பக்கம் எண் :

வாசுதேவனைப்படைத்துணையழைத்த சருக்கம் 47

முதலியன -பகைவர்களுக்கு அச்சஞ்செய்து ஆயுதகோடியிலும்,
அடியார்களுக்கு அழகு செய்து ஆபரணகோடியிலும் அமைதலால்,
'நேமிப்பொன்திகழ்படை' என்றார். பொன் திகழ்தல் - பொன் போல
விளங்குதலுமாம்.  பொய்த்துயிற் பாயல் - 'பொய்யுறக்கங்கொண்டபிரான்'
என்றார் பெருந்தேவனாரும்.  உரை செய்தல் - சொல்லுதலைச்செய்தல்;
என்றது, சொல்லுதலை முன்பு தூதன் மூலமாகச் செய்திதெரிவியாமை,
பின்புவாயில் காவலாளராலறிவியாமை, அதன்பின்பு தான் நேரிலெழுப்பாமை
இவையெல்லாவற்றையும் அடக்கி, 'உரைசெயாதென்' என்றார்.  கீழ்க்
களங்கமின்றி அருச்சுனனுக்கு முகமலர்ந்து அருள் செய்ததனினும் வேறுபாடு
விளங்க, 'இன்சொலாலுவகை செய்தான்' என்றார்; துரியோதனனுக்கு
மகிழ்ச்சியுண்டாக்கினது, சொல் மாத்திரத்தா லென்க.                 (32)

கிருஷ்ணன் இருவரையும் வந்தகாரியத்தை வினாவ,
இருவரும் தெரிவித்தல்.

12.

இருவிரும்வந்தவாறென்னியம்புதிரென்றுவாச
மருவிரிதுளபமாலைமரகதவண்ணன்கேட்பச்
செருவினீயெமக்குவெம்போர்செய்துணையாகவேண்டும்
பொருவிலோயென்றுகொண்டவ்விருவரும்புகன்றகாலை.

இதுவும், மேற்கவியும் - குளகம்.

     (இ -ள்.) (பின்பு இருவரையும் நோக்கி), வாசம் - பரிமளத்தையும், மரு
- தேனையுமுடைய, விரி - மலர்ந்த, துளபம் மாலை - திருத்துழாய்
மாலையையுடைய, மரகதம் வண்ணன் - மரகத ரத்தினம்போலும்
திருநிறத்தையுடைய ஸ்ரீ கிருஷ்ணன், 'இருவிரும் வந்த ஆறு என் இயம்புதிர்'
என்று கேட்ப - நீங்கள் இரண்டுபேரும் வந்த காரியம் யாது? கூறுவீர்' என்று
(பொதுப்பட) வினாவ - அ இருவரும் - துரியோதனனும் அருச்சுனனும்,
'பொருவு இலோய் - ஒப்பில்லாதவனே! நீ-, செருவில் - (இனி நிகழும்)
போரில், எமக்கு-, வெம் போர் செய் துணை ஆகவேண்டும் - கொடிய
போரைச்செய்யும் உதவியாகவேண்டும்,' என்று கொண்டு புகன்ற காலை -
என்று (ஒருபடிப்படச்) சொன்னபொழுதில் - (எ - று.)- 'சொன்னான்' என,
மேற்கவியில் முடியும்.

     ஒப்பில்லாமைகூறவே, உயர்வில்லாமை தானே விளங்கும்.  இனி, பொரு
விலோய், எனப் பிரித்து.  வினைத்தொகையாக, போர் செய்யும்
வில்லையுடையவனே யென்றுங் கொள்ளலாம்.  திருமாலின் வில்லுக்குச்
சார்ங்கமென்று பெயர்.  கொண்டு - அசை; 'என்றுகொண்டினையகூறி' எனக்
கம்பராமாயணத்திலுங் காண்க:  இது அசையாதலைப் புறனடைச் சூத்திரத்தாற்
கொள்க: இனி, என்றுகொண்டு - என்று கருத்தமைத்து என்றலுமொன்று.
இருவரும் பொருவிலோய் என விளித்தது, தம்மின் வலியனாதலை நோக்கி.
துரியோதனன் வார்த்தையில் எமக்கு - செருக்குப்பற்றிய
உயர்வுத்தன்மைப்பன்மையும், ஆகவேண்டும் - கட்டளைப்பொருள்
வியங்கோளு மாகலாம்.  வாசம் மரு - மிகுந்த வாசனையென