வகையால்விளங்குவதாகக்கொள்ளல் பொருந்தும். எல்லாப்பொருளையும் பற்றிநின்றே பற்றற்ற இறைவனென்பார், 'பந்தனையிலாதான்' என்றார்; தனக்கு இயல்பாகக் கரும சம்பந்தமில்லையென்பதனோடு, தனக்குச் சரீரமாகவுள்ள சராசரங்களின் கருமத்தின் தொடர்ச்சியும் பகவானுக்கு இல்லையென்பது இதில் விளங்கும்: உடம்பினுள்ளிருந்து தொழில் செய்விக்கிற உயிருக்கு அவ்வுடம்பின் குணமான கருமை செம்மை பெருமை சிறுமை வளர்ச்சி தேய்வு முதலியவற்றின் தொடர்ச்சி இல்லாதவாறு போல, அச்சீவான்மாவினுள்ளிருந்து தொழில்செய்விக்கின்ற பரமான்மாவுக்கும் அவ்வுயிரின் குணங்களாகிய நல்வினை தீவினை முதலியவற்றுள் யாதொரு சம்பந்தமும் இல்லை யென அறிக. அறிவியாது அழைமின் என்றது - முன்னே அருச்சுனனைக் கண்டு அவனுக்குத்தான் படைத்துணையாம்படி அருள்புரியவேண்டு மென்னுந் திருவுள்ளத்தால் என்க. 'கொள்கை கொளாமை யிலாதான், எள் கலிராகமிலாதான்" "ஈடுமெடுப்புமிலீசன்" "வேண்டுதல் வேண்டாமையிலான்". "பகைநண்பொடில்லான்" என்றபடி இயற்கையில் இறைவன் விருப்புவெறுப்பில்லாதவனாயினும், அவதாரகாரியமான துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலநத்தின் பொருட்டு ஒருவனிடத்தில் விருப்பும் ஒருவனிடத்தில் வெறுப்புங் காட்டின னென்பது, 'பந்தனையிலாதான் யோகத்துயில் வரப் பள்ளிகொண்டான்' என்றதில் தொனிக்கும். யோகத்துயில், அறிதுயில், விழிதுயில், துயிலாத்துயில், பொய்த்துயில் என்பன ஒரு கருத்துடையன. தபநன் என்பதற்கு - (எல்லாப்பொருள்களையும்) தபிப்பவனென்று பொருள். (29) துரியோதனன் ஸ்ரீ கிருஷ்ணபகவான்பள்ளிகொண்ட சயனத்தின் தலைப்பக்கத்தி லிட்ட ஆசனத்திற் சேர்தல். 9. | பொற்புடைப்புனிதன்கோயிற்புறத்தினிலனிகநிற்பச் சற்பவெம்பதாகைவேந்தன்றடையறத்தனிச்சென்றெய்தி உற்பலவண்ணன்பள்ளியுணர்தருகாறுமிட்ட சிற்பவண்டவிசினேறித்திருமுடிப்பக்கஞ்சேர்ந்தான். |
(இ -ள்.) சற்பம் வெம் பதாகை வேந்தன் - பாம்பின் வடிவத்தை யெழுதின பயங்கரமான துவசத்தையுடைய துரியோதனராசன் - பொற்பு உடை புனிதன் கோயில் புறத்தினில் - அழகையுடைய பரிசுத்தமூர்த்தியான கண்ணபிரானது அரண்மனையின் வெளிப்புறத்திலே, அனிகம் நிற்ப - (தனது) சேனை நின்றுவிட - தனி - தான் தனியனாய், தடை அறசென்று எய்தி - தடையில்லாமல் உள்ளே போய்ச்சேர்ந்து, உற்பலம் வண்ணன் பள்ளி உணர்தரு காறும் - கருங்குவளைமலர்போன்ற திருநிறத்தையுடைய அக்கண்ணபிரான் தூக்கம் விழித்தெழிந்திருக்கு மளவும், இட்ட - (அங்கு) அமைத்து வைக்கப்பட்ட, சிற்பம் - விசித்திர வேலைப்பாடமைந்த, வள்தவிசின் - அழகிய (பெரிய) சிங்காசனத்தில், ஏறி - வீற்றிருந்து, திருமுடி பக்கம் சேர்ந்தான் - (கண்ணபிரானது) அழகிய முடியின் பக்கத்தை அடைந்தான்; (எ- று.) |