பக்கம் எண் :

வாசுதேவனைப்படைத்துணையழைத்த சருக்கம் 41

     திருப்பாற்கடல்தனது நடுவிற் பள்ளிகொள்ளுகின்ற திருமால்
அவ்விடத்தைவிட்டு இந்தத் துவாரகாபுரியில் வந்திருக்கிறா னென்பதைக்
கேள்வியுற்று இங்குத்தானே வந்து இந்நகரத்து மதிலைச் சூழ்ந்தது
போன்றுள்ளது, அந்தத் துவாரகாநகரியின் மதிலைச் சூழ்ந்துள்ள அகழி
யென்க.  இதுவும் தற்குறிப்பேற்றவணி.  அவ்வகழி நீரின் ஆழ்ச்சி, அகற்சி,
நீட்சி, தெளிவு என்பவற்றிற்குப் பாற்கடல் உவமையாம்.  "வாளாற் காய்ந்தே
கடந்தான் பகை வேலை" என்றாற்போல, 'போர்க்கடற்பொறிகள்' என்றார்;
இனி, போர்க்கு அடல் எனப் பதம்பிரித்து, போர்செய்தற்கு வலிமையையுடைய
யந்திரங்களென்றுமாம்; பொறிகள் - நூற்றுவரைக்கொல்லி முதலாகச்
சிந்தாமணியிலும் பிற நூல்களிலுங் கூறப்பட்டவை.  கண் துயில் -
எல்லாப்பொருள்களையும் மனத்தாற்கண்டுநின்றே, வெளிக்கு உறக்கமாகப்
பாவனைகாட்டும் அறிதுயில்.  பன்மலர் - தாமரை முதலியன.
அகழப்படுதலின், அகழியென்று காரணப்பெயர்:  அகழ்தல் - தோண்டுதல்.
விரகு - மாயை; தந்திரம்.                                    (26)

இது - கொடிகளின் காட்சி.

6.

ஈண்டுநீவரினுமெங்களெழிலுடையெழிலிவண்ணன்
பாண்டவர்தங்கட்கல்லாற்படைத்துணையாகமாட்டான்
மீண்டுபோகென்றென்றந்தவியன்மதிற்குடுமிதோறுங்
காண்டகுபதாகையாடைகைகளாற்றடுப்பபோன்ற.

     (இ -ள்.) வியன் - விசாலமான, அந்த மதில் - அந்நகரத்து மதில்களின்,
குடுமிதோறும் - சிகரங்களிலெல்லாம், காண் தகு - காணுதற்குத்தக்க [மிக
அழகிய], பதாகை ஆடை - கொடிச்சீலைகள்,- 'ஈண்டு நீ வரினும் -
இந்நகரத்திற்கு நீ வந்தாலும், எழில் உடை - அழகையுடைய, எங்கள் எழிலி
வண்ணன் - மேகம்போன்ற திருநிறத்தையுடைய எங்கள் தலைவனான
கண்ணபிரான், பாண்டவர்தங்கட்கு அல்லால்-பாண்டவர்களுக்குப்
(படைத்துணை யாவனே) அல்லாமல், படை துணை ஆகமாட்டான் -
(உனக்குப்) போருக்கு உதவியாகமாட்டான்; (ஆதலால், நீ இங்குவருவதிற்
பயனில்லை); மீண்டு போகு - திரும்பிப் போய்விடு, என்று என்று - என்று
பலமுறை தெரிவித்து, கைகளால் தடுப்ப - (தமது) கைகளினால் அசைத்து (த்
துரியோதனனது வருகையை)த் தடுப்பவற்றை, போன்ற - ஒத்தன; (எ - று.)

    துரியோதனன் அந்நகரத்தினருகில் செல்லும்பொழுது, அந்நகரத்து
மதில்களின்மேலுள்ள கொடிகள் காற்றில் இயற்கையிற் பலமுறை அசைதலை
அத்துரியோதனனை நோக்கிநீ இங்கு வாராதே' என்று குறிப்புக் காட்டிக்
கைகளால் மறுத்துத் தடுப்பது போன்றதென வருணித்தார்,
தற்குறிப்பேற்றவணி.கொடிச்சீலையைக் கையாகவும், துவசதண்டத்தை
அந்தக்கைக்கு உடையவனாகவும் கருதுக; பதாகையைக் கைகளாகவும்,
ஆடையைக் கைவிரல்களாகவுங் கொண்டு, மதிலை அவற்றிற்கு
உடையவரெனக் கருதுதலும் அமையும்.  'ஈண்டு நீ வரினும் என்றது'
மற்றையரசர்களுக்குப் போலத் தூது போக்காமல் நீயே  நேரில்வரினும்
என்பது தோன்ற நின்றது.  என்று என்று - அடுக்கு; பலமுறை குறிக்கும். (27)