துரியோதனன் அளவிறந்த செருக்குக் கொண்ட வணங்காமுடி மன்னனாதலால், அங்கு இருந்த ஆசனங்களுள் சிறந்ததொன்றன் மேலேறி உட்கார்ந்து அதனைக் கண்ணனது தலைப்பக்கத்தே சேர்த்திருந்தன னென்க. கீழ், 'அந்தன் மாமதலைவந்தா லறிவியாதழைமின்' என்றதனால், தடையறச் சென்று எய்துபவனானான். இனி, அடிப்பக்கத்தினுஞ் சிறந்த முடிப்பக்கமென்பார், 'திருமுடிப்பக்கம்' என்றாரென்றுங்கொள்ளலாம்; திரு - சிறப்பு. பொற்பு - பொலிவுணர்த்தும் உரிச்சொல். பள்ளியென்னும் படுக்கையின் பெயர், துயிலுக்கு ஆகுபெயர். மயிர் - முடியப்படுதலால், முடியென்று தலைக்குப் பெயர். (30) அருச்சுனன் திருவடிப்பக்கத்தில்வந்துசேர, ஸ்ரீகிருஷ்ணன் முந்துற அவனைக் கடாட்சித்தல் 10. | வந்திலன்விசயனென்றுவான்றுயில்புரிந்தவண்ணல் சிந்தனைசெய்யும்வேளைச்சிந்தையிற்கடியதேரோன் பந்தனையறுக்கும்பாதபங்கயம்பணிந்துநிற்ப முந்துறவிழித்துநோக்கிமுகமலர்ந்தருள்செய்தானே. |
(இ -ள்.) வான் துயில் புரிந்த அண்ணல் - சிறந்த யோகநித்திரையைக் கொண்டருளின கண்ணபிரான், விசயன் வந்திலன் என்று - (இன்னும்) அருச்சுனன் வந்தானில்லையே யென்று, சிந்தனை செய்யும் வேளை - (அருச்சுனனது வருகையை) நினைத்தல் செய்கிற சமயத்திலே, சிந்தையின் கடியதேரோன் - மனோவேகத்தினும் மிக்க வேகமுடைய தேரையுடைய அருச்சுனன், (வந்து), பந்தனை அறுக்கும் பாத பங்கயம் பணிந்து நிற்ப - (சரணமடைந்த அடியார்களுடைய) ஊழ்வினைக்கட்டுக்களை அறுத்தருளுகிற செந்தாமரைமலர்போலும் (கண்ணபிரானது) திருவடிகளைச் சேவித்து (அத்திருவடிப்பக்கத்தில்) நிற்க,-(ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி), முந்துற விழித்து நோக்கி - முற்பட (அவ்வருச்சுனனை) விழித்துப் பார்த்து, முகம் மலர்ந்து அருள் செய்தான் - (மகிழ்ச்சியால்) திருமுகமலர்ச்சி பெற்று (அவன் பக்கல்) கருணைபுரிந்தான்; (எ - று.) 'வந்திலன்விசயனென்று' என்பதுவே, வான் துயில் புரிந்ததற்குங் காரணமாம். மற்றையோரது தூக்கம்போலத் தம்மை மறந்து உறங்கும் உறக்கமின்றி எல்லாவற்றையும் அறிந்து நின்றே ஆலோசனையோடு செய்வது யோக நித்திரை யாதலால், வான் துயிலென அதனைச் சிறப்பித்தார். எவ்வளவு தூரத்திலுள்ள பொருளையும் நினைத்த மாத்திரத்தில் மனம் அப்பொருளினிடத்துச் செல்லுதலால், அது - மிக்க விரைவுக்கு உவமை கூறப்படும்; அதனினும் அதிகமான விரைவையுடைய குதிரைகளைப் பூட்டிய இரதமென்பார், 'சிந்தையிற் கடிய தேர்' என்றார். சிறந்த வலியதொரு தேரும், விரைந்த அழகிய நான்கு வெள்ளைக் குதிரைகளும் காண்டவதகனகாலத்தில் அருச்சுனனுக்கு அக்கினி பகவானால் அளிக்கப்பட்டன என அறிக. "உடற் பகையை வேரறுக்கு மொள்வாள்" ஆதலால், 'பந்தனையறுக்கும் பாதம்' என்றார்; ஊழ்வினைத் தொடர்ச்சியை ஒழித்தலைக் கட்டறுத்தலாக உருவகப்படுத்திய |