பக்கம் எண் :

வாசுதேவனைப்படைத்துணையழைத்த சருக்கம் 51

நடைகளையுடையகுதிரைகளைப் பூட்டிய வலிய தேரை, ஊர்வது அன்றி -
செலுத்துவதேயல்லாமல், மிடை படை ஏவி - நெருங்கின ஆயுதங்களைப்
பிரயோகித்து, நும்மோடு - உங்களுடன், அமர் செயேன் -
போர்செய்வேனில்லை', என்றான் - என்று சொன்னான்;

    அருச்சுனன் 'எனக்கு நீ தேரூர்ந்தாயானாற்போதும், நான்வில்
திறமையால் எனது பகையாக எவர்வரினும் வெல்வேன்' என்று ஸ்ரீ
கிருஷ்ணனை நோக்கிக் கூற, அந்த ஸ்ரீ கிருஷ்ணன் அப்போது
துரியோதனனை நோக்கி, அருச்சுனனுக்குத் தேரூர்வதன்றிப் படை யெடுத்து
நும்மோடு போர்செய்வதில்லை என்று உறுதி கூறின னென்பதாம்.
பாண்டவர்களை மாய்ச்சூதில் வஞ்சனையால் வெற்றி கொண்டவனென்பார்,
வஞ்சவென்றிப் பார்த்திவன்' என்றார்.  அமலன் - துர்க்குணமில்லாதவன்;
கருமத்தொடக்கற்றவன்.  வஞ்சப்பார்த்திவனென இயையும்; வஞ்ச அர வென்று
இயைப்பினும் அமையும்.  அரவு - பாம்பின் வடிவத்தை யெழுதின கொடிக்கு
இருமடியாகுபெயர்.  பிருதிவியை ஆள்பவன், பார்த்திவன், தந்திதாந்தநாமம்.
பிருதிவி - பூமி.  பிருது சக்கரவர்த்தியால் சீர்திருத்தப்பட்டதெனப்
பொருள்பட்டு இதுவும் தந்திதாந்தநாமமாம்.  குதிரைக்குப் பலவகை
நடையுண்டு; ஐங்கதி, நவகதி கூறப்படுதல் காண்க.   நோக்கி என்றானென்க.
                                                          (37)

ஸ்ரீ கிருஷ்ணன் தன்னைச் சேர்ந்தவரையெல்லாம்
படைத்துணையாகக் கொள்ளுமாறு துரியோதனனிடம்
சொல்லுதல்.

17.

எம்மையேயொழியவுள்ளயாதவகுலத்துளோர்கள்
தம்மையுமெம்முனானதாலகேதுவையுஞ்சேரச்
செம்மையோடுதவியாகக்கொண்டுநீசெல்கவென்று
மும்மையுமுணர்ந்தநாதன்முன்னுறப்பின்னுஞ்சொன்னான்.

     (இ -ள்.) (என்று சொல்லி மற்றும்), மும்மையும் உணர்ந்தநாதன் -
மூன்று காலத்துச் செய்கைகளையும் அறிந்த தலைவனான கண்ணபிரான்,
முன்உற - முன்னாக, (துரியோதனனை நோக்கி) எம்மையே ஒழிய உள்ள -
எம்மைத்தவிர இருக்கிற, யாதவகுலத்து உளோர்கள் தம்மையும் -
யதுகுலத்திலுள்ள அரசர்களையும், எம் முன் ஆன தாலகேதுவையும் -
எமதுதமையனான பனைக்கொடியையுடைய பலராமனையும், சேர - ஒருசேர,
செம்மையோடு - மனநிறைவோடு, உதவி ஆக கொண்டு - படைத்துணையாக
அழைத்துக்கொண்டு, நீ செல்க - நீ போவாயாக, என்று - என்று சொல்லி,
பின்னும் சொன்னான் - மீண்டுஞ் சொல்பவனானான், (எ - று.)- அது
மேற்கவியிற் காண்க.

    'செம்மையோடு உதவியாகக்கொண்டு நீ செல்க' என்றது,
பட்சபாதமின்றித் துரியோதனனுக்கு ஒருவகையில் உதவிபுரிவதாகக்
காட்டியபடியாம்.  மும்மையுமுணர்ந்த நாதன் - முன் நடந்தவை, இப்பொழுது
நடக்கின்றவை, - இனி நடப்பவை என்னுந் திரிகால வரலாறுகளையும்
அறிந்தவன்.  இங்கே 'மும்மையுமுணர்ந்த நாதன்' என்றது எத்தனைபேரைத்
துணையாகக்கொண்டாலும்