தற்கு ஏற்ப,திருவடியை வாளென்னாதது - ஏகதேசவுருவகம். விழித்து நோக்கி அருள் செய்தானென்பது - கிருபாகடாக்ஷம் வைத்தான், கண்ணோட்டஞ் செய்தான் என்றதாம். அருச்சுனன் கண்ணனிடத்தில் மெய்யன்பும் விநயமு முடையவனாதலால், அவன் காற்கடையில் வணங்கி நின்றானென்க. பங்கயபாதம் - முன்பின்னாகத் தொக்குவந்த உவமைத்தொகை; திருவடியாகிய தாமரையென உருவகமாக்கி உரைத்தற்கு இங்கே இயைபின்று; பாதபங்கயஞ் சூடியென வருமாயின் உருவகமாகும். வந்து மாலைப் பணிந்து மன்னையும் வணங்கி நிற்ப, என்ற பாடத்திற்கு - வந்து திருமாலினவதாரமாகிய ஸ்ரீகிருஷ்ணனை வணங்கிப் பின்பு தனக்கு அண்ணனாகின்ற துரியோதன மகாராசனையும் வணங்கி நிற்க எனப் பொருள் காண்க. வந்து மாலைப் பணிந்து பின்னையும் வணங்கி நிற்ப என்று சில பிரதிகளில் மூன்றாமடி. (31) அருச்சுனனால் துரியோதனனதுவருகையை யறிந்து ஸ்ரீகிருஷ்ணன் அவனுக்கு முகமன் கூறுதல். நின்றவனிருந்தவேந்தன்வரவினைநிகழ்த்தநேமிப் பொன்றிகழ்படையோனந்தப்பொய்த்துயிற்பாயனீங்கி மன்றலந்தொடையன்மார்பாவரவெமக்குரைசெயாதென் என்றுரநெருங்கப்புல்லியின்சொலாலுவகைசெய்தான். |
(இ -ள்.) (பின்பு), நின்றவன் - (திருவடிப்பக்கத்தில் வணங்கி) நின்ற அருச்சுனன், இருந்த வேந்தன் வரவினை நிகழ்த்த - (திரு முடிப்பக்கத்தில் பெரிய ஆசனத்தி லேறி) வீற்றிருந்த துரியோதனனது வருகையைச் சொல்லித் தெரிவிக்க, (உடனே), நேமி பொன் திகழ் படையோன் - (சுதரிசனமென்னுஞ்) சக்கரமாகிய அழகு விளங்கும் ஆயுதத்தையுடைய அக்கண்ணன், அந்த பொய் துயில் பாயல் நீங்கி - பொய்யான உறக்கத்தைக் கொள்ளுதற்கு இடமாயிருந்த அந்தப் படுக்கையை விட்டு எழுந்து (மரியாதை செய்து அத் துரியோதனனை நோக்கி), மன்றல் அம் தொடையல் மார்பா - பரிமளத்தையுடைய அழகிய (நஞ்சாவட்டைப்பூ) மாலையைத் தரித்த மார்பையுடைய அரசனே! 'வரவு எமக்கு உரை செயாது என் - (உன்னுடைய) வருகையை நமக்குத் தெரிவியாதது என்ன காரணம்' என்று - என்று சொல்லி,- உரம் நெருங்க புல்லி - (அவனைத் தன்) மார்போடு இறுகத் தழுவி, இன் சொலால் உவகை செய்தான் - இனிய உபசாரவார்த்தைகளைக் கூறி (அவற்றால் அவனுக்கு) மகிழ்ச்சியை உண்டாக்கினான்;(எ - று.) தன்னைக்காண வந்து தனது திருவடிப்பக்கத்தில் நின்று தனது திருவருளுக்குப் பாத்திரனான அருச்சுனன், அப்போது துரியோதனன் வந்திருப்பதை ஸ்ரீ கிருஷ்ணனிடம் தெரிவிக்க, அந்தப் பரமன் தான் யோகநித்திரை செய்த அந்தப் படுக்கையினின்று உடனே எழுந்து 'நீ வந்ததை எனக்கு ஏன் அறிவிக்கவில்லை?" என்று அவன் மனமகிழும்படி இன்சொற் கூறி அவனைத் தழுவிக்கொண்டன னென்பதாம். எம்பெருமானுக்குச் சக்கரம் |