்க.  ஆகி - உவமவுருபு.  இனி, 'ஸர்வம்
விஷ்ணுமயம் ஜகத்' என்றபடி காணப்படுந் தோற்றமுடைய உடம்பும் உயிரும்
என்ற அனைத்தின் வடிவமாய் எனினும் அமையும்.  'வளமதில்' என்ற
பாடத்துக்கு - அழகிய மதிலென்க.  மூன்றாமடியிற்கூறியதுபோன்ற
திருமாலுக்குஉரிய அடைமொழிகள், அவனது அவதார விசேஷமான
கண்ணனுக்கும் பொருந்தும்.  எங்கெங்கும் என்ற அடுக்கு - பன்மைபற்றியது.
நீதி தவறாத அரசாட்சி கோணுதலில்லாத கோல் போலுதலால், அதனைச்
செங்கோல் என்றது - உவமவாகுபெயர்; இதன் எதிர்மொழி - கொடுங்கோல்;
வளைவான கோல்போல நீதிகோணிய தென்பதாம்.  ஆளுகைகைக்
கோலென்றும், கட்டளையைச் சக்கரமென்றுங் கூறுதல் - கவிமரபு.       (24)

இதுமுதல் நான்குகவிகள் - துவாரகாபுரியின்வருணனை:
அவற்றுள் இம்முதற்கவி - மதிலின் சிறப்பைக் கூறும்.

4.

மாடநீள்வீதிமூதூர்வயங்குமாமதிலின்தோற்றம்
ஏடவிழ்துளபமாலங்கிருந்தனனென்றுகேட்டுச்
சேடன்வந்தநந்தகோடிசெங்கதிர்மணியின்பத்திச்
சூடிகாமகுடத்தோடுஞ்சூழ்ந்ததோர்தோற்றம்போலும்.

     (இ -ள்.) மாடம் - பெரிய மாளிகைகளையுடைய, நீள் - நீண்ட, வீதி -
தெருக்களையுடைய, முது ஊர் - பழமையான துவாரகாபுரியின் புறத்தில்,
வயங்கும் - விளங்குகின்ற, மா - பெரிய, மதிலின் - மதிலினது, தோற்றம் -
காட்சி, (எத்தன்மையதெனின்),-சேடன் - (திருமாலுக்குச் சயநமான)
ஆதிசேஷன், ஏடு அவிழ் துளபம் மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு -
இதழ்கள் விரிந்த திருத்துழாய் மாலையையுடைய திருமால் அந்நகரத்தில்
(கண்ணனாய்) எழுந்தருளியிருக்கிறானென்று செவியுற்றறிந்து, அநந்த கோடி -
அநேக கோடிகளான, செம் கதிர் மணியின் பத்தி சூடிகா மகுடத்தோடும் -
சிவந்த ஒளிபொருந்திய மாணிக்கங்களின் வரிசைகளோடு கூடிய உச்சிக்
கொண்டையையுடைய (தனது ஆயிரம்) முடிகளுடனே, வந்து சூழ்ந்தது ஓர்
தோற்றம் - வந்து சூழ்ந்ததாகிய ஒருகாட்சியை, போலும் - ஒக்கும்; (எ - று.)

     மதிலினதுவளைவு பருமை நீட்சிகளுக்கு - ஆதிசேஷனது உடம்பின்
வளைவு பருமை நீட்சிகளும், நாஞ்சில் முதலாக மதிலின்