இது - நகர வருணனை. 7. | அருள்குடியிருக்குங்கண்ணானவதரித்தனனென்றெண்ணித் தரணியின்மீதுவந்துதன்னுடைச்சோதிவைகும் பரமமாஞானபோகப்பதிகுடியிருந்ததன்ன திருநகர்வீதிபுக்கான்சித்தசித்துணர்விலாதான். |
(இ -ள்.) 'அருள் குடி இருக்கும் கண்ணான் - கருணை நிலைத்திருக்கப்பெற்ற திருக்கண்களையுடைய திருமால், அவதரித்தனன் - (கண்ணனாகத்) திருவவதாரஞ்செய்தருளினான்.' என்று எண்ணி - என்று மனத்தில் அறிந்து, தன்னுடை சோதி - தன்னுடைய (கண்ணனது எல்லா அவதாரங்களுக்கும் ஆதிகாரணமான) ஒளி வடிவமான சொரூபம், வைகும் - நிலையாய் எழுந்தருளி யிருக்கப்பெற்ற, பரமம் மா ஞானம் - (எல்லா அறிவுகளினும்) மேலான சிறந்த தத்துவ ஞானத்தாற் பெறுதற்கு உரிய, போகம் - நிரதிசயப்பேரின்பத்தைத் தருகிற, பதி - பதவியான வைகுண்ட நகரம், தரணியின் மீது வந்து - பூமியிலே (இழிந்து) வந்து, குடி இருந்தது அன்ன - குடியிருந்ததைப் போன்ற, திரு நகர் - சிறந்த துவாரகா நகரத்தினது, வீதி - திருவீதியில் - சித்து அசித்து உணர்வு இலாதான் - சித்தின் நிலைமையையும் அசித்தின் நிலைமையையும் அறிதலில்லாத துரியோதனன், புக்கான் - சேர்ந்தான்: (எ - று.) மிகுந்தஇன்பந்தருகிற நகரமாதல்பற்றித் துவாரகையை வைகுந்த நகரம் வந்ததுபோன்றதென்றார்: முதலடி - இதற்குக் காரணங் கற்பித்தவாறு. தற்குறிப்பேற்றவணி. முத்திதரும் நகரம் ஏழனுள் துவாரகை ஒன்றாதலால், முத்திபெறுதற்குக் காரணமாகிய அந்நகருக்குப் பயனாகிய முத்தியுலகத்தையே உவமை கூறுதல் ஏற்கும்; அன்றியும், திருமால் எழுந்தருளியுள்ள நகரத்துக்கு - அத்திருமாலின் திவ்விய நகரந்தானே உவமை கூறத்தகும். "வெற்றவின்பம் விழைவிப்பான் விண்ணுவந்து வீழ்ந்தென, மற்றை நாடு வட்டமாக வைகுமற்றந்நாடரோ" எனச் சிந்தாமணியிலும் நாட்டின் இன்பந்தருதற் சிறப்புக்கு மேலுலகப் பதவியையே உவமை கூறியவாறு காண்க. பிறர்மேற் கண்சென்றவிடத்து அவ்வழியே கருணை நிகழ்தலாலும், கருணைக் குறிப்பு கண்ணின் நோக்கத்தில் காணப்படுதலாலும், 'அருள்குடியிருக்குங் கண்ணான்' என்றது. அவதரித்தல் - அங்கு நின்று இங்கு இழிதல். உயிர் என்றும் நிலைத்திருக்குந் தன்மையையும் உடல் நிலைத்திராததன்மையையும் ஆராய்ந்து அறியாமல், சித்தாகிய உயிருக்கு நற்கதிபெறுதற்கு வேண்டிய நற்றொழில்களுள் ஒன்றையுஞ் செய்தலின்றி, அசித்தாகிய உடம்பை வளர்த்தற்குவேண்டிய பாடுகளையே எப்பொழுதும் பட்டு அலைபவனாதலால், துரியோதனனை 'சித்தசித்துணர்விலாதான்' என்றார். பரமம் ஆம் ஞானம் என்றும் பிரிக்கலாம்; சிறந்ததான அறிவென்க. தரணீயென்னும் சொல்லுக்கு - (எல்லாப்பொருள்களையுந்) தரிப்பதென்று பொருள், தரணியின்மீது வந்து என்பது- 'அவதரித்தனன்' என்றதனோடும் இயைதற்குஏற்றதாம். சித் என்பதற்கு உணர்வுடையதென்றும், அசித் என்பதற்கு உணர்வில்லாத |