களது) அழகியதலைகளைத் துணித்திடுவேன்', என்றான் - என்று கூறினான்; (எ - று.) இது -தனது வீரவாத முகத்தால் கண்ணனது மகிமையை விளக்கியபடியாம். கண்ணன் வேறொரு தொழிலுஞ் செய்யாது தேர்செலுத்துதல் மாத்திரமே அமையுமென்பது கருத்து. புறவிருளை மாத்திரமே ஒழிக்கவல்ல சூரிய சந்திர அக்கினிய ரென்னும் முச்சுடர்களின் ஒளியெல்லாவற்றினும் மேம்பட்ட ஒளியென்பார், 'செழுஞ்சுடர்' என்றார். சுடர் என்றது - நித்தியமாய் சுவயம்பிரகாசமான ஞானத்தைக் குணமாகவுஞ் சொரூபமாகவும் உடையவனென்றபடி. இங்கே சுடர் என்றது - சுடர் வடிவானவனுக்குப் பண்பாகுபெயரென்றாவது, தேவர்களை அஃறிணையாலுஞ் சொல்லலாம் என்ற நியாயம் பற்றி வந்த அஃறிணை யென்றாவது உடைமைக்கும் உடையதுக்கும் உள்ள அபேதத்தை நோக்கின உபசாரவழக்கென்றாவது கொள்க. "பொய்படுமொன்றோ" என்ற குறளில் [836], பரிமேலழகர் 'ஒன்றோ என்பது - எண்ணிடைச்சொல்' என உரைத்தனராதலால், இங்கும் அப்படியே கொள்ளவும். இயக்கர் முதலியோராயினும் என கை வில்லை வளைத்துத் தலையை துணிப்பேன்: அப்படிப்பட்ட எனக்குப் பூதலத்தரசர், ஒன்றோ - ஒரு பொருளோ? என உரைத்தலும் ஒன்று. இயக்கர் முதலியவர் - பதினெண்தேவகணத்தினுட்பட்டவர். மாயவித்தையை யுடையவர், விஞ்சையர். வெருவரு என்பதை முத்திறத்தார்க்குங் கூட்டுக. விண் - வானம்; இங்கே தேவலோகம்: அங்குள்ளவர், விண்ணோர். வரிசிலை - நீண்ட வில்லுமாம். குழைய வாங்கி - நன்றாகவளைத்து என்றபடி. மணி - கருவியாகுபெயராம். நவரத்தினமிழைத்த கிரீடத்தையுடைய என்றலுமாம். செழுஞ்சுடர் என்றது - இயல்பாகிய அண்மைவிளி; முதல் வேற்றுமையாக்கி, முன்னிலைக்குப் படர்க்கைவந்த இடவழுவமைதியென்று கொள்ளினுமாம்; சுடராகிய நீ என்று கருத்து. (36) ஸ்ரீ கிருஷ்ணன் தான் படையெடுப்பதில்லையென்று துரியோதனனுக்கு உறுதிகூறுதல். 16. | அடர்சிலைவிசயனிவ்வாறிசைத்தலுமமலன்வஞ்சப் படவரவுயர்த்தவென்றிப்பார்த்திவன்றன்னைநோக்கி நடையுடைப்புரவித்திண்டேர்நானிவற்கூர்வதன்றி மிடைபடையேவிநும்மோடமர்செயேன்வேந்தவென்றான். |
(இ -ள்.) அடர் - போர்செய்கின்ற, சிலை - வில்லையுடைய, விசயன் - அருச்சுனன், இ ஆறு - இந்தப்படி, இசைத்தலும் - சொன்னவளவிலே,- அமலன் - குற்றமில்லாதவனான கண்ணபிரான், வஞ்சம் - வஞ்சனையையுடைய, படம் அரவு உயர்த்த - படத்தையுடைய பாம்பின் வடிவத்தை யெழுதிய கொடியை உயர நாட்டின், வென்றி - வெற்றியையுடைய, பார்த்திவன் தன்னை நோக்கி - துரியோதனராசனைப்பார்த்து, 'வேந்த - அரசனே! நான் -, இவற்கு - இந்த அருச்சுனனுக்கு, நடை உடை புரவி திண் தேர் - பலவகை |